நற்செயல்களால் விடுதலை பெற்ற மூவர்
அன்புள்ள தம்பி, தங்கைகளே!
குகையில் சிக்கிய மூவர் தாங்கள் செய்த நற்செயல்களினால் எவ்வாறு அதிலிருந்து தப்பித்தனர் என்று நமது உயிரினம் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன உண்மை சம்பவத்தை உங்களுக்கு நான் இப்போது சொல்லப் போகிறேன்.
முன்பொரு காலத்தில் மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு பிரயாணத்தை மேற்கொண்டனர். அவர்களின் பயணம் மலைப் பாங்கான வழியாக இருந்தது. இரவானதும் தங்குவதற்காக ஒரு குகைக்குள் அவர்கள் சென்றார்கள். அப்போது மலைக்கு மேலேயிருந்த ஒரு பாறை உருண்டு வந்து, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டது.
அந்தப் பாறையை அகற்றி வெளியே வர அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் அதை அசைக்கக் கூட அவர்களால் முடியவில்லை. எனவே அவர்களில் ஒருவர் 'நீங்கள் செய்த நல்ல செயல்களை முன்னிறுத்தி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தாலே தவிர நாம் இதிலிருந்து தப்பிக்க முடியாது' என்று சொன்னார்.
இதற்கு இணங்கிய அவர்கள் தாம் அல்லாஹ்வுக்காக செய்த நல்ல செயல்களை முன வைத்து இந்த ஆபத்தில் இருந்து தம்மைப் பாதுகாக்குமாறு ஒரே இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள். அதில்,
முதலாமவர்: 'யா அல்லாஹ்! எனது பெற்றோர்கள் இருவருமே வயோதிகர்கள். நான் கண்ணியப்படுத்துவதற்காக உணவு, பானம் எதையுமே அவர்களுக்குத் தான் முதன் முதலில் வழங்குபவனாக இருந்தேன். ஒருநாள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு நான் நீண்ட தூரம் சென்று விட்டேன். நான் வீடு திரும்பும்போது அவர்கள் இருவரும் தூங்கி விட்டனர். நான் அவர்களுக்கு பால் கநற்து வந்து பார்த்த போது, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி தூக்கத்தை கெடுத்து விடவும் நான் விரும்பவில்லை. அவர்களுக்கு பாலைக் கொடுக்காமல் மற்றவர்களுக்கு பாலை அருந்தக் கொடுக்கவும் நான் விரும்பவில்லை. எனவே பால் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு அவர்கள் கண்விழிக்கும்வரை காத்திருந்தேன். என் குழந்தைகள் அருகில் இருந்து பசியால் அழுதனர். ஆயினும் நான் அவர்களுக்கு பால் கொடுக்கவில்லை.
அதிகாலையில் விழித்து அவர்கள் பாலை அருந்திய பின்னர்தான் ஏனையோர் பாலை அருந்தினர்.
'யா அல்லாஹ்! நான் இதை உன் திருப்பொருத்தத்தை நாடி செய்திருந்தால், எமக்கு ஏற்பட்டிருக்கும் இச்சோதனையிலிருந்து காப்பாற்ற இந்தப் பாறாங்கல்லை அகற்றி வழி ஏற்படுத்திக் கொடுப்பாயாக! என்று துஆ கேட்டார்.
இவ்வாறு அவர் கேட்டதும் அந்தப் பாறாங்கல் சிறிது நகர்ந்தது. ஆனால் அந்த இடைவெளியே எவரும் வெளியேற முடியாமல் இருந்தது.
இரண்டாமவர்: 'யா அல்லாஹ்! என் சாச்சாவிற்கு ஒரு மகள் இருந்தாள். நான் அவளை அதிகம் நேசித்தேன். நான் அவளை அடைய விரும்பினேன். அவள் அதற்கு இணங்க மறுத்தாள். சில மாதங்களுக்குப் பின் ஒரு முக்கியத் தேவையைக் கருதி அவள் என்னிடம் வந்தாள். நான் அவளுக்கு உதவுவதாகவும் அதற்கு என் ஆசைக்கு அவள் இணங்க வேண்டுமென்றும் கூறி அவளின் ஒப்புதலைப் பெற்ற பின் அவளுக்கு 120 தீனார் தங்க காசுகளைக் கொடுத்தேன். குறித்த தினம் வந்து அவள் என்னை நெருங்கியபோது, 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள். திருமணம் என்ற ஷரீஅத்தின் முறைக்கு மாற்றமாக நீ என்னை நெருங்காதே! என்றாள்.
அப்போது அத்தீங்கில் இருந்து நான் ஒதுங்கிக் கொண்டேன். அவளை நான் அதிகமாக காதலித்திருந்தாலும் நான் அவளை விட்டும் ஒதுங்கி அவளுக்கு கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை.
'யா அல்லாஹ் நான் இதை உனக்காகவே செய்திருப்பின், எங்களுக்கு ஏற்பட்ட இச்சோதனையிலிருந்து எம்மைப் பாதுகாப்பாயாக! என்று பிரார்த்தித்தார்.
இவ்வாறு அவர் வேண்டியதும் அந்தப் பாறை சற்று நகர்ந்தது. இருப்பினும் அதில் இருந்து வெளியேற முடியவில்லை.
மூன்றாமவர்: 'யா அல்லாஹ்! நான் சில கூலியாட்களை வைத்து வேலை வாங்கினேன். அவர்களில் ஒருவன் தனக்குரிய கூலியைப் பெறாமல் சென்றுவிட்டான். நான் அவனுக்குரிய கூலியைக் கொண்டு வியாபாரம் செய்து அதன் மூலம் பெரும் இலாபம் பெருகத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்குப் அவன் என்னிடம் வந்து 'அல்லாஹ்வின் அடியானே! என் கூலித் தொகையை கொடுத்து விடு' என்றான். நான் அவனைப் பார்த்து 'இங்கிருக்கும் ஒட்டகம், மாடு, ஆடு போன்ற கால்நடைகளும் உனக்குரியதுதான்' எனக் கூறினேன்.
இதைக் கேட்ட அவன், 'அல்லாஹ்வின் அடியானே!என்னைக் கிண்டல் செய்யாதே! எனக்குரியதைக் கொடுத்து விடு! என்றான். நான், 'உன்னைக் கிண்டல் செய்யவில்லை. இவை அனைத்தும் உனக்குரியதுதான் என்று கூறினேன்.
பிறகு அவன் அவைகளில் எதனையும் விட்டு வைக்காது அத்தனையும் எடுத்துச் சென்றான்.
'யா அல்லாஹ் நான் இதை உனக்காகவே செய்திருந்தால் எங்களை இச்சோதனையிலிருந்து பாதுகாப்பாயாக! என்று வேண்டினார்.
பாறை முழுவதுமாக விலகியது. மூவரும் மகிழ்வுடன் வெளியேறி வந்தனர்.
இச்சம்பவம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
படிப்பினை:
இந்த சம்பவத்திலிருந்து நீங்கள் என்ன படிப்பினையைப் பெறுகிறீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்;.
1. நாம் எந்த செயலை செய்தாலும் அதை அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டும்.யாருடைய முகத்திற்காகவும் செய்யக் கூடாது.
2. நீங்கள் செய்த நன்மையைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலா-உதவி தேடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நிச்சயம் தருவான்.
3.பெற்றோர்களை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டும் என்று படித்திருப்பீர்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். அவர்களுக்கு வீண் தொந்தரவு கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
4. கெட்ட எண்ணத்தை விட்டும் நீங்கி நமது மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
5. பிறர் பொருளுக்கு நீங்கள் ஆசைப் படக்கூடாது. தம்மிடம் வேலை செய்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் பணத்திற்கு ஆசை வைக்காமல் உரியவர்களின் பணத்தை உரியவர்களுக்கு கொடுத்து விட வேண்டும்.
6. முக்கியமாக கவனிக்க வேண்டியது நல்லவர்களிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைக்கும். என்ன செய்வீர்கள்தானே!
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…