Home Uncategorized தாயாரின் கருணை:
Uncategorized - பொது - July 5, 2011

தாயாரின் கருணை:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரான அல்கமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வியாதி ஒன்று வளைத்துப் பிடித்துக் கொண்டது. அதன் தாக்கத்திலேயே மரணமடைந்தார்கள். மரணப்படுக்கையில் இருந்த அவரை பிலால், உமர், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹும் போன்றோர் சூழ்ந்து கொண்டு ஷஹாதத் கலிமா சொல்லும்படி அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவரால் அக்கலிமாவை கூற முடியவில்லை. மௌனமாக படுத்துக் கொண்டு அனைவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டு ஸஹாபாக்கள் திகைத்து நிற்க, அச்சமயத்தில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸல்லம் அவர்கள் அங்கு வந்தார்கள். ஸஹாபாக்கள் விலகி நின்று வழிவிட்டு விஷயத்தை சொன்னார்கள். நபிகளாரும் கலிமா சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அவரால் கலிமா சொல்ல முடியவில்லை. காரணத்தை உணர்ந்த நபிகள் நாயகம் அங்கிருந்த அவரின் தாயாரிடம்  'உங்கள் பிள்ளையின் வாழ்க்கை எப்படி இருந்தது?' என்று வினவினார்கள். மார்க்கப்பற்று உள்ளவர், தொழுகையாளி, நற்காரியங்களில் முன் நிற்பவர். ஆர்வத்துடன் சேவையாற்றுவார்– இது தாயாரின் விளக்கம்.

உங்களுடன் எப்படி நடந்து கொண்டார்? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நீண்ட வேதனைப் பெருமூச்சுடன் கூறினார் தாயார்,'தாங்கள் கேட்பதால் கூறுகிறேன். என் பிள்ளை மேல் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவர் என்னை கவனிப்பதே இல்லை. அவர் தன் மனைவியையே சார்ந்து நின்றார் என்றார்கள்.

அல்கமாவின் நிலையின் தன்மையை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அந்த அம்மையாரிடம் தன் மகனை மன்னிக்கும் படி சொன்னார்கள். அதற்கு அந்த தாயார், அவன் எனக்கு செய்த செயல்கள் என்னால் அவனை மன்னிக்க முடியாமல் செய்து விட்டது என்று சொல்லி மறுத்து விட்டார்கள்.

உடனே நபிகளார் தன் தோழர்களிடம் விறகு சேர்க்கச் சொல்லி தீயை மூட்டி அதில் அல்கமாவை போட்டு விடுங்கள் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட  அல்கமாவின் அன்னையின் இதயம் அதிர்ந்தது. துடிதுடித்துப் போனார்கள். யாரஸூலல்லாஹ்! என் இதயமலரையா தீயிலிடச் சொல்கிறீர்கள்? அல்லாஹ்வுக்காக அப்படி செய்யாதீர்கள். அவள் நெஞ்சம் நெகிழ்ந்துருகியது. மகன் மீது இருந்த அதிருப்தி அகன்றது. தாயன்பு கசிந்தது. விழிகள் நீரைப் பெருகச் செய்தன.

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,' இது உலகத்தின் நெருப்பு. இதில் எரிவது உண்மையில் எரிவதே அல்ல. அல்லாஹ்வின் தண்டனை நரகத்தின் நெருப்பு. இதைவிட லட்சம் மடங்கு அதிகம். தெரிந்து கொள்ளுங்கள். அல்கமாவின் அமல்கள் நீங்கள் அவர் மேல் முழு திருப்தி அடையாதவரை பயன்படாது. துடித்துப் போன தாய் சொன்னார், அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை சாட்சியாக வைத்து சொல்கிறேன். என் மகனை மன்னித்தேன் என்றார்கள். இந்த மன்னிப்பு கிடைத்த மறுகணமே அல்கமாவின் வாய் திறந்தது. கலிமா ஷஹாதத்துடன் உயிரும் பிரிந்தது.

நபிகளார் அவர்கள் அங்கிருந்த தோழர்களைப் பார்த்து சொன்னார்கள்,' முஹாஜிர்களே! அன்சாரிகளே! நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த மனிதன் தன் தாயை விட தாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றானோ அவன் மேல் அல்லாஹ்வின் சாபம் நிகழும். கோபம் நிலவும். அவன் ஆற்றிய அல்லாஹ் விதித்த கடமைகள், நபில் வணக்கங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்' என்றார்கள்.
இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

நம்முடைய பெற்றோர்களை மதித்து அவர்கள் சொல்படி நடந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கொடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…