Home காயல்பட்டணத்தில் வாக்குரிமை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு – அதிகாரிகள் உறுதி!

காயல்பட்டணத்தில் வாக்குரிமை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு – அதிகாரிகள் உறுதி!

காயல்பட்டணம் பகுதியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு சதித்திட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிருடன் உள்ளவர்களை இறந்தவர்கள் எனவும், ஊரில் வசிப்பவர்களை வெளிநாட்டில் இருப்பவர்கள் எனவும், வாக்குரிமை பெற்றவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை எனவும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் பதட்டத்தை உருவாக்கி, ஓட்டுப்பதிவை பாதிக்க முயற்சி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், யாசின் என்பவர் சுமார் 1300 வாக்குகள் போலியானவை என தெரிவித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ஊரெங்கும் வேகமாக பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

நிலைமையை உணர்ந்த திமுக நகர செயலாளர் முத்து முஹம்மது அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட அனைத்து குடும்பங்களுடனும் தொடர்பு கொண்டு, “யாரும் அச்சப்பட தேவையில்லை, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (09.04.2026) காலை ஜலாலியா மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய பேரவையின் தலைவர் மற்றும் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவின் பேரில், திமுக சார்பில் திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகளையும் நேரில் அழைத்து சென்று நிலைமை விளக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கோட்டாட்சியர்,
“ஒரு வாக்குரிமை பெற்ற இந்திய குடிமகனும் பாதிக்கப்பட மாட்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

இதனால், காயல்பட்டணம் மக்களிடையே ஏற்பட்டிருந்த பதட்டம் தற்போது தணிந்துள்ளது.