Home Uncategorized மரணம் எங்கிருந்தாலும் வரும்
Uncategorized - பொது - July 5, 2011

மரணம் எங்கிருந்தாலும் வரும்

அக் காலத்தில் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவருடைய உயிரைப் பறிக்க நாடினால், மனித உருவில் வந்து அங்குள்ள எல்லோருடைய பார்வையிலும் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சமயம் ஹஜ்ரத் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவையில் வீற்றிருந்தார்கள். மந்திரிப் பிரதானிகள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் அங்கு அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது அங்கு ஒரு மனிதர் வந்தார். வந்தவர் அச்சபையிலிருந்து ஒருவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு பிறகு வெளியே சென்று விட்டார். அவர் அப்படி முறைத்துப் பார்த்ததைக் கண்ட அந்த மனிதர் பயந்து போய் ஹஜ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் தணிந்த குரலில், இப்பொழுது வந்து போனவர் யார்?' என கேட்டார்.

'அவர்கள்தான் ஹஜ்ரத் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவார்கள். இங்குள்ள யாரோ ஒருவருடைய உயிரைப் பறிக்க வந்துள்ளார்கள்' என்றார்கள் சுலைமான் நபி அவர்கள்.

'அப்படியா? யா அல்லாஹ்! அவர் என்னைத்தான் முறைத்துப் பார்த்தார். தயவு செய்து என்னை எப்படியேனும் காப்பாற்றுங்கள்! எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது' என்று கெஞ்சினார் அந்த மனிதர்.

சுலைமான் நபி அவர்கள் காற்றை அழைத்து 'இந்த மனிதரை ஏழு கடல்களுக்கு அப்பால் கொண்டு போய் சேர்த்து விடு' என்று ஆணையிட்டார்கள்.

காற்று நொடிப் பொழுதில் அவரை ஏழு கடல்களுக்கு அப்பால் கொண்டு போய் சேர்த்து விட்டது. அந்த மனிதர் மிக சந்தோஷத்துடன் தப்பித்தேன் என்று இருக்கும் சமயத்தில், சுலைமான் நபி அவர்கள் அவையில் வந்த அதே மனிதர் மீண்டும் இவர் முன்னால் தோன்றினார்.
அவரைக் கண்டதும் அந்த மனிதர் பயந்து நடுங்கியவராக இங்கேயுமா நீங்கள் வந்து விட்டீர்கள்?' என்று அலறினார்.

ஆம்! இந்த இடத்தில் வைத்துதான் உன் உயிரை வாங்க வேண்டுமென்று அல்லாஹ்வின் கட்டளை. ஆனால் உம்மை சுலைமான் நபி அவையில் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. அல்லாஹ்வின் நாட்டம் மாறக் கூடியதல்லவே! என்று கூறிக் கொண்டே அவருடைய உயிரைப் பறித்துக் கொண்டார்கள்.
மரணம் அல்லாஹ்வின் நாட்டப்படி எப்போது வேண்டுமானாலும், எங்கேயும் நிகழலாம். அதற்காக நாம் நல்லமல்களை செய்து தயாராக இருக்க வேண்டும்.
 

Check Also

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…