Home Uncategorized பசித்து இருந்த தலைவர்கள்.
Uncategorized - பொது - July 5, 2011

பசித்து இருந்த தலைவர்கள்.

ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும்  ஹஜ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன் ஹு அவர்களும் ஒரு நாள் தங்கள் வீட்டிலிருந்து நடுப்பகல் நேரத்தில் மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து இருந்தனர்.அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து இந்த கடுமையான நேரத்தில் இங்கு வரக் காரணம் என்ன? என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, தாங்க முடியாத பசியின் காரணத்தால் வந்ததாக கூறினார்கள். இதைக் கேட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக தானும் அதே காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்ததாகக் கூறினார்கள். இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு விஜயம் செய்து இந்த கடும் வெயிலில் இருவரும் எங்கே வந்தீர்கள்? எனக் கேட்டார்கள். பசியின் காரணமாக வந்தோம் என இருவரும் கூறினார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நானும் அதே காரணமாகத்தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன் என்று கூறினார்கள்.

மூவரும் சேர்ந்து அபூ அய்யூப் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரது மனைவியார் வந்தவர்களை வரவேற்று உட்கார வேண்டினார்கள். சற்று நேரத்தில் அபூ அய்யூப் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் இம்மூவரையும் பார்த்து தோட்டத்திற்குச் சென்று பேரீச்சம் பழக்குலை ஒன்றை வெட்டி வந்து அவர்களுக்கு முன்னால் வைத்தார்கள். அக்குலையில் நன்றாகப் பழுத்தப் பழங்களும், பாதிப் பழுத்த பழங்களும், செம்பழங்களும் இருந்தன. இதைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் பழங்களை மட்டும் பறிந்து வந்திருக்கலாமே என்று கேட்க, சில சமயம் பழங்களை விட செம்பழம் அதிக ருசியாக இருக்கும். சிலர் பழங்களை ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் செம்பழங்களை ருசித்து சாப்பிடுவார்கள். அதனால் தான் குலையுடன் கொண்டு வந்தேன் என்று அபூ அய்யூப் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அதன்பிறகு அவர் இறைச்சியும் ரொட்டியும் தயார் செய்து அவர்களுக்கு பரிமாறிhனார். உடனே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ரொட்டியும், சிறிது இறைச்சியும் அபூ அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து எனது அன்பு மகள் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கொடுத்து விட்டு வாருங்கள் என்றார்கள். பின்னர் மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர். இறுதியாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் நாம் கடும் பசியுடன் இருந்தபோது இந்த அறுசுவை உணவை கொடுத்து  நமது பசியைப் போக்கினானே வல்ல அல்லாஹ் அவனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா? என்று கூறினார்கள். அவர்கள் அவ்வாறு கூறும்போது அவர்களது இரு கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…