குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியவைகள்
குழந்தை உண்டாகி இருக்கும் பெண்ணிற்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருப்பதற்கு இறைநேசச்செல்வர்கள் பெயரில் நேர்ச்சை வைத்து காசுகளை துணியில் கட்டி தாயாரின் இடுப்பு அரைஞான் கயிறில் கட்டி வைப்பார்கள். குழந்தை பிறந்ததும் அந்த காசுகளை எடுத்து நேர்ந்துவிட்ட இறைநேசச் செல்வர்களின் மக்பராக்களில் சென்று செலுத்துவார்கள்.
சாதாரணமாக முன்பு பெண்கள் குழந்தைகளை வீடுகளில்தான் பெற்றெடுப்பார்கள். அதன் பின் அரசு மருத்துவமனையிலும், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைபேறு செய்கிறார்கள். சாதாரண பிரவசமாக இருப்பின் மருத்துவமனையிலிருந்து 3 நாட்களுக்குள்ளும், சத்திர சிகிச்சை (ஆபரேஷன்) மூலம் குழந்தை பெற்றிருப்பின் 15 நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு வீடு திரும்புவார்கள். தற்போது 7 அல்லது 10 நாட்களில் வீடு திரும்புகிறார்கள். திரும்பும் போது மஹ்லறா, ஸாஹிபு அப்பா தைக்கா போன்ற ஜியாரத்துகளில் குழந்தையை கொண்டு சென்று காணிக்கை செலுத்துவார்கள்.
குழந்தை பிறக்க வலி வந்ததும் பிரவச வார்டுக்கு தாயை அழைத்துச் செல்வார்கள். அந்த வார்டின் வெளிப்பகுதியில் வீட்டுப் பெண்கள் இறைநேசச் செல்வர்களின் மௌலிது, மர்திய்யா, பைத்துக்கள், ஸலவாத்துகள் ஓதி குழந்தை சுகப்பிரவசமாக ஆகி தாயும், குழந்தையும் நலமாக இருக்க வேண்டுவார்கள். சில சமயம் தாயாருக்கு மருத்துவர் கொடுத்த தேதி முடிந்ததும் அல்லது வேறு காரணங்களால் வலி ஏற்பட தாமதமானால் பெண்களுக்கு சிலைன் ஏற்றப்பட்டு வலி வரவைக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்வார்கள்.
குழந்தை பிறந்ததும், பிறந்த குழந்தைக்கு காதில் பாங்கும், இகாமத்தும் ஓதி ஊதுவார்கள். குல்ஹுவல்லாஹு ஸூரா மற்றும் இன்னா அன்ஜல்னா ஸூராவை இடது காதில் ஊதுவார்கள். இதனால் அந்தப் பிள்ளை ஜினாவின் பக்கம் செல்வது தடுக்கப்படுகிறது என்ற ஹதீது பிரகாரம் இது செயல்படுத்தப்படுகிறது.
அடுத்து வீட்டில் பெரியவர்கள் அல்லது ஹஜ்ரத்மார்கள், ஷெய்குமார்கள் பேரீத்தம்பழம் அல்லது இனிப்பை சுவைத்து அதை பிள்ளையின் நாக்கில் சுவைக்க வைப்பார்கள். இது சுன்னத்தாகும்.
பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு சொந்தபந்தங்களிலிருந்தும், தெரிந்தவர்களிலிருந்தும் வந்த வண்ணம் இருப்பார்கள். பார்க்கவரும் நபர்கள் சந்தோஷத்திற்கு பிள்ளைக்கு ஹதியா கொடுப்பது வழக்கம். வருகிறவர்களுக்கு இனிப்பு வழங்குவதும் வழக்கமாக இருக்கிறது. பிள்ளை பெற்ற செய்தியை ஒருவருக்கு அறிவிக்கும்போது அதைக் கேட்டவர், தாயும் பிள்ளையும் சுகமா?' என்று கேட்பது வழக்கமாக இருக்கிறது. இது கேட்கப்படாவிட்டால் சில சமயம் குற்றமாக பார்க்கப்படுகிறது.
இதன்பின் பிள்ளைக்கு மேல்கழுவி சொந்த பந்தங்களுக்கு கற்கண்டு கொடுப்பார்கள். குழந்தையின் முடி இறக்கப்பட்டு அந்த முடியின் எடைஅளவு வெள்ளியை அல்லது அதன் கிரயத்தை ஏழைகளுக்கு கொடுப்பார்கள்.
அடுத்து ஆண்பிள்ளையாக இருப்பின் இரு ஆடுகளும், பெண் பிள்ளையாக இருப்பின் ஒரு ஆடும் ஹகீகாவாக கொடுக்கப்படுகிறது. இந்த ஆட்டின் இறைச்சியை சொந்தபந்தங்களுக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. ஹகீகா ஆட்டின் எலும்பை தரிக்காமல் இருப்பது நல்லது. இறைச்சி கொடுக்கப்படும்போது அதில் சீனி போட்டு கொடுப்பது சுன்னத். இந்த ஹகீகா கொடுப்பது பெற்றோர்களுக்கு பிள்ளை வாலிப வயது அடையும் வரை சுன்னத்தாகும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…