Home Uncategorized அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?
Uncategorized - பொது - October 25, 2010

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் யார்?

தொகுப்பு:-மௌலானா மௌலவி எம். முஹம்மது நூஹ் பாழில் பாகவி அவர்கள்.

சுன்னத் வல் ஜமாஅத்திலிருந்து பிரிந்து போன பல்வேறு மாறுபட்ட புதுக் கொள்கைக்காரர்கள் தாங்களே உண்மையான சுன்னத்த வல் ஜமாஅத்தினர் என்றும் மற்றவர்கள் எல்லோரும் பித்அத்வாதிகள், ஷpர்க்கைச் செய்பவர்கள் என்றும் வாதிடுகின்றனர். ஷரீஅத்தின் ஆதாரங்கள் அனைத்தும் தங்களுக்கே சாதகமாக இருக்கிறது என்றும் சாதிக்கின்றனர். இத்தகைய புதுக் கொள்கைக்காரர்கள் குர்ஆன் ஆயத்துக்களுக்கும், நபி பெருமானாரின் ஹதீதுகளுக்கும் சுய அபிப்பிராயப்படி பொருள் கொடுத்து பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். இந்நிலையில் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் யார்? என்பதை அலசிப் பார்ப்பதும், உண்மையைக் கண்டுபிடிப்பதும் அவசியமாயிற்று.

பெயர் வந்த வரலாறு

சீர்மிகு ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது ஆசிரியர் அபூ அலிய்யில் ஜுப்பாயி என்ற முஃதஸிலி (மாற்றுக் கொள்கைக்காரர்) தலைவருடன் வாதாடி அவருடைய கொள்கைக் கருத்துக்களை முறியடித்துவிட்டு சுன்னத் என்னும் நபி வழியையும், ஜமாஅத் என்னும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரது வழிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் துவங்கினார்கள். 

அதற்குப்பின் ஆயிரத்திற்கும் மேலான வருஷங்களாக இமாம் அஷ்அரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய சீடர்களுக்கும் அவர்களுடைய கொள்கையை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் 'அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத'; என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.

 

பெயர் விளக்கம்

சுன்னத் என்ற அரபிச் சொல்லுக்கு வழிமுறை, ஆச்சாரம் என்பது அகராதிப் பொருள். இதனுடைய மரபுப் பொருள் 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி லஸல்லம் அவர்கள் மொழிந்த சொற்கள், செய்த செயல்கள், மௌன அனுமதிகள் என்பதாகும்.'

(பத்ஹுல் பாரி 3.17)

ஜமாஅத் என்ற அரபிச் சொல்லுக்கு கூட்டம் என்பது அகராதிப் பொருள்.

'முஸ்லிம் ஜமாஅத்தினரையும் அவர்களின் இமாமையும் பற்றிப் பிடி'
(புகாரி பாகம் 1 பக்கம் 509)

இந்த ஹதீதுகளிலிருந்து தான் சுன்னத் வல் ஜமாஅத் என்பதிலுள்ள 'ஜமாஅத்' என்ற பதம் எடுக்கப்பட்டுள்ளது.
(பைளுல் பாரி ஷரஹுல் புகாரி பாகம் 4, பக்கம் 581)
சங்கைமிகு சஹாபாக்கள், மேன்மைமிக்க இமாம்கள் ஆகியோரையே ஜமாஅத் என்பதின் மரபுப் பொருளாக கருதப்படுகிறது.
(நிப்ராஸ் சரஹு சரஹி அகாயிதின் நஸபீ பக்கம் 22)
எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்திற்கு ஸஹாபா பெருமக்களும், இமாம்களும் எவ்வாறு விளக்கம் அளித்து கருத்துக் கூறினார்களோ அம்முறையை நம்பி ஏற்றுக் கொண்டவர்களுக்கு சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று சொல்லப்படுகிறது.
 

சுன்னத்தும் பித்அத்தும்
 

சுன்னத் என்பதின் எதிர்பதம்தான் பித்அத் என்பதாகும். 'பித்அத்' என்ற அரபிச் சொல்லுக்கு 'புதியதாய்த் தோன்றியது' என்பது அகராதிப் பொருள். இஸ்லாமிய ஆதாரங்களுக்கெதிராக பெருமானாரின் காலத்திற்கு பின் புதிதாகத் தோன்றியவைகளுக்கு 'பித்அத' என்று சொல்வது ஹதீதுக்கலை இமாம்களின் மரபு. (பத்ஹுல் பாரி 9-17)
 

இமாம் ஷhபியீ ரலியல்லாஹு அன்ஹு இதனை இன்னும் சற்று தெளிவாக விளக்குகிறார்கள்:-
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திற்குப்பின் தோன்றிய குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, அஸர் (ஸஹாபாக்களின் நடைமுறை) ஆகியவற்றிற்கு எதிரான கொள்கை செயல்களுக்குத்தான் வழிகெட்ட பித்அத் என்று கூறப்படுகிறது' (ரிஸாலா)
 

குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் ஸஹாபாக்ள், இமாம் எவ்வாறு வியாக்கியானம் செய்தார்களோ அவ்வாறன்றி அதற்கு மாற்றமாக விசுவாம் கொள்பவர்களுக்கு பித்அத்வாதிகள் என்று சொல்லப்படும்.
 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின் மேன்மைமிகக் கலீபாக்கள் பல்வேறு நாடுகளை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். அங்கெல்லாம் இஸ்லாமிய சட்டங்களை செயல்படுத்தினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புனித குர்ஆனுக்கு எவ்வாறு வியாக்கியானம் சொன்னார்களோ அதன் விளக்கமாக எப்படி நடந்து   காட்டினார்களோ அவைகள்தான் ஸஹாபாக்களிடம் சட்டங்களாக இருந்தன. இந்தச் சட்டங்களில் ஒரு துளியும் மாற்றமின்றி தாங்கள் ஆண்ட பகுதிகளில் செயல்படுத்தினார்கள். (பெருமானாரின் 23 ஆண்டு கால வாழ்வு முழுவதும் திருக்குர்ஆனுக்கு தெளிவான விளக்கமாகமாகவே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே) தங்களுக்கு கீழ்வந்த நாடுகளில் ஸஹாபாக்கள் எந்த சட்டத்தை அமல்படுத்தினார்களோ அதுவே இஸ்லாமிய சட்டமாகும். அன்றை நீதிபதிகள் எதனைத் தீர்ப்பாக அளித்தார்களோ அதுவே இஸ்லமிய தீர்ப்பாகும். அன்று நாடுகளை எவ்வாறு ஆண்டார்களோ அதுவே இஸ்லாமிய ஆட்சிமுறை. அவர்கள் தந்த கலாச்சாரமே இஸ்லாமியக் கலாச்சாரம். இவற்றைத்தான் மேதைகளான இமாம்' அபூஹனீபா, இமாம் ஷhபியீ, இமாம் மாலிக், இமாம் அஹ்மது, இமாம் அஷ;அரீ, இமாம் மாதுரீதி என்போர் முறையே சட்டங்களாகவும், கொள்கைகளாகவும் பகுத்து தந்தனர்.
 

நான்கு இமாம்கள் போதித்த மத்ஹபுகளும், பின்னிரண்டு இமாம்கள் காட்டித் தந்த கொள்கை வழிகளும் அருமை ஸஹாபாக்களின் வழிமுறையேயாகும். இது இவ்விமாம்களின் நூல்களை ஊன்றி படிப்பவர்களுக்கு வெள்ளிடை மலை போல வெளிப்படும்.
 

தக்லீது – இமாம்களை பின்பற்றுதல்.

தக்லீது என்பதற்கு 'கழுத்தில் மாலையிடுதல்' என்பது பதப் பொருள். 'ஒருவரை நமப்p அவர் சொல்லை ஆதாரம் கேட்காமல் பின்பற்றுவது' அதன் மரபுப் பொருள். கவனிக்க! தக்லீது என்பது ஒருவர் சொல்லை ஆதாரம் இல்லாமல் பின்பற்றுதல் அல்ல. ஆதாரம் கேட்காமல் பின்பற்றுவதற்குப் பெயராகும்.
இப்படி ஆதாரம் கேட்காமல் தக்லீது செய்வதற்கு ஆதாரம் இருக்கின்றதா? இருக்கிறது. ஸஹாபாக்கள் மார்க்கச் சட்ட விளக்கம் கூறும் பொழுதெல்லாம் அதன் ஆதாரங்களையும் சேர்த்தே கூறியதற்கு ஹதீஸ் சாட்சியங்கள் இல்லை. சில சமயம் ஆதாரம் ஏதும் கூறாமல் வெறும் சட்ட விளக்கம் மட்டும் செய்துள்ளனர். புகாரி பாகம் இரண்டில்' ஒரு ஹதீஸ் இப்படி வருகிறது.
 

அறிப்பவர்: அஸ்லது இப்னு யஸீது ரலியல்லாஹு அன்ஹு.
 

'முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (மதப்)போதகராக(வும்), மதக்கட்டளைகளை ஏவக் கூடியவராக(வும்) எங்கள் எமன் தேசத்திற்கு வந்தார்கள். அப்போது நாங்கள் அவரிடம் 'ஒரு மகளையும், ஒரு சகோதரியையும் விட்டுவிட்டு இறந்துவிட்ட ஒரு மனிதரைப்ப ற்றி (அவரின் சொத்து பங்கீடு விகிதம் பற்றி) கேட்டோம். விட்டுச் சென்ற சொத்தில் ஒரு பாதி மகளுக்கும் மறுபாதி சகோதரிக்கும் என்று தீர்ப்பளித்தார்கள்.
முஅத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்தத் தீர்ப்பு ரஸூலுல்லாஹி ஸல்'லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜீவிய காலத்தில் வழங்கப்பட்டதாகும். (பக்கம் 998)
 

இந்த ஹதீதிலிருந்து தெரிய வரும் உண்மைகளாவன:
 

1.தக்லீது ரஸூலுல்லாஹ்வுடைய காலத்திலும் இருந்திருக்கிறது.
2.குர்ஆன் ஹதீஸை ஆராய்ந்து அதிலுள்ள சட்டங்களை சுயமாக விளங்கமுடியாதவர்கள் மார்க்க ஞானமுள்ளவர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வதைப் பின்பற்ற வேண்டும்.
3.சட்டம் சொல்பவர் நம்பிக்கைக்குரியவராக இருப்பின் அவரிடம் அதற்காகன ஆதாரம் கேட்காமலும் அவர் மேலுள்ள நம்பிக்கையில் அவரின் சொல்லைப் பின்பற்றலாம்.
 

கவனிக்க:
 

ஹழரத் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நேர்மையின் மேலுள்ள நம்பிக்கையால் அவரது தீர்ப்பை எமன்வாசிகள் அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். இதைத்தான் தக்லீது என்று  சொல்கிறோம். முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பை எமன்வாசிகள் அப்படியே பின்பற்றியதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து விளங்கும் இன்னொரு விஷயம்:- குர்ஆன்,     ஹதீஸை ஆராய்ந்து அதிலுள்ள சட்டங்களை சுயமாக விளங்க எல்லோராலும் முடியாது. அப்படி முடியும் என்றிருந்தால் எமன் வாசிகள் ஹழரத் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. சுயமாக தாங்களே குர்ஆன், ஹதீஸைப் பார்த்துப் புரிந்திருக்கலாம்!
 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் ஹழரத் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு போதகராக மார்க்கத் தீர்ப்பு வழங்கும் ஒரு நீதிபதியாக எமன் தேசத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதன் அர்த்தமென்ன? யன் வாசிகள் யாவரும் மார்க்கப் பிரச்சனை ஒவ்வொன்றிலும் முஆதிடம் கேட்டு அவர் சொல்வதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதுதானே! மார்க்க விஷயத்தில் குறிப்பிட்ட ஒருவரையே (அதாவது நான்கு இமாம்களில் ஒருவரையே ) கூட பின்பற்றலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் சிறந்த சான்றாகும்.
 

மேலும், ஒரு விசயம் குறித்து அபூமூஸல் அஷ;அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்) பின்னர் அதே கேள்வி ஹழரத் இப்னு மஸ்ஊது ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவருக்கு அபூமூஸாவுடைய பதிலையும் தெரிவிக்கப்பட்டது. இப்னு மஸ்ஊத் அவர்கள் அபூமூஸா சொன்னதற்கு மாற்றமான பதிலைச் சொன்னார்கள். இவ்விஷயம் அபூமூஸாவுக்குத் திரும்பத் தெரிவிக்கப்பட்டபோது அபூமூஸா அவர்கள் சொன்னார்கள்:
 

'இந்த வல்லுநர்(இப்னு மஸ்ஊத்) இருக்கும் போது என்னிடம் எதையும் கேட்டு வராதீர்கள்.'
அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இக்கூற்றிற்கு பொருள் என்ன? மார்க்க விஷயத்தில் எந்தக் கேள்வி எடுத்தாலும் அதை இனிமேல் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே கேட்டுத் தெரிந்து அதன்படியே நடந்து கொள்ளுங்கள். வேறு யாரிடமும் திரும்ப அதைப் பற்றி கேட்க வேண்டாம் என்பதுதானே. இது தனிநபரை தக்லீது செய்வது கூடும் என்பதற்கான தெளிவான ஆதாரமாயிருக்கிறது.
 

மேலும் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எமன் தேசத்து ஆளுனராக நியமித்து அனுப்பிய சமயத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட கேள்விகளும், முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய பதில்களும் குறிப்பிடத்தக்கவை:
 

பெருமானார் கேட்டார்கள்: முஆதே! (உங்களிடம் வழக்கு வருகிறபோது) நீங்கள் எதை வைத்து தீர்ப்பு சொல்வீர்கள்? முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ்வின் வேதத்தைப் பார்த்து (தீர்ப்புச் செய்வேன்)
 

பெருமானார்: அதில் (நீங்கள் தேடும் விஷயம்) உங்களுக்குக் கிடைக்கவில்லையாயின்?
 

முஆத்: அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்தின்படி(தீர்ப்புச் செய்வேன்)
 

பெருமானார்: அதிலும் கிடைக்க வில்லை எனில்?
 

முஆத்: (அப்படியெனில், என் ஆய்வுப்படி)த் தீர்ப்புச் சொல்வேன்.
 

அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (முஆதைப் பாராட்டும் விதமாக) சொன்னார்கள்' தனது தூதருக்கும், தூதருடைய தூதர் (முஆத்)துக்கும் (நேரிய வழியைக் காட்டி) தௌபீக் செய்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'! (திர்மிதி, அபூதாவூது)
 

இந்த ஹதீஸிலிருந்து தெரிய வரும் உண்மைகள்:
 

1.    குர்ஆனிலோ, ஹதீஸிலோ நமக்குப் புலப்படாத ஒரு விஷயத்திற்கு அவை இரண்டையம் அடிப்படையாகக் கொண்டு ஆய்ந்து அதிலுள்ள விஷயங்களை ஒப்பு நோக்கி (கியாஸ் செய்து) அது மாதிரியான விஷயங்களுக்கு என்ன தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து தீர்ப்பு வழங்கலாம்.
2.    அப்படிச் செய்வது வரவேற்கத்தக்கதும் பெருமானாரின் ஆசியைப் பெறுவதுமாகும்.
3.    அப்படி ஆய்வு செய்து சொல்லப்படுகிற விஷயங்களை பின்பற்றுவது கூடும் என்பது மட்டுமல்ல, பின்'பற்றுவது அவசியமுமாகும்.
தக்லீது பற்றி நாம் சொல்லும்போது இன்று சிலர்தக்லீது தனிமனித வழிபாடு, எந்த வித ஆதாரமுமின்றி கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுதல் என்று திரித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த மேற்கத்திய பாணிக் குற்றச்சாட்டு கண்மூடித்தனமானது, ஆதாரமற்றது.
அவர்களது வசீகரமான ஆனால் குழப்பமான ஒரு கருத்தை சிந்திப்போம்.
 

சமீபகாலமாக குர்ஆன், ஹதீஸை பின்பற்றனும், குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றணும் எனும் கோஷம் மகி உரத்த குரலில் ஒலிக்கக் கேட்கிறோம். இப்படிச் சொல்பவர்கள் தங்களின் கோஷத்திற்கு என்ன அர்த்தம்? அதன் விளைவு என்ன? என்பதை கூடத்  தெரியாமல் இருக்கிறார்கள்.
 

குர்ஆன், ஹதீஸஸைப் பின்பற்ற வேண்டும் என்றால், அதன் அர்த்தம் என்ன? குர்ஆன் ஹதீஸைக் கற்றறிந்து அதிலுலுள்ள சட்ட நுணுக்கங்களை சுயமாகக் கண்டறிந்து அதன்படி நடப்பதா?
 

அல்லது கற்றறிந்த அறிஞர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரப்படி சொல்வதை ஏற்று அதன்படி நடப்பதா?
 

முந்தைய அர்த்தப்படி குர்ஆன், ஹதீஸ் ஆதாரப்படி(?) எழுதுகிறோம் எனச் சொல்லிக் கொண்டு அவர்கள் எழுதுவதை, அது சரிதானா? அப்படிக் குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதா? என்றுகூடத் தெரியாமல் அப்படியே அந்த புதியக் கோஷக்காரர்களைப் பின்பற்றுபவர்களும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றியவர்களாக மாட்டார்கள் என்பது தெளிவு. ஏனெனில் அவர்கள் சுயமாக எதையும் கண்டறியவில்லை.
 

இரண்டாவது அர்த்தப்படி நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. ஏனெனில் நாம் இமாம்கள் சொல்வதை ஏற்கிறோம். அவர்கள் நவீனவாதிகள் சொல்வதை ஏற்கிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசமுண்டு. நமக்கு குர்ஆன்,ஹதீஸ் ஆதாரப்படி சட்டங்களை பகுத்துத் தருபவர்கள் அறிவு ஜீவிகள். குர்ஆன்,ஹதீஸின் ஆழிய ஞானமும், அல்லாஹ்வின் மீது அபரிதமான பயபக்தியும் பொது வாழ்வில் தூய்மையம் நேர்மையும் கொண்ட இமாம்கள்.
 

அவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரப்படி(?) சட்டங்களைச் சொல்லித் தரும் நபர்கள் யார்? அரைகுறை ஞானமும், காசுக்காக சந்தர்ப்பவாதம் பேசும் கொள்கையற்ற கூட்டத்தினர். இந்நிலையில் யாருடைய சொல்லையாவது ஏற்கணும் என்று வருகிறபோது, இமாம்களின் சொல்லை ஏற்பதுதான் புத்திசாலித்தனம்.
 

இவர்கள் சொல்கிற பசப்பு வார்த்தையை வேறொரு முறையில் சிந்திப்போம்.
 

குர்ஆன், ஹதீஸ்படி நடக்கணுமா? அல்லது இந்த இமாம்கள் சொல்கிறபடியா?(என்று அவர்கள் கேட்கின்றனர்) குர்ஆன், ஹதீஸ் ஒருபுறமும் இமாம்களை அதன் எதிர்புறமுமாக வைத்து இமாம்கள் சொல்வது முழுக்க முழுக்க குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமானது என்ற மாயையை ஏற்படுத்தும் வாதம் தற்கால இளைஞர்களைக் கவர்ந்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஏனெனில் குர்ஆன், ஹதீஸ் படி நடக்கணுமா? அல்லது அதற்கு எதிரான இமாம்களின் கூற்றுப்படி நடக்கணுமா? என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் குர்ஆன் ஹதீஸ்படிதான் நடக்கணும். குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான எதுவும் வேண்டாமென்றுதான் எந்த முஸ்லிமும் சொல்வான். அப்படித்தான் சொல்லவும் வேண்டும். ஆனால் கேள்வி இதுவல்ல! பிரச்சனையை திசைதிருப்பி இளைஞர்களை தன்பக்கம் இழுக்கிற வேலை இது. உண்மையில் கேள்வி என்னவெனில், குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாமக்ள் கொடுத்த விளக்கத்தைப் பின்பற்றுவதா? அல்லது நேற்று பெய்த மழையில் முளைத்த இந்தக் காளான்கள்  தரும் சுயவிளக்கத்தை (ஸஹாபாக்கள், தாபியீன்கள் கூற்றுக்கு மாற்றமாக இருந்தாலும்) பின்பற்றுவதா? என்பதுதான். அப்போது இந்த கேள்விக்கு உங்கள் பதில் இதுவாகத்தான் இருக்கும்.! 'குர்ஆனையும், ஹதீஸையும் அதன் தூய வடிவில் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் விளங்கி விளக்கிய வழியைத்தான் பின்பற்ற வேண்டும்.'
 

இந்த இடத்தில் இமாம் ஷhபியின் கருத்து நினைவு கூறத்தக்கது. 'இமாம்கள் சொல்பவைகள் அனைத்தும் சுன்னத்து(பெருமானாரின் முறை)க்கு விளக்கமாகும். சுன்னத் முழுவதும் குர்ஆனுக்கு விளக்கமாகும். இக்கருத்தின் அடிப்படையில் இமாம்களை பின்பற்றுவது குர்ஆனை பின்பற்றுவதேயாகும் என்பதையும் விளங்கிக் கொள்ள முடியும்.
 

இந்நிலையில் தொடநர்ந்து சிந்திக்கும்போது இமாம்கள் தொகுத்ததுத் தந்த சுன்னத் ஜமாஅத்தின் சட்டம், கொள்கையில் முன்மாதிரி சங்கைமிகு ஸஹாபாக்களே என்பதும், அவர்களே சுன்னத் ஜமாஅத்தின் அஸ்திவாரம் என்பதும் புலனாகும்.
 

இஸ்லாமை அறிந்து கொள்ள வழி
 

எனவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்களும் எவ்வாறு குர்ஆனை விளங்கி விளக்கினார்கள். எப்படி  செயலாற்றினார்கள் என்பதை அறிந்து கொள்வதே இஸ்லாமை விளங்குவதற்கான வழியாகும். மாறாக குர்ஆன் ஷரீபை விரித்து வைத்துக் கொண்டு தம் யோசனைக்குத்  தக்கவாறு விவரிப்பதின் மூலம் அல்ல!
 

புனித இஸ்லாமினை பல்வேறு நிலைகளில் சிந்திப்பவர்கள் இருப்பார்கள் என அறிந்த பூரண ஞானியாகிய அல்லாஹுத்தஆலா உண்மையை உணர நேரான வழியை நமக்கு வகுத்ததுத் தந்திருக்கிறான். அதுவே சூரத்துல் பாத்திஹாவுடைய பிற்பகுதியாகும். நேர்வழியை அறியும் பொருட்டே ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹுத்தஆலாவைப் போற்றி புகழ்ந்து எல்லாவற்றையும் அவனிடமே ஒப்படைத்து மாபெரும் பணிவுடன் இறைஞ்சுகிறார்கள். 'அல்லாஹ்வே! நீ எங்களை நேரான பாதையில் ஆக்கியருள்வாயாக! நேரான பாதையை அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு பிரார்த்திக்கச் சொன்ன அல்லாஹ் அதை அ:டுத்து 'உன் அருளைப் பெற்றவர்களது மார்க்கத்தில்' என்று சொல்லும்படியும் சொல்கிறான்.
 

இதிலிருந்து அல்லாஹுத்தஆலாவின் அருளைப் பெற்றவர்கள் நடந்தேறிய மார்க்கமே செவ்வையானது என்பதை நாம் உறுதியாக அறிகிறோம். ஆனால் அவனது அருளைப் பெற்றவாகள் யார் என்ற சந்தேகம் இவ்விடத்தில் எழுகிறது. அந்த சந்தேகத்தையும் மற்றொரு இறைவசனம் மூலமாக அல்லாஹுதஆலா நிவர்த்தி செய்திருக்கிறான். அவ்வசனம் பின்வருவதாகும்.
 

'அவர்கள் நபிமார்கள், சித்தீக்கீன்கள், ஹுஹதாக்கள், ஸாலிஹீன்கள்' (4:69)
 

மேலும் சூரத்துல் பாத்திஹாவில் நேரான பாதை எவருடையது என்பதை அல்லாஹுத்தஆலா 'அவனுடைய கோபத்திற்குள்ளாகதவர்களுடைய வழி' என்று விளக்கிச் சொல்கிறான். அவனுடைய கோபத்திற்குள்ளாகாதவர்கள் என்றால் அவனுடைய திருப்திக்குள்ளானவர்கள் என்பது கருத்து. இப்பொழுது அல்லாஹ்தஆலாவுடைய திருப்திக்குள்ளானவர்கள் யார்? என்பதை கவனிப்போம். அதையும் அல்லாஹுத்தஆலாவே பிறிதொரு வசனத்தில் தெளிவுபடக்கூறுகிறான்.
 

முஹாஜிர்களிலும், அன்சாரிகளிலும் எவர் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் கொண்டு விசுவாசங் கொண்டார்களோ அவர்களையும்(ஸஹாபா பெருமக்களையும்) ஈமானுடனும், உள்ளத் தூய்மையுடனும் அந்த ஸஹாபாக்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தி அடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைகின்றனர்.
 

ஸஹாபாக்களைத் தொடர்ந்தவர்களில் என்ற  சொல்லில் தாபிஃகள், தபஉத்தாபியீன்களான நான்கு மத்ஹபுகளின் இமாம்கள், ஸூபிய்யாக்களான ஆத்மஷhனிகள், முஹத்திதீன்கள், முபஸ்ஸிரீன்கள் முதலியோர் சேருவர்.
 

அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்ற (கோபத்திற்குள்ளாகாத) இவர்களின் வழிதான் நேரான வழி என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
 

ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டுமா?
 

ஸஹாபாக்களைப் பின்பற்றுகிறவர்களுக்குத்தான் சுவர்க்கத்தை சித்தப்படுத்தியிருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். (9:100) இதிலிருந்து, சொர்க்கம் செல்ல ஸஹாபாக்களையே பின்பற்ற வேண்டும் என்பது புலனாகிறது.
 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னத் பின்பற்றத் தகுந்தது என்றால் ஸஹாபாக்களின் முன்மாதிரியை ஒப்புக் கொள்ளுதலும், அவர்கள் நடந்த காட்டிய வழியில் செல்வதும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சுன்னத்தில் (வழிமுறை ஏவல்) உள்ளதுதான்.
 

இதுகுறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதைக் கவனிப்போம்.
 

'உங்களில் யாராவது என் காலத்திற்குப்பின் வாழந்திருந்தால் மார்க்கத்தில் ஏராளமான அபிப்பிராய வேற்றுமைகளைப் பார்க்க வேண்டியது ஏற்படும். அந்நேரத்தில் என்னுடைய சுன்னத்தையம், குலபாஉர் ராஸிதீன்களுடைய சுன்னத்தையும் பலமாகப் பற்றிப் பிடியுங்கள்.'

(திர்மிதி, அபூதாவூது, அஹ்மது, இப்னுமாஜா, மிஷ;காத் பக்கம் 30)
 

இங்கு என்னுடைய சுன்னத் என்று மட்டும் கூறாமல் குலபாஉற் றாஷிதீன்களுடைய சுன்னத்தையும் சேர்த்துக் கூறியிருப்பது மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
 

மேலும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள், 'என்னுடைய தோழர்கள் நட்சத்திரங்களுக்கு சமமானவர்கள். அவர்களில் யாரை நீங்கள் தொடர்ந்தாலும் நேர்வழியைப் பெற்று விட்டீர்கள்.'
 

(ரஸீன்-மிஷ;காத் பக்கம் 554)
 

எனவே ஸஹாபாக்களை ஒதுக்கிவிட்டு செல்பவர்களுக்கு ஒருபோதும் நேர்வழி கிடைப்பது சாத்தியமாகாது. இது மறுக்க முடியாத உண்மையாகும். இந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பதே சுன்னத் வல் ஜமாஅத்தின் குறிக்கோளாகும்.

ஸஹாபாக்கள் பற்றிய கொள்கை விளக்கம்.
 

பிரபல ஹதீதுக் கலை வல்லுனர் ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது '.ஸாபா' என்னும் நூலின் முன்னுரையில் (பிரிவு 3, பக்கம் 6) சுன்னத்வல் ஜமாஅத்தினரின் கொள்கையில் ஸஹாபாக்களின் அந்தஸ்த்து பற்றி விளக்கம் தந்துள்ளார்கள். அதன் சுருக்கம் கீழே தரப்படுகிறது:
 

'எல்லா ஸஹாபாக்களும் நேர்மையானவர்களாகும். இது சுன்னத் வல் ஜமாஅத்தின் ஒன்றுபட்ட கருத்தாகும். இதில் பித்அத் வாதிகள் சிலரைத் தவிர வேறு யாரும் மாறுபடவில்லை.' பிரசித்திப் பெற்ற ஹதீது ஆய்வாளர் அல்கதீபு (அபூபக்கர் அல்பஃதாதி) ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது நூலான 'கிபாயாவில்' இது விஷயமாகக் கூறியிருப்பதாவது:- ஸஹாபாக்களின் நேர்மை நிரூபணமானதாகும். அல்லாஹ் அவர்களைத் தூய்மையானவர்களாகவும், நீதிமான்களாகவும் தனது மறையில் அறிவித்து தனக்கு உகந்த நல்லடியார்களாக அவர்களை தேர்வு செய்திருப்பதின் மூலம் இதை நம்மால் அறிய முடிகிறது.
 

ஸஹாபாக்களின் தூய நிலை பற்றிக் கூறும் வசனங்களாவன:-
 

'முஹாஜிர், அன்ஸாரி(ஸஹாபாக்)களைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைகின்றான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைகின்றனர். (9:100)
 

அந்த மரத்தடியில் உம்மிடம் (கைகொடுத்து) வாக்குறுதி செய்த விஸ்வாசிகளைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தி அடைந்தான். அவர்களின் இதயத்துள்ளிருந்த (உண்மையான தியாக நோக்கத்)தை நன்கறிந்தான். (18:48)
 

 

தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பெருட்களை விட்டும் (அக்கிரமமாக) வெளியேற்றப்பட்ட ஏரை முஜாஹிர்கள் அல்லாஹ்வுடைய அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையம் அடையக் கருதியதால் (தங்களுடைய உயிரையும், பொருட்களையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உதவி செய்து  கொண்டிருக்கிற இவர்கள் தன் உண்மையான (விசுவாசிகளா)வர். (59:8)
 

 

ஆயினும் அல்லாஹ் விசுவாசத்தின் மீதே உங்களுக்கு அன்பைக் கொடுத்து உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான். அன்றி நிராகரிப்பையும் பாவத்தையும், மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கி வைத்தான். இத்தகையோர்தான் நேரான வழியில் இருக்கின்றனர்.
 

(மிகச் சிறந்த இவ்வர்ணிப்பை அடைவது) அல்லாஹ்வினுடைய அருளுமாகும். அல்லாஹ்(யாவையும் நன்கறிந்தோனும் ஞானமுடையோனுமாக இருக்கிறான். (46:7,8)
 

 

அவன் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்கு மிகத் தகுதியுடையவர்களாகவும், அதனை அடையவேண்டியவர்களாகவும் இருந்தனர். (26:26)
 

இன்னும் ஏராளனமான வசனங்களும் அதிகமான எண்ணிக்கையில் பிரபலமான ஹதீஸ்களும் மிகுதம் உண்டு. அவைகளைக் கூறுமின் பேச்சு நீளும்.
 

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களனைத்தும் அவர்களின் யோக்கியாம்ஸத்தை உறுதி செய்கின்றன. அல்லாஹ்வே அவர்களின் நேர்மைக்கு சான்று வழங்கி இருக்கும்போது படைப்புகளில் வேறு எவரின் சாட்சியமும் தேவையில்லை. ஒருவேளை அல்லாஹ்வும் அவனது ரஸூலும் இவர்களின் நேர்மையைப் பற்றி எதுவும் சொல்லி இராவிட்டாலும் கூட இது அவசியப்பட்டிருக்காருது. காரணம் இஸ்லாத்திற்காக அவர்கள்  செய்து இருக்கிற அளப்பெரிய சேவை சொந்த நாட்டைத் துறந்து தங்கள் உடல், பொருள்,ஆவி அனைத்தையம் தியாகம்' செய்த அர்ப்பண வாழ்வு, சமய விரோதியாக இருப்பது தந்தையானாலும், தனயனானாலும் சொஞ்சமும் தயங்காமல் அவர்களையும் எதிர்த்துப் போராடி வெட்டி வீழ்த்திய உளப்பூர்வமான மெய் விசுவாசம், சுயநலமில்லா பொது நலம், உள்ளத்தில் ஆழமான வேரூன்றிய திட ஈமான் ஆகிய இந்த வரலாற்று உண்மைகளே அவர்களது ஒழுக்கத்தையும், தூய்மையையும் நேர்மையையும் பறைசாற்ற போதுமானவையாகும்.
 

ஹதீஸ் கலை பேரரிஞர் அபூமுஹம்மத் இப்னு அல்அஸ்மு அவர்கள் கூறுகிறார்கள்:
'ஸஹாபாக்கள் அனைவரும் சுவர்க்கவாசிகளாவார்கள். இதில் கருத்துவேறுபாட்டிற்கு இடமில்லை'.
 

இதற்கு ஆதாரமாக வருகிற வசனங்கள்:
 

'சதா நீர் அருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அவர்(ஸஹாபாக்)கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள்)களுக்கென சித்தப்படுத்தி வைத்திருக்கிறான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இது மகத்தான பெரும் பாக்கியமாகும்.'    (9:100)
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நிச்சயமாக அமல்கள் எழுதப்பட்டுவிட்டனவோ அவர்கள் அ(ந்நரகத்)திலிருந்து வெகுதூரமாக இருப்'பார்கள்.'   (21:101)
 

படைப்பினங்களில் நபிமார்களுக்கு அடுத்து சிறந்த அந்தஸ்தைப் பெற்றவர்கள் ஸஹாபாக்களேயாகும். இதை 'பஸ்ஸால்' அவர்கள் தனது முஸ்னதில் (நம்பகமான அறிவிப்பாளர் தொடர்புடன் ஜாபிர் வழியாக ஸயீதிப்னு முஸைய்யிபை அறிவிப்பாளராகக் கொண்டு) ரிவாயத்துச் செய்கிற ஹதீது தெளிவுப் படுத்துகிறது.
 

திட்டமாக அல்லாஹுத்தஆலா என்னுடைய ஸஹாபாக்களை நபிமார்கள், முர்ஸலீன்கள் தவிர்த்துண்டான மற்ற மனு, ஜின் இனத்தவர் அனைவரிலும் சிறந்தவர்களாக தேர்வு செய்திருக்கிறான்.
 

இதுவரை நாம் கூறியதுதான் முஸ்லிம் அறிஞர்களின் ஸஹாபாக்கள் பற்றிய  கொள்கை கோட்டுபாடுகளாகும். பின்னர் இமாம் கதீபு அவர்கள் அபூபக்கர் அர்ராசி சொன்ன ஓர் செய்தியை அதற்கான ஆதாரத்துடன் அறிவிக்கிறார்கள்:
 

'நீ ரஸூலுல்லாஹ்வுடைய ஸஹாபாக்களில் யாரையேனும் குறைகாணும் மனிதரைக் கண்டால் அவன் ஒரு ஸின்தீகு; (இறை நம்பிக்கையை மறைத்து இறை மறுப்பை வெளிப்படுத்துபவன்) என்று விளங்கிக் கொள். ஏனெனில் அல்லாஹ்வுடைய ரஸூல் உண்மை(யானவர்)குர்ஆன்(உண்மையானது) இந்த ஷரீஅத் முழுவதையும் நம்வரை வந்து சேர்த்தவர்கள் ஸஹாபாக்கள். அவர்களின் மீது குறை கூறி அந்த உத்தமர்களி; தூய்மையையே களங்கப்படுத்துவோர் நமக்கும், ஷரீஅத்திற்குமிடையேயான பாலத்தையே தகர்த்தெறிபவர்களாவார். இது குர்ஆன் மற்றும் சுன்னத்தை அழிப்பதற்கு சமமாகும். இ(த்தகைய)வர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் ஸனனாதிகா வேடதாரிகள் என்பதில் சந்தேகமில்லை.
 

தராவீஹ் தொழுகையில் உமரிப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கருப்பு மார்க்கட் நடத்தினார்க்ள. உத்மானிப்னு அப்பான் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஜும்ஆ பாங்கில் தன் கைவரிசையைக் காட்டினார்கள். அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் கையிலிருந்து ஹதீதுகளைப் போட்டார்கள் என்றெல்லாம் கூறி ஸஹாபாப் பெருமக்களை குறைகூறுவோர் முஸ்pமாக இருக்க முடியாது. இப்படி ஸஹாபாக்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பவர்களை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையா கண்டனம் செய்துள்ளனர்.
 

'என்னுடைய ஸஹாபாக்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். எனக்குப் பின்னால் உங்களுடைய தாக்குதலுக்கு இலக்காக அவர்களை ஆக்கிக் கொள்ளாதீர்கள். எனவே யார் அவர்களை நேசித்தார்களோ அவர் என்மீதுள்ள நேசத்தின் காரணமாகவே அவர்களை நேசித்திருப்பார்கள். யர் அவர்களை வெறுத்தார்களோ அவர்கள் என் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே அவர்களை வெறுத்திருப்பார்கள். அவர்களை வேதனை படுத்தியவர்கள் என்ளை வேதனைப்படுத்தியவர்களாவார்கள். என்னை வேதனைப் படுத்தியவர்கள் அல்லாஹ்வை வேதனைப் படுத்தியவர்களாவார்கள். அல்லாஹ்வை வேதனைப் படுத்தினால் அல்லாஹ் அவரை வெகு சீக்கிரமே பிடித்து வேதனை செய்வான்'.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு முஅப்பல் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.
 

ஸஹாபாக்களை தாக்குவது ரஸூலுல்லாஹ்வையே ஏன்? அல்லாஹ்வையே தாக்குவது போன்றதாகும் என்ற இந்த ஹதீஸ் ஆய்ந்துரைத்தக்கது.
 

'என்னுடைய ஸஹாபாக்களை வசைபாடாதீர்கள். ஏனெனில் திட்டமாக உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (இறைவழியில் செலவு செய்தாலும் அவர்களில் (ஸஹாபாக்களில்) ஒருவர் ஒரு (சிரங்கை அளவு அல்லது அதன் பாதி அளவு செய்த (தர்மத்திற்கு) ஈடாகாது.'
—–புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பாகம் 2, பக்கம் 552
'எனது ஸஹாபாக்களை ஏசுபவனை நீங்கள் கண்டால் (அவனைப் பார்த்து) உங்களில் கெட்டவர் மீதுஅல்லாஹ்வின் சாபம் உண்டாகுக, என்று சொல்லுங்கள்.
 

நவீனவாதிகளின் அறியாமையும் குழப்பமும்.
 

ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்திருக்கிறார்களா? என்ற வினாவை எழுப்பி இல்லை என்று பதில் கிடைத்தால், 'அவ்வாறாயின் அது பித்அத். எல்லா பித்அத்களும் தீய வழிகள். தீய வழிகள் எல்லாம் நரகத்தில்தான்' (உமர்,உதுமான் ரலியல்லாஹு அன்ஹுமா நரகத்தில்தான்) என்று நவீனவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். இது பெரிய அபாயமாகும். பித்அத் என்பதின் மரபுப் பொருளை (இஸ்திலாஹிமஃனா அர்த்தம்)விளங்காமல் இருப்பதே இதற்கு காரணம். குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, அதர் (ஸஹாபாக்களின் நடைமுறை) ஆகிய நான்கு ஆதாரத்திற்கும் எதிராக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின் தோன்றிய 'ஷரீஅத்' என்று கருதப்படும் செயல்களே பித்அத்(தானவை) என்று முன் விவரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஒரு செயலுக்கு பித்அத் என்று பெயர் சொல்ல வேண்டுமெனில் ஸஹாபாக்களின் நடைமுறையையும் ஆராய வேண்டும். மேலும் அந்தச் செயல் மேற்குறிப்பிட்ட குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, அதர் என்ற நான்கு ஆதாரங்களுக்கும் முரண்பட்டுள்ளது என்பதும் ருசுவாக வேண்டும் என்பதும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 

குழப்பவாதிகள் பித்அத் என்பதற்கு பெருமானாரின் காலத்தில் இல்லாதது என்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர்இ ஸஹாபாக்களை ஏற்க மறுக்கின்றனர். ஸஹாபாக்களின் அதர் உட்பட  உள்ள நான்கு ஆதாரங்களுக்கும் எதிரிடையாக இருந்தால்தான அது பித்அத் என்பதை அவர்'கள் அறியவில்லை. இதனால்தான் குழப்பங்கள் தலை தூக்குகின்றன.
 

ஸஹாபாக்களும், சான்றோர்களும் சென்ற பாதையே சரியான பாதை:
 

சங்கைமிகு ஸஹாபா பெருமக்ககளுக்கு மாபெரும் மதிப்பும் பதவியும் இருந்திருக்கின்றன என்பது குர்ஆன், ஹதீஸைக ஆராய்ந்தால் நன்கு புலப்படும்.
 

ஹக்கையும், பாத்திலையும் (மெய்யையும், பொய்யையும்) கலந்து, ஆயத்து ஹதீதுகளுக்கு  பொருளும், கருத்தும் கூறுகின்ற ஒரு வகுப்பினர் இன்று நம்மிடையே உள்ளனர். இந்தக் கலப்பு சித்தாந்தம் இந்த துர்ச்செயல், பல நூற்றாண்டுகள் பழமையானதாகும். முந்தய சமுதாயங்களிலும் இந்த துர்ப்பழக்கங்கள் நடைமுறையில் இருந்திருக்கிறது. இந்தப் பழக்கமுடையவர்கள் காலப்போக்கில் பற்பல குழுக்களாக உருவெடுத்துள்ளனர். இதுபற்றி நபிகள்  பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருப்பதை சிந்திப்போம்.
 

'உங்களுக்கு முன் சென்றவர்கள் 72 வகையினராகப் பிரிந்தனர். நீங்கள் 73 வகையினராகப் பிரிவீர்கள்.' –அல்ஹதீஸ் திர்மிதி.
எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' அவர்களின் சமுதாயத்திலும் மார்க்க விஷயர்தில் சுய அபிப்பிராயத்தை செலுத்துபவர்கள்-பிரமாணங்களுக்கு துர்வியாக்கியானம் செய்பவர்கள் பல குழுக்களாக உருவெடுப்பார்கள் என்பதை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்க்க தரிசனம் செய்திருப்பதை இங்கு பார்க்கிறோம்.
 

தொடர்ந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது 'உரு வகுப்பினரைத் தவிர மற்ற 72 வகுப்பாரும் நரகத்திற்குரியவர்கள்' என்'றார்கள். இதனைக் கேட்ட ஸஹாபா பெருமக்கள் 'சுவனத்திற்கு உரித்தான அந்த வெற்றிக்குரிய வகுப்பினர் யார்?' என்று வினவினார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய பதில் மிக முக்கியமானது. இதை நாம் மிக்க கவனத்துடனும் ஆழ்ந்த சிந்தனையுடனும் விளங்கி மனதில் நிறுகத்திக்கொள்ள வேண்டும்.
 

ஸஹாபாக்களின் கேள்விக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள்: 'நானும் என் சஹாபாக்களும் கொண்டிருக்கிற கொள்கையைப் பற்றிப்பிடிக்கிறவர்கள்'. (திர்மிதி)
 

இஸ்லாமின் மூலப்பிரமாணம் தூய குர்ஆன் ஷரீபேயாகும். அதன் விரிவுரையாளரும், அதனை செயல்படுத்திக் காட்டியவர்களும் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களேயாவார்கள். அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க திருக்குர்ஆனாகவே இருக்கின்றது. அந்த பரிசுத்தமான வாழ்க்கை முறையை பின்பற்றி நடக்க கடமைப்பட்டவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களி;ன் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று, பின் தலைமுறையினருக்கு எப்படி விளங்கும்?
 

மகான்களான ஸஹாபாக்கள் பெருமானாரின் வாழ்க்கைமுறையை சிறிதும் பிசகாமல் அப்படியே பின்பற்றினார்கள். அவர்களைப் பின்பற்றி நடப்பதின் மூலம்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைமுறையை நாமும் மேற்கொள்ள முடியும். ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஒன்றாக இருந்து அவர்களது நடைமுறைகளை இடைவிடாது கவனித்து தம் வாழ்க்கiயிலும் அவற்றை ஜொலிக்கச் செய்ய ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையையே கொண்டிருந்தார்கள். அந்த ஸஹாபா பெருமக்கள் இல்லாமல் நமக்கு இஸ்லாம் எங்கிருந்து கிடைக்கும்? அதனால்தான் (ஸஹாபாக்களை தவிர்த்து இஸ்லாமில்லை என்பதால்தான்)
 

'நானும் என் ஸஹாபாக்களும் மேற்கொள்கின்ற வழிமுறைதான் ஈடேற்றத்திற்குரியது' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்'கிச் சொன்னார்கள்.
 

மாபெரும் மதிப்பையும் சிறப்பையும் அல்லாஹுதஆலா ஸஹாபாக்களுக்கு கொடுத்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் 9:100ல் கண்டோம்.
 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸஹாபாக்களுக்குள்ள பெருமதிப்பை விளக்கிச் சொல்லி இருக்கிறார்கள் என்பதை மேலே கண்;டோம். ஆனால் இந்த நவீனவாதிகளோ ஸஹாபாக்களை சாதாரண மனிதர்களாகவே கருதுகின்றனர். இது ஒரு குருட்டுத் திமிராகும்.
 

நவீன வாதிகளில் ஒருவர் சொல்கிறார். 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு எந்த மனிதரையம் ஹக்கின் உரை கல்லாக ஆக்கிக்க கொள்ள கூடாது. யாரையம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக கருதவும் கூடாது'. இந்த வாக்கியத்தின் மேலோட்டமான கருத்து விபரீதமாகத் தோன்றாது. என்'றாலும் இதன் உள்நோக்கம் வார்த்தையில் சங்கைமிகு ஸஹாபாக்களும் சத்திய சீலர்களான இமாம்களும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.
 

ஸஹாபாக்களையும், இமாம்களையும் ஒதுக்கி விடவேண்டும் என்ற கருத்தை இவ்வாக்கியம் வெளியிடுகிறது.
 

ஆனால் ஸஹாபாக்களையும், இமாம்களையும் ஒதுக்கிவைத்து விட்டு இஸ்லாமை விளங்க முடியும் என்ற பேச்சு எத்தகைய மூடத்தனமானது என்பதையும், ஸஹாபாக்களையும் இமாம்களையும் பாலமாகக் கொண்டுதான் நாம் இஸ்லாமை விளங்கிக் கொள்ள முடியும். அதுவே இஸ்லாமை அதன் தூய வடிவில் காண்பதற்கான வழி என்பதையும் நாம் தெளிவாகவே மேலே விவரித்திருக்கிறோம்.
 

மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நவீனவாதியின் கருத்திலிருந்து பெருமானாரைத் தவிர்த்து மற்றவர்களையும் (ஸஹாபாக்களையும் கூட) எப்படியும் விமர்சிக்கலாம், அவர்களைப் பற்றி எப்படியும் கருத்துக் கூறலாம் என்ற அபாயகரமான அனுமதி வழங்கப்படுகின்றது. சஹாபாக்களின் அந்தஸ்த்தை அறிந்து அவர்கள் விஷயத்தில் முஸ்லிம்கள் கைகொள்ள வேண்டிய எச்சரிக்கையுணர்வு இங்கே சிதறடிக்கப்படுகிறது. சஹாபாக்களின் விஷயத்தில் எத்தகைய எச்சரிக்கையுணர்வு கொள்ள வேண்டும். அப்படியில்லாதபோது என்ன விளைவு ஏற்படும் என்பதை நாம் அறிந்திருக்கிற பல ஆயத்து, ஹதீதுகள் விபரிக்கின்றன.

 

யுகமுடிவு காலம்வரை இந்த உண்மை மார்க்கம் நிலைபட வேண்டும் என்ற எண்ணத்தில் ஸஹாபாக்கள் தம் சீடர்களான தாபியீன்களுக்கும், தாபியீன்கள் தம் சீடர்களான தபஉத்தாபியீன்களுக்கும் குர்ஆன் ஹதீதுகளின் விளக்கங்களை பூரணமாகக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள்தான் நம்முடைய முன்மாதிரிகள். அவர்கள் நடந்து காட்டியதுதான் சரியான இஸ்லாம். அவர்கள் வாழ்ந்த காலத்தைத்தான் 'உத்தம காலகட்டம்' என்று பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.
'காலங்களில் மிகச் சிறந்தது என் காலம். அடுத்தது எனக்குப் பின்னால் உள்ளவர்கள் காலம். அதற்கும் அடுத்தது அவர்களுக்குப் பின்னால் வருபவர்களது காலம்'. (புகாரி, முஸ்லிம்)
 

சஹாபாக்களும், தாபியீன்களும் தங்களது சீடர்களுக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுத்தது போலவே தபஉத்தாபியீன்கள் மார்க்கச் சட்டங்கள் ,கொள்கைகள் அனைத்தையும் தமது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறே குருசீடர் பரம்பரையாக பல்வேறு தலைமுறைகளைத் தாண்டி இன்று நம்மிடம் வந்துள்ளது. இந்தப் பரம்பரையில் உள்ளவர்கள் மேதைகளும்,மகான்களும்,கண்ணியமிக்கவர்களும்,ஆழ்ந்தபக்தியுடையவர்களும்,பேணுதல்மிக்கவர்களுமாவார்கள். எவ்வித ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் புனித மார்க்கத்தை அதன் தனி உருவத்தோடு பின் தலைமுறையினருக்குச் சமர்ப்பித்து விட்டார்கள். இந்த அறிஞர் பரம்பரையைத் தான் 'நபிமார்களின் வாரிசுகள்' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்தார்கள்.
 

இன்று நம்மிடமிருக்கிற மார்க்க நடைமுறைகள் முழுவதும் ஒன்று சேர்க்கப்பட்ட நிலையில் மேற்குறிப்பிட்ட பேரறிஞர் பரம்பரையில் வந்ததாகம். அவற்றில் பிக்ஹ் சட்டங்கள் இமாம் ஷhபியீ, இமாம் அபூஹனீபா, இமாம் மாலிகி, இமாம் அஹ்மது ஆகிய நால்வர் வழியாகவும்,  கொள்கைச் சட்டங்கள் இமாம் அஷ்அரீ, இமாம் மாதுரீதி ஆகிய இருவர் வழியாக மட்டுமே வந்தன. அந்தப் பரம்பரையிலுள்ள மற்ற மேதாவிகளின் வழியாகச் சட்டங்களும், கொள்கைகளும் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை. எனவே இன்றைய முஸ்லிம்கள் பிக்ஹ் சட்டங்களில் மேற்கூறிய நான்கு மத்ஹபுகளில் ஒன்றையும், கொள்கைக் கோட்பாடுகளில் பின்னருள்ள இரண்டு வழிகளில் ஒன்றையும் ஏற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாக இருக்கிறது.
 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஸஹாபாக்கள், தாபயின்கள் வழியாக பரம்பரையாக வந்தவைகளில் எதையும் தள்ளிவிட்டு நாமும் நம்முடைய சாலிஹீன்களான முன்னோர்களும் கேள்விபட்டிராத விஷயங்களை யாராவது நம்மிடம் சொன்னால் அதுபோது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எச்சரிக்கைப் பொன்மொழி எப்போதும் ஒரு மாபெரும் வழிகாட்டியாகவே உங்களுக்கு இருக்க வேண்டும்.

'இறுதி காலத்தில் தஜ்ஜால்கள் (அதிகமாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள்) நீங்களும், உங்களது மூதாதையர்களும் கேள்விப்பட்டிராத பலவற்றையும் உங்களிடம் கொண்டு வருவார்கள். அவர்களிடமிருந்து உங்களை நீங்கள் மிகக் கவனமாகக் காத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களை குழப்பாமலும், வழிதவறச் செய்யாமலும் இருக்கட்டும்.'

             -முஸ்லிம், மிஷ்காத் பாகம் 1 பக்கம் 28.

முற்றும்.

thanks to:www.sufimanzil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…