Home Uncategorized ஊர் கட்டமைப்பு
Uncategorized - November 1, 2010

ஊர் கட்டமைப்பு

காயல்பட்டணம் நகரம் முன்னமே மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஊர் அமைப்பு மற்ற ஊர்களை விட தனித்து விளங்குகிறது.

தெருக்கள் மிகவும் நேர்த்தியாகவும், அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தெருக்களின் இரு பக்கங்களிலும் வீடுகள் பெரும்பாலும் பால்கனியுடன் கட்டப்பட்டுள்ளன. தெருக்களிலிருந்து அவ்வீட்டிற்கு செல்வதற்கு வாசல்படி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கென்று நகராட்சியில் தீர்வை தனியாக கட்டப்படுகிறது. தெருக்களின் இரு பக்கங்களிலும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன்மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முடுக்கின் உள் அமைந்துள்ள வீடுகள் இந்த தெருக்களோடு இணைக்கப்பட்டுள்ளது.

தெருக்களில் செல்லும் ஆண்கள் முடுக்குப் பகுதியில் உள்ள பெண்களை பார்க்க முடியாதபடி ஒரு மறைவு வைக்கப்பட்டிருக்கிறது.

மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. அந்த மின்கம்பங்களில் தெருவிளக்குகள் தற்போது மெர்குரி, சோடியம் விளக்குகளாக உள்ளது. முன்பு சிம்னி விளக்கு அதன்பின் பல்பு, பின் டியூப்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொலைபேசிகளும் அவ்வாறே தொலைபேசி கம்பங்களிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது வயர்கள் பூமியின் அடியில் பதியப்பட்டு அதன் மூலம் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய காலத்தில் கேபிள்டிவி வயர்களும் தெருவழியே சென்று கொண்டிருக்கிறது.

பெரும்பாலான ஊர்களில் காணப்படும்  திறந்த வெளி சாக்கடை, பாதாள சாக்கடை இங்குள்ள தெருக்களில் காணப்படுவதில்லை. இதனால் இங்கு துர்வாடைகள், கொசு மற்றும் நோய் கிருமிகள் அற்ற நகரமாக காட்சியளிக்கிறது. தெருக்களில் பன்றியின் நடமாட்டம் அறவே கிடையாது. நாய்களின் நடமாட்டம் இரவில்தான் உண்டு.

பெரும்பான்மையான தெருக்களில் ஆங்காங்கே இருபகுதிகளிலும் வேப்பை மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தெருக்கு தெரு ஆங்காங்கே பலசரக்கு கடைகள் வைக்கப்பட்டிருக்கிறது.. அதில் பெண்கள் சாமான்கள் வாங்குவதற்கென்று முடுக்குப்பகுதியில் பிரத்யோகமாக ஒரு சிறிய ஜன்னல் போன்ற கதவு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சாமான்கள் மற்றும் பணங்களை கொடுத்து வாங்க வசதி செய்யப்பட்டிருக்கிறது.. அதில் மறைவிற்காக மறைப்பு ஒன்று அமைக்கப்பட்டு தொங்கி கொண்டிருக்கிறது. இதற்கு தொண்டு வாசல்கள் என்று பெயர்.

அனைத்து தெருக்களும் கிழமேல் அல்லது தென்வடலாக அமைக்கப்பட்டிலுருக்கிறது. எனவே தெருக்கள் ஒன்றோடு ஒன்று செங்குத்தாக இணைக்கப்பட்டிருக்கிறது. நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்கள் சந்தி என்றழைக்கப்படுகிறது. பெரும்பான்மையான தெருக்களில் பள்ளிவாயில்கள், மையவாடிகள், தர்காக்கள் இருக்கின்றன. பள்ளிவாயில்களுடன் பொது சங்கங்கள், சதுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலங்கள்,தபால் நிலையம், வங்கிகள் அனைத்தும் மெயின் பஜாரில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பஜாரின் வழியாக பேருந்துகள் இயக்கப்டுகின்றன. இதற்கு கிளையாக வியாபாரத்திற்கென்றே மற்றொரு பஜார் இருக்கிறது. அதிலும் கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பஜாருக்கு கூலக்கடை பஜார் என்று பெயர். தெருக்களின் பல இடங்களில் தபால் பெட்டிகள் வைக்கப்பட்டு தபால் சேகரிக்கப்பட்டு தலைமை தபால் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சில தெருக்களில் கிளை தபால் நிலையங்கள் உள்ளன.

மீன் மார்க்கெட் ஒன்று பரிமார் தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு என்று தனியாக மீன் மார்க்கட் (கொள்ளைக்கடை மார்க்கட்) ஒன்று இருந்தது. தற்போது அது இல்லை.

அந்த சங்கங்கள் பெரியவர்கள் மாலை நேரங்களில் கூடும் இடமாக இருக்கிறது. பெரியவர்கள், இளைஞர்கள் அங்கு பொழுது போக்கிற்காக தாம் என்ற விளையாட்டு, கேரம்போர்டு விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. செய்தித்தாள்கள் வாசிக்கப்படுகின்றன. பள்ளிவாயில்களில் காற்றிற்காக இரவில் பெரியவர்கள் படுத்து உறங்குவதும் உண்டு. சதுக்கைகள் அமைக்கப்பட்டு அங்கு பெரியவர்கள் கூடும் இடமாகவும், நியாயத் தீர்ப்புகள் வழங்கும் இடமாகவும் திகழ்ந்தது.

மழைக்காலங்களில் மழைநீர் ரோட்டின் வழியே சென்று கடல் மற்றும் ஆங்காங்கே உள்ள குளங்களைச் சென்று அடையும். அந்த குளங்களில் சென்று தேங்கும். தற்போது அந்த குளங்கள் மூடப்பட்டு விட்டன. வடிகால் பாதைகள் அடைபட்டுவிட்டன. அதனால் மழைநீர் செல்லமுடியாமல் ஆங்காங்கே தேங்குகின்றன.

தெருக்களில் ஆங்காங்கே பொதுக் கிணறுகளும், கால்நடைகள் நீர் அருந்தி செல்வதற்காக நீர் தொட்டிகளும் அமைக்கபட்டிருக்கின்றன.

முன்பு ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது நகர நிர்வாகத்தால் குப்பைகளை வண்டிகளில் வந்து சேகரித்து சென்று உரிய இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

தெருக்களில் பள்ளிவாயில்கள் மற்றும் வீடுகளில் குர்ஆன் மத்ரஸா அமைக்கப்பட்டு அங்கு குர்ஆன் மற்றும் மார்க்க போதனைகள் நடத்தப்படுகின்றன. திக்ரு மஜ்லிஸுகளில் வெள்ளி, திங்கள் அன்று மஃரிபிற்குப் பின் திக்ரு, ராத்திபு மஜ்லிஸுகள் நடை பெறுகின்றன. பெண்கள் தைக்காக்கள் ஆங்காங்கே வெட்டை எனப்படும் இடங்களிலும், முடுக்குகளிலும் இருக்கின்றன.

இங்கு வெள்ளிக் கிழமை ஸலவாத்து மஜ்லிஸ், திக்ரு மஜ்லிஸ் மற்றும் மௌலிது மஜ்லிஸுகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…