Home Uncategorized திசையான், பறை, அடாப்பு, கண்டு சொல்லல், ஜமாஅத் அழைப்பு
Uncategorized - பொது - December 17, 2010

திசையான், பறை, அடாப்பு, கண்டு சொல்லல், ஜமாஅத் அழைப்பு

பொதுவிழாக்களுக்கு விடுக்கும் அழைப்பு:

நகரில் அதிகமதிகமாக பொதுவான விழாக்கள் அப்போதப்பது நடத்தப்படுகிறது.

கந்தூரி விழாக்களுக்கு ஆரம்பத்தில், பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு கொடுப்பது எப்படி என்றால், அனைத்துப் பள்ளிவாயில்கள், சங்கங்களுக்கு கந்தூரி பற்றிய அறிவிப்பு கடிதம், நோட்டீஸ் போன்றவை கந்தூரி விழாக்கள் ஆரம்பிப்பதற்கு சுமார் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படுகின்றன. முன் ஜும்ஆவிலும் விநியோகிக்கப்படுகிறது.

பின்பு பெரிய கந்தூரிகளுக்கு – ஒருவர் கந்தூரி விபரங்களை கந்தூரி நடைபெறும் இடத்திலிருந்து உரக்க சப்தமிட்டு சொல்ல ஆரம்பித்து நகரின் ஒவ்வொரு தெரு சந்தியிலும் நின்று உரக்க சப்தமிட்டு சொல்வார். அவர் தன்னுடன் சில சிறுவர்களை அழைத்துச் செல்வது உண்டு. இவர் உரக்கச் சொல்லி முடித்ததும் அச்சிறுவர்கள் 'வராச் சொன்னோ, வராச் சொன்னோ'  என்று சப்தமிட்டு சொல்வார்கள். பொதுமக்கள் இதை விளங்கி கந்தூரிகளிலும், நேர்ச்சை சோறு வழங்கும் வைபவங்களிலும் கலந்து கொள்வார்கள். இப்படிச் சொல்பவருக்கு 'திசையான்' என்று பெயர். தற்போது இந்த நடைமுறை முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது கந்தூரி பற்றிய கடிதங்களும், நோட்டீஸும் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

கந்தூரி கொடியேற்றத்திற்கும், கந்தூரி விழாவிற்கும் 'நகரா' என்ற டங்கா அடிக்கப்படுகிறது. பெண்கள் பகுதி கந்தூரி விழா அப்பகுதிகளில் உள்ள பெண்கள் கூடும் (மைதானங்கள்) வெட்டைகளில் நடைபெறுகிறது. அங்கும் கொடியேற்றப்படுகிறது. பெண்களுக்கு என்று கந்தூரி முடிந்தபிறகு தனியாக ஜியாரத் செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பறை:

நகரின் ஊராட்சி சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும், அரசு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும், சுகாதாரம் மற்றும் பொது விநியோகம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் பஞ்சாயத்து மூலம் 'பறை' (பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் கொட்டு ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு அதுபற்றிய விசயத்தை சொல்வார். மக்கள் விபரங்கள் கேட்டாலும் சொல்லிக் கொண்டே செல்வார். ஒவ்n;வாரு தெருவிலும் தான் சொன்னதற்கு சாட்சியாக மக்களிடம் கையொப்பம் வாங்கிக் கொள்வார்) அடிக்கப்பட்டு விசயங்கள் பொதுமக்களுக்கு சேர்;க்கப்படுகிறது. தற்போது இந்த விசயங்கள் பள்ளிவாயில் மைக்கில் சொல்லப்படுகிறது.

தனிப்பட்ட விசேஷங்களுக்கு அழைப்பிதழ்கள்:

தனிப்பட்டவர்கள் நடத்தும் விசேஷங்களுக்கு சொந்தபந்தங்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் ஆகியோரை அழைப்பதற்கு என்று நகரில் ஒவ்வொரு பகுதிக்கும் விசேஷ அழைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

விசேஷங்கள் நடைபெறும் முன்னர் இவர்களை சம்பந்தப்பட்டவர்கள் அழைத்து அழைப்பு விடுக்கப்படுவர்களின் பட்டியல்களை தெருவாரியாக, வீடு வாரியாக தயார் செய்கிறார்கள். இதற்கு 'அடாப்பு' என்று பெயர். அதன்பிறகு அதை எடுத்துச் சென்று வீடு வீடாக சொல்கிறார்கள். தற்போது விசேஷம் நடத்தும் வீட்டார்களால் கார்டுகளில் அழைப்பிதழ் எழுதப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதையும் இவர்களே கொடுக்கிறார்கள். பெண்களுக்கு அந்த வீட்டின் சொந்தக் காரர்களோ அல்லது கூலிக்கு ஆட்களோ கொடுக்கிறார்கள். அழைப்பு சொல்வதற்கு என்று ஒரு நபருக்கு குறிப்பிட்ட தொகை கூலியாக கொடுக்கப்படுகிறது.

சிறிய விசேஷங்களாக இருப்பின் அந்த வீட்டுக்காரர்களே ஆட்களை கண்டு விசேஷங்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்கள். இதற்கு 'கண்டு சொல்லல்' என்று பெயர்.

தற்போது விருந்து தவிர மற்ற விசேஷங்களுக்கு பள்ளிவாயில்களில் 'ஜமாஅத் அழைப்பு' என்று கடிதம் கொடுக்கப்பட்டு சொல்லப்படுகிறது.

பொதுவான விஷயங்கள், மருத்துவ சிகிச்சை முகாம்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டும் ஆட்டோக்கள் அல்லது வேனில் மைக், குழாய் கட்டப்பட்டு தெருத் தெருவாக அழைப்பு விடுக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…