Home வரலாறு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

ஊண்டி செய்யிது முகம்மது ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 1359 ஸபர் பிறை 22 திங்கள் (1-4-1940)அன்று காயல்பட்டினத்தில் குத்துக்கல் தெருவில் ஊண்டி மொகுதூம் முஹம்மது – பீவி பாத்திமா ரழியல்லாஹு தஆலா அன்ஹுமா தம்பதிகளுக்கு ஒரே மகனாகப் பிறந்தார்கள்.

தமது இரண்டாம் வயதிலேயே தந்தை மறைந்தார்கள் . அன்னாரின் தந்தையார் ஆந்திரா மாநிலம் சுருடாவில் ஹிஜ்ரி 1361 ஷஃபான் பிறை 25 சனிக்கிழமை (15-8-1942) 2.30 மணி சுமாருக்கு வபாத்தாகி அங்கேயே அடங்கப் பெற்றார்கள்.

சிறுவயதிலேயே மார்க்க கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். தங்களது ஆரம்பக் கல்வியை காயல்பட்டினத்தில் கற்ற அவர்கள் மார்க்க கல்வியை வேலூர் பாக்கியாத் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பயின்று ஹிஜ்ரி 1380 ஷஃபான் பிறை 12 (1961 ஜனவரி 30)திங்கள் கிழமை அன்று ‘பாகவி’ ஸனதைப் பெற்றார்கள்.

ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் இரண்டாவது மகளான எஸ்.ஏ. முஹம்மது இப்றாஹீம் நாச்சி ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களை, தாம் ஒதிக் கொண்டிருக்கும் போதே 1957 ஆம் ஆண்டு மணந்து இல்வாழ்வை தொடங்கினார்கள். இவர்களின் மூலமாக அன்னாருக்கு ஒரு ஆண் மகவும், ஏழு பெண் மகவும் பிறந்தது. அவர்களின் விபரங்கள்:

1. மொகுதூம் முஹம்மது.- ம.பெ. தோல்சாப்பு முஹம்மது பாத்திமா மகள் முஹம்மது இப்றாஹீம் நாச்சி
2. பீவி பாத்திமா -க.பெ. தோல்சாப்பு செய்யிது உமர்
3. சித்தி ஆரிபா -க.பெ. ஹாஜி எஸ்.டி.முஹம்மது ஃபாரூக்
4. மொகுதூம் பாத்திமா இர்ரிஃபா – க.பெ. தோல்சாப்பு. எம்.எல். முஹ்யித்தீன் அப்துல் காதர்
5. சாகுல் ஹமீது அகமது மீராநாச்சி – க.பெ. எம்.ஏ. சுல்தான் அப்துல்காதர்
6. செய்யிது பல்கீஸ் – க.பெ நோனா முஹம்மது லெப்பை
7. முஹம்மது சுலைஹா – .பெ பிரபு.எஸ்.எம். செய்யிது முஹ்யித்தீன் ஆலிம் ஜலாலி
8. சூபி ஹஸீனா – க.பெ. ஊண்டி செய்யிது முஹம்மது சாலிஹ்.

காயல்பட்டினம், மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் பேராசிரியராக சுமார் 27 வருடங்கள் பணியாற்றி எண்ணற்ற ஆலிம்களை உருவாக்கி உள்ளார்கள்

இவர்களின் பணி மிகச் சிறப்பாக இருந்தது. இவர்கள் மௌலவி அபூபக்கர் கிப்லா ஹழ்ரத் ரஹிமஹுல்லாஹ், கேரளா கே.கே.அபுபக்கர் ஹழ்ரத் ரஹிமஹுல்லாஹ் போன்ற எண்ணற்ற ஆலிம்களுடன் இவர்கள் பணியாற்றினார்கள்.

காயல்பட்டினம், காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் சுமார் 33 வருடத்திற்கும் மேலாக இமாமாக பணியாற்றியுள்ளார்கள்.

தமது மாமாவும், ஷெய்குமான ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களிடமிருந்து ‘கிலாபத்தை’ 1978 ஆம் வருடம் காயல்பட்டினம் ஸூபி மன்ஸிலில் வைத்து பெற்றார்கள்.

காயல்பட்டினத்தில் 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஜும்ஆ பயான் விவாதத்தில்’ ஷெய்குனாவுக்கு உதவியாக அன்னாரின் கலீபாக்களான மௌலவி அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் கத்தஸல்லலாஹு ஸிர்ரஹுல் அஜீஸ், மௌலவி எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ரஹ்மானி பாகவி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் இவர்களும் இருந்தார்கள். இதன் விபரம் sufimanzil.org இணையதளத்தில் காணலாம்.
இதனால் பித்னாவாதிகள் இவர்களுக்கு எண்ணற்ற தொந்திரவுகள் கொடுத்தனர். எதற்கும் அசைந்து கொடுக்காமல் ஷெய்குனா சென்ற வழியிலேயே சென்றார்கள்.

ஊரின் நடப்புகளை வரலாறுகளை தொள்ளத் தெளிவாக பேசி, வழிகேடர்களை மக்களுக்கு அடையாளம் காட்டினார்கள். தப்லீக் ஜமாஅத்தினர்கள் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு ஊரில் உலா வந்தபோதும், அதை வெளிப்படையாகப் பேசி தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கும், வஹ்ஹாபிகளுக்கும் காயல்நகரில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்கள்.

காயல்பட்டினத்தில் 1990 ஆம் ஆண்டு தப்லீக் ஜமாஅத்தினர் (மௌலவி அப்துல்லாஹ், மௌலவி ஹாமித் பக்ரி மன்பஈ போன்றோர்) அல்லாஹ் பொய் சொல்ல சக்தியுடையவன் என்றும் அதற்கு ஆதாரம் உள்ளது என்றும் விவாதத்திற்கு அழைத்த போது, சக கலீபாவான மௌலவி எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுடன் சேர்ந்து விவதத்தில் ஈடுபட்டு தப்லீக் ஜமாஅத்தினர்களை விரண்டோடச் செய்தார்கள். இதன் ஒலிநாடா sufimanzil.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தப்லீகை ஆதரிக்கும் ஜாவியா ஆலிம்களும், அதை எதிர்க்கும் மஹ்லறா ஆலிம்களும் தப்லீக் பற்றிய விவாதத்தை காயல்பட்டினம் அம்பலமரைக்காயர் தெரு, வாவு காதர் ஹாஜி அவர்கள் வீட்டில் வைத்து கடந்த 11-12-08-1998 ல் நடத்தியபோது, அதில் கலந்து கொண்டு, தப்லீக் ஜமாஅத்தினர்களை ‘ரஷீத் அஹ்மது கங்கோஹி வஹ்ஹாபியை ஆதரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொள்ளச் செய்து அவர்களை விரண்டோட செய்ததில் இவர்களும் பங்குபற்றினர்.

தமது ஒரே மகனான டபிள்யு. எஸ்.எம். மொகுதூம் முகம்மது அவர்களை ஹிஜ்ரி 1416 ஸபர் பிறை 25 (24-07-1995) அன்று மறைந்தார்கள். அன்னார் குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தங்களது 64 ஆம் வயதில் புனித ஹஜ்ஜு, ஜியாரத் யாத்திரையை 2004 ஆம் வருடம் முடித்தார்கள்.

அன்னாரின் 5ஆவது மகள்; டபிள்யு. எஸ்.எம். செய்யிது பல்கீஸ் ஹிஜ்ரி 1426 ரபீயுல் ஆகிர் பிறை 14 (25-05-2005) அன்று வபாத்தாகி விட்டார்கள்.

ஹழ்ரத் அவர்களின் துணைவியார் ஹிஜ்ரி 1428 ரபீயுல் ஆகிர் பிறை 21 (08-05-2007) அன்று மறைந்தது அவர்களை ஆழத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

மிக எளிமையாக வாழ்ந்த அவர்களை யாரும் எவ்வித தடையுமில்லாமலும் எளிதாகப் பார்க்க முடிந்தது. அவர்களிடம் எவ்வித மார்க்கப் பிரச்சனைகளுக்கு கேட்டுப் போனால் புரியும்படி, தெளிவாக விளக்கம் தருவார்கள்.
மிகவும் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களான இவர்கள், மத்ரஸா – மார்க்க கல்வியுடன் உலகக் கல்வியையும் சேர்த்துக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், அதற்காக தம்மால் இயன்றளவு முயற்சியும் மேற்கொண்டார்கள். சுன்னத் வல் ஜமாஅத்தின் இளைஞர்கள் நன்றாக படித்து வேலைக்கோ அல்லது வியாபாரம் செய்தோ நல்லமுறையில் பொருள் தேட வேண்டும். அப்போதுதான் யாரையும் பொருளாதாரத் தேவைகளுக்காக சார்ந்து இருக்காமல் நமது கொள்கையை உறுதியாக பின்பற்றவும் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் முடியும் எனக் கூறுவார்கள்.

அஸ்ஸெய்யிது அப்துஷ்ஷகூர் ஜீலானி ரழியல்லாஹு தஆலா அன்ஹு, அஷ்ஷெய்கு முஜாஹிதே மில்லத் ஹபீபுர் ரஹ்மான் ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு, அஸ்ஸெய்யிது மழ்ஹர் ரப்பானி ஹழ்ரத் காதிரி மத்தலில்லாஹில் ஆலி, அஸ்ஸெய்யிது நஜீம் சர்க்கார் மத்தலில்லாஹில் ஆலி, அஸ்ஸெய்யிது ஷம்ஸுல் ஹக் காதிரி மத்தலில்லாஹில் ஆலி போன்ற எண்ணற்ற ஷெய்குமார்களை சந்தித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் மிக முக்கிய அங்கத்தினராக பணியாற்றியிருக்கிறார்கள்.
தமது பணியினை தொடர்ந்து ஆற்றிட தமது மகளை மணமுடித்த மருமகனார் பிரபு எஸ்.ஜே. செய்யிது முஹ்யித்தீன் ஆலிம் ஜலாலி தவ்வலல்லாஹு மஅஸ்ஸலாமத்தி வல் ஆஃபியா அவர்களை தமது கலீபாவாக ஹிஜ்ரி 1432 முஹர்ரம் மாதம் பிறை 5 (12-12-2010) ல் நியமனம் செய்திருக்கிறார்கள்.

ஹிஜ்ரி 1435, ரபீயுல் அவ்வல் பிறை 8, 10-01-2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மறைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அன்னார் இமாமாக பணிபுரிந்த காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வருடம் தோறும் ரபீயுல் அவ்வல் பிறை 8 உரூஸ் முபாரக் நிகழ்வுகள் இப்பள்ளியில் நடைபெற்று வருகிறது

Check Also

நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…