காயல்பட்டணத்தில் கல்வி வளர்ச்சி!
இந் நகரில் இஸ்லாமிய மார்க்க கல்வியையும், அரபு மொழியையும் கற்பது கடமையாகவே கருதப்பட்டது. தமிழில் அரபு எழுத்து வடிவில் எழுதக் கூடிய அரபுத் தமிழ் இங்குதான் உருவாக்கப்பட்டது. தெருக்கள் தோறும் ஆங்காங்கே பள்ளிகளிலும் வீடுகளிலும் கல்விகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. மரப் பலகைகளில் திருக் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு ஓதிக் கொடுக்கப்பட்டது.
திண்ணை மத்ரஸா எனப்படும் பள்ளிகள் ஆங்காங்கே தெருக்களில் இருந்தன. பெரிய கல்விமான்கள் அங்கு இருந்தபடி கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். மாணவர்கள் ஒவ்வொரு ஆசிரியரிடமும் சென்று கல்வி கற்று வருகைப் பதிவேட்டில் பதிந்து வர வேண்டும். இதை மற்ற ஆசிரியர்கள் கண்காணிப்பார்கள். இந்த மத்ரஸாக்கள் மஹ்லறா, ஜாவியா, குருவித்துறைப் பள்ளி போன்ற இடங்களில் இருந்தன. வெளியூர் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்றுச் சென்றுக் கொண்டிருந்தனர்.
உலகக் கல்வியின் முக்கியத்துவம் 1925 ம் ஆண்டுவாக்கில் உணரப்பட்டு அதற்குரிய ஏற்காடுகள் முன்னெடுக்கப்பட்டன. காயல்பட்டணம் ஊராட்சித் தலைவர் திரு. எஸ்.பொன்னையா நாடார் அவர்கள் பெரு முயற்சியால் தூத்துக்குடி தாலுகா போர்டு மூலம் அலியார் தெருவில் ஆரம்பப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டு அதற்கு கட்டிடமும் கட்டப்பட்டது. மூன்று வகுப்புகள் மட்டும் நடைபெற்றன. சிறுவர்கள் மட்டும் கல்வி கற்று வந்தனர். சிறுமிகள் கல்வி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த அல்ஹாஜ் என்.டி. அப்துல் ஹை ஆலிம் அவர்கள் 15-1-1927 காஹிரா ஸ்கூல் என்ற பெயரில் சித்தன் தெருவிலும், பின்னர் மகலறாவின் வடபுற தோட்டத்திலும் 1933 ல் கருத்தம்பி மரைக்கார் தெருவிலும் 6 ம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் நடத்தினார்கள். இவர்கள் இலங்கையிலுள்ள கண்டி,காலி நகரங்களில் இது போன்ற பள்ளிக்கூடம் நடத்தி இருக்கிறார்கள்.
1943ல் முஸ்லிம் ஜனநாயக சபையும், 1944ல் எல்.கே. லெப்பைத் தம்பி அவர்களாலும் நடத்தப்பட்டு தற்போது எல்.கே. பள்ளியாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1933-34 ஹாஜி வி.எம்.எஸ். முஹம்மது சுலைமான் லெப்பை, ஹாஜி ஐ.எல்.எஸ்.ஆப்தீன், ஹாஜி பி.எஸ். அப்துல்காதர், ஹாஜி எல்.கே. லெப்பைத் தம்பி, ஹாஜி எஸ்.ஓ.ஹபீப் முஹம்மது ஆகியோர்களின் முயற்சியால் தைக்காத் தெருவில் ஒரு ஆரம்பப் பள்ளி துவக்கப்பட்டது.
தீவுத் தெருவில் தொடக்கப்பள்ளி ஏ.கே. சாகுல் ஹமீது ஹாஜி, அ.க.முஹம்மது அப்துல் காதர், பீ.அபுல் ஹஸன், ஏ.கே. செய்யது அஹ்மது ஹாஜி, பி.மஹ்மூது ஹாஜி போன்றோர்களாலும், கருத்தம்பி மரைக்கார் தெருவில் மூஸா சாகிப் ஆலிம் அவர்களால் பெண்களுக்காக ஒரு பள்ளியும் உருவாக்கப்பட்டது.
எல்.கே. பள்ளியை மேநிலைப் பள்ளியாக உயர்த்த அரும்பாடு பட்டவர்கள் எல்.கே. லெப்பைத் தம்பி ஹாஜி அவர்கள்.
தீவுத் தெரு அரசு பெண்கள் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும்,மேநிலைப் பள்ளியாகவும் உயர்த்த பாடு பட்டவர்கள் ஏ.கே. சாகுல் ஹமீது ஹாஜி அவர்கள்.
1933 ல் குத்பா பெரிய பள்ளி காம்பவுண்டுக்கு எதிரில் நெய்னார் தெருவில் வெ.மு.அப்பா (வெ.முஹம்மது முஹிய்யத்தீன்) அவர்கள், சி.மு.க.சேகு முஹம்மது அவர்கள்,கோமான் தெரு அம்பலம் ஹஸன் அவர்கள் மற்றும் அன்றைய முஸ்லிம் மகா ஜன சபை பெரியோர்களால் முஸ்லிம் ஸ்கூல் என்ற பெயரில் பள்ளிக் கூடம் ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கு சில வருடங்களுக்குப் பின் நெய்னார் தெரு தைக்காவில் சுபைதா பெண் பாடசாலை என்ற பெயரில் ஏ.எஸ்.சுலைமான், எம்.கே.அபூபைதா ஆகியோர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டது. 1947 க்குப் பிறகு முஸ்லிம் ஸ்கூல் சென்ட்ரல் ஹையர் எலிமென்டரி ஸ்கூலாக மாற்றப்பட்டது. சுபைதா ஸ்கூல் நெய்னார் தெருவிலிருந்து சதுக்கைத் தெருவில் அஹ்மது நெய்னார் பள்ளிக்குப் பாத்தியப்பட்ட நிலத்திற்கு மாற்றப்பட்டது. 99 வருட அக்ரிமெண்ட் பள்ளிக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது.
இந்த இரு பள்ளிகளையும் வெ.மு.அப்பா அவர்களே நிர்வகித்து வந்தார்கள். அவர்கள் மறைவிற்குப் பின் எம்.கே.டி. முஹம்மது அபுபக்கர் அவர்கள் நிர்வகித்தார்கள். தற்போது இப் பள்ளிகளை வாவு அறக்கட்டளையினர் நிர்வகித்து வருகின்றனர்.
வீரபாண்டியன்பட்டணம் ஆதித்தனார் கல்லூரி தோன்ற எம்.கே.டி. முஹம்மது அபுபக்கர் அவர்களே காரணமாக இருந்தார்கள்.
1953-54 ல் காயல்பட்டணம் ஆறுமுகநேரி கல்விச்சங்கத்தால் காயல்பட்டணம் ஆறுமுக நேரி உயர்நிலைப் பள்ளி 11 ம் வகுப்பு வரை அரசு அங்கீகாரம் பெற்று ஆரம்பிக்கப்ட்டது.
ஆங்கில வழிக் கல்வி போதானா முறையில் மத்திய அரசு பாடமுறைப்படி போதிக்கும் பள்ளியாக டிசிடபிள்யு நிறுவனத்தில் கமலாவதி மேநிலைப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.
ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீப் எம்ஏ. அவர்கள் முயற்சியால் ஆங்கில வழி போதனா முறை அடிப்படையில் மார்க்க கல்வி கற்றுக் கொடுக்கும் முஹ்யித்தீன் மெட்ரிகுலேசன் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதை 10-07-1979 அன்று அன்றைய கேரள முதலமைச்சர் சி.ஹைச்.முஹம்மது கோயா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதை செய்யிதினா முஹம்மது கல்விச் சங்கம் நடத்துகிறது.
பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தோன்ற காயல்வாசிகளே காரணமாவார்கள்.
வாவு செய்யிது அப்துற் றஹ்மான் ஹாஜி அறக்கட்டளையால் நடாத்தப்பட்டு வரும் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி காட்டு மொகுதூம் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ளது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…