Home Uncategorized ஹதீஸ் நூற்களின் வகைகள்
Uncategorized - பொது - November 15, 2010

ஹதீஸ் நூற்களின் வகைகள்

 ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன.

ஸுனன்
தொழுகை, நோன்பு போன்ற பாடத் தலைப்புகளின் கீழ் பலரும் அறிவிக்கும் ஹதீஸ்களை சில நல்லறிஞர்கள் திரட்டியுள்ளனர். இவ்வாறு அமைந்த நூற்கள் ஸுனன் எனப்படும்.

புகாரி , முஸ்லிம், அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, தாரமீ, அல்முன்தகா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான், ஸுனன் ஸயீத் பின் மன்சூர், பைஹகீ ரலியல்லாஹு அன்ஹும்  போன்ற தொகுப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஸஹிஹ்

புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் ஆதாரப்பூர்வமானவை மட்டுமே தொகுக்கப்படுவதை தொகுத்தவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால் ஸஹீஹ் என்று குறிப்பிடுகின்றனர். புகாரி, முஸ்லிம்,; இப்னு ஹிப்பான் போன்ற தொகுப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஸ்னத்

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்த ஹதீஸ்கள், உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்த ஹதீஸ்கள் என்று ஒவ்வொரு நபித்தோழரும் அறிவித்த ஹதீஸ்களை ஒரு இடத்தில் திரட்டி ஹதீஸ்களைத் தொகுத்தவர்களும் இருந்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூற்கள் முஸ்னத் எனப்படும்.

முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபீ அவானா, முஸ்னத் தயாலிஸீ, முஸ்னத் ஷாஃபீ, முஸ்னத் அபீஹனீபா, முஸ்னத் ரபீவு, முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் பஸ்ஸார், முஸ்னத் {ஹமைதி, முஸ்னத் ஷிஹாப், முஸ்னத் அப்து பின், முஸ்னத் இப்னுல் ஜஃது, முஸ்னத் ஹாரிஸ் போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஃஜம்

ஒருவர் பத்து ஆசிரியர்களிடம் ஹதிஸ்களைக் கேட்டிருப்பார். எந்தெந்த ஆசிரியர்களிடம் கேட்டாரோ அதையே தலைப்பாக்கியும் நூற்கள் தொகுக்கப்பட்டன. அவை முஃஜம் எனப்படும். தப்ரானியின் சகீர், தப்ரானியின் அவ்ஸத், தப்ரானியின் கபீர் ஆகிய நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஜாமிவு

மார்க்கச் சட்டதிட்டம், கொள்ளை விளக்கம், வரலாறு போன்ற திருக்குர்ஆன் விளக்கவுரை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கொண்டதாக தொகுக்கப்பட்டு பாடத்தலைப்புகளில் அமைக்கப்பட்டவை ஜாமிவு எனப்படும். ஸுனன் என்ற வகையிலான நூற்களில் தொழுகை, நோன்பு போன்ற சட்டதிட்டங்கள் மட்டும் இடம் பெற்றிருக்கும். ஜாமிவு என்ற வகையில் அதைவிட கூடுதலான பல விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.

முஸன்னப்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ்களுடன் நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் ஆகியோரின் சொல், செயல்களையும் சேர்த்து தொகுக்கப்பட்டவை முஸன்னப் எனக் கூறப்படுகிறது. முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக், முஸன்னப் இப்னு அபீஷைபா போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முஸ்தத்ரக்

குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் ஒருவர் தொகுத்த நூலில் எல்லா ஹதீஸ்களும் இடம் பெற்றிருக்க முடியாது. அந்த விதிகளின் கீழ் அமைந்த எத்தனையோ ஹதீஸ்கள் விடப்பட்டும் போய்விடும். இவற்றை இன்னொருவர் தொகுத்தால் அது முஸ்தத்ரக் எனப்படும்.

உதாரணமாக புகாரியும் முஸ்லிமும் சரியான ஹதீஸ்கள் எவை என்பதற்கு சில நிபந்தனைகள் வகுத்துள்ளனர். அந்த நிபந்தனைகளின் படி அமைந்த பல ஹதீஸ்களை அவர்கள் விட்டுள்ளதால் அவற்றை ஹாகிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொகுத்தார். இப்படி தொகுக்கப்பட்டவை முஸ்தத்ரக் எனப்படும்.

மவ்ளூஆத்

நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும்.

இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி ரலியல்லாஹு அன்ஹும் அவர்கள்போன்ற அறிஞர்களின் நூற்கள் .தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். அப்துல் கனி பின் அப்துல் வாஹித் அல்-மக்தஸீ (மறைவு 600ஹிஜ்ரீ) என்பவர் புஹாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா என்ற ஆறு தொகுப்புகளில் இடம் பெறும் அறிவிப்பாளர்களைப் பற்றி ஒரு ஆய்வு நூல் 'அல்-கமால்' என்ற நூல் எழுதினார்கள் .        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…