நன்றி பாராட்டுதல்.
தம்பி, தங்கைகளே!
செய்த நன்றியை மறந்தவனின் நிலை எப்படி? என்று உங்களுக்கு கண்மனி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன சம்பவத்தை உங்கள் முன் வைக்கிறேன்.
நமது நபியின் மூதாதையரான நபி இப்றாஹீம்அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஸ்மாயீல், இஸ்ஹாக் அலைஹிமிஸ்ஸலாம் என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இஸ்ஹாக் அவர்களுக்கு யஃகூப் என்றொரு மகன் இருந்தார். அந்த யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 12 குழந்தைகள். அவர்களின் பரம்பரையினர்தான் இஸ்ரவேலர்கள்.
இந்த இஸ்ரவேலர்களில் மூன்று மனிதர்கள் இருந்தனர். ஒருவர் தொழுநோயாளி(பார்ப்பதற்கு அருவெறுப்பாக காட்சியளிப்பார்). இன்னொருவர் வழுக்கைத் தலையர். மற்றவர் குருடர்.
இந்த மூவரையும் அல்லாஹ் சோதித்துப் பார்க்க விரும்பினான். எனவே ஒரு வானவரை (மலக்கை) அனுப்பினான்.
வானவர் தொழுநோயாயிடம் கேட்டார், 'நீ எதை விரும்புகிறாய்?' என்று. அதற்கு அவன் சொன்னான், 'நான் அழகிய தோலும், நிறமும் பெற வேண்டும். என்னைக் கண்டு அருவெறுப்படைந்து மக்கள் ஒதுங்கிச் செல்லும் நீங்க வேண்டும்'.
அவருக்கு அழகிய தோலும், அழகிய நிறமும் கொடுக்கப்பட்டது. திடீர் என அவர் அழகியத் தோற்றம் பெற்றவராக மாறிவிட்டார். பின்பு, நீ செல்வத்தில் எதை விரும்புகிறாய்? என்று அந்த வானவர் திரும்பக் கேட்டார். அதற்கு நான் ஒட்டகத்தை விரும்புகிறேன்' என்று அந்த தொழுநோயாளி சொன்னார். உடனே அந்த மலக்கு ஒரு ஒட்டகத்தைக் கொடுத்து இதில் அல்லாஹ் உனக்கு பரக்கத்து செய்வானாக!' என்று பிரார்த்தித்து விட்டு சென்றார்.
பின்னர் வழுக்கைத் தலையனிடம் வந்தார் அந்த மலக்கு,'அவரிடம் நீ எதை விரும்புகிறாய்?' என்று கேட்டார். அதற்கு அந்த வழுக்கைத் தலையன், 'எனக்கு அழகிய முடி வரவேண்டும். மக்கள் என்னை ஏளனமாகப் பார்க்கும் நிலை அகல வேண்டும்' என்றார்.
உடனே அவருக்கு அழகிய முடி வழங்கப்பட்டு வழுக்கைத் தலை மறைந்தது.
பின்பு செல்வத்தில் எதை விரும்புகிறாய்? என்று மலக்கு கேட்டதும், நான் மாட்டை அல்லது ஒட்டகத்தை பெற விரும்புகிறேன் என்று சொன்னார்.
அவருக்கு நிறைமாத சினையுடைய மாடு கொடுக்கப்பட்டது. அதில் அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எனப் பிரார்த்தித்து விட்டு வானவர் மறைந்தார்.
பின்னர் குருடனிடம் மலக்கு வந்து, நீ எதை விரும்புகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன் என் பார்வையை அல்லாஹ் திருப்பித் தந்து நான் மனிதர்களைப் பார்க்க வேண்டும் என்றார்.
வானவர் அவரது கண்ணைத் தடவினார். குருடருக்கு பார்வையை அல்லாஹ் கொடுத்தான். பின் நீ செல்வத்தில் எதை விரும்புகிறாய் என்று கேட்டதும், நான் ஆட்டை விரும்புகிறேன் என்று சொன்னார். குட்டி ஈனத்தக்க ஆட்டைக் கொடுத்து வானவர் அவருக்காக பிரார்த்தித்து விட்டு சென்றார்.
காலம் கடந்தது. தொழுநோயாளியும், வழுக்கைத் தலையரும், குருடரும் செல்வந்தராகி செல்வத்தில் மிதந்தனர்.
வானவர் தொழுநோயாளியிடம் தான் தொழுநோயாளி போல் தோற்றத்தில் வருகை தந்து,
நானோ ஒரு ஏழை. நான் என் பயணத்தை அல்லாஹ்வின் உதவியுடன் அதற்குப் பின் உங்களது உதவியில்லாமல் முடிக்க முடியாது. எனவே உங்களுக்கு அழகியத் தோலையும், அழகிய உடலையும், செல்வத்தையும் தந்த வல்ல அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன். ஒரே ஒரு ஒட்டகத்தை மட்டும் தாருங்கள். அதன் மூலம் நான் பிரயாணம் செய்து கொள்வேன் என்று கேட்டு நின்றார்.
அதற்கு தர முடியாது என்று அந்த (தொழுநோயாளி)செல்வந்தர் கூறியதும், வானவர் நான் உன்னை அறிவேன். நீ முன்பு தொழுநோயாளியாக இருக்கவில்லையா? அல்லாஹ்தானே உனக்கு செல்வத்தை தந்தான்' என்றார்.
அதற்கு அவன், இல்லை. இல்லை. இது பரம்பரையாக வாரிசுச் சொத்தாக பெற்றது. என்றான்.
அதற்கு அந்த வானவர் நீ பொய் சொல்கிறாய் எனில், அல்லாஹ் உன்னை முன்பு நீ எப்படி இருந்தாயோ அப்படியே மாற்றிவிடுவானாக! என்று பிரார்த்தித்தார்.
அவனுக்குரிய அழகிய உடலும், தோற்றமும், செல்வமும் போய் அசிங்கமாக மாறிவிட்டன.
பின்பு வழுக்கைத் தலையனிடம் வந்து தொழுநோயாளியிடம் உரையாடியது போல் உரையாடினார். ஒரு மாடு கேட்டார். இவன் கொடுக்க மறுத்தார். தொழுநோயாளிக்கு பிரார்த்தித்து போல இவனுக்கும் பிரார்த்தித்தார். அவனின் முடியெல்லாம் உதிர்ந்து செல்வங்கள் போய் பழைய நிலைக்கு வந்து விட்டான்.
பின்னர் அந்த வானவர் குருடனிடம் வந்து, நாள் ஒரு ஏழை. என் பயணத்தை அல்லாஹ்வின் உதவிக்குப் பின் உங்களின் உதவியுடன்தான் முடிக்க வேண்டியுள்ளது. உங்களுக்குப் பார்வை மற்றும் இப்பெரும் செல்வத்தை கொடுத்தவனின் பொருட்டால் கேட்கிறேன். நீங்கள், நான் என்பயணத்தை மேற்கொள்ள ஒரு ஆட்டைத் தர வேண்டும் என்றார்.
நானும் குருடனாக இருந்தவன்தான். அல்லாஹ்தான் எனக்குப் பார்வையைத் தந்தான். இதோ என் ஆட்டுப் பண்ணையிலிருந்து உனக்குத் தேவையான அளவுக்கு நீ எடுத்துக் கொள்ளலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ எடுத்த எதனையும் நான் திரும்பக் கேட்க மாட்டேன் என்று அந்த(குருட்டு) செல்வந்தர் பதில் சொன்னார்.
அதற்கு அந்த வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக்கொள். நான் உன்னிடம் முன்னர் வந்த வானவர்தான். உன்னை சோதிக்கவே இப்படிப்பட்ட தோற்றத்தில் வந்தேன். அல்லாஹ் உன்னை ஏற்றுக் கொண்டான். தொழுநோயாளி, வழுக்கைத் தலையன் ஆகியோர் மீது வெறுப்படைந்தான் எனக் கூறிவிட்டு மறைந்துவிட்டார்.
இந்த சம்பவம் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக புஹாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
படிப்பினை:
தம்பி, தங்கைகளே!
1. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பணம், உடல் நலம் என்பவற்றைக் கொடுப்பான், கொடுத்தததை எடுத்து சோதிப்பான்.
2. செல்வம் வந்த பிறகு முன்னர் இருந்த நிலையை மறக்கக் கூடாது. எல்லாம் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்ட வேண்டும். நன்றி மறந்தால் இழிவு நிலையை அடைய நேரிடும் என்பதை பார்த்திருப்பீர்கள். படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…