மாபாதகர்கள் முன்னிலையிலும் உண்மையே பேசிய உத்தமர்
பாரசீக நாட்டில் ஜீலான் என்ற நகரில் நபிகள் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச பரம்பரையில் வந்த பாத்திமா அபூசாலிஹ் என்ற தம்பதிகள் சீரும் சிறப்புமாக இஸ்லாமிய நெறி தவறாது வாழ்ந்து வந்தனர். இத்தம்பதிகளுக்கு புனித நோன்பு பிறை 1 அன்று ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அப்துல்காதிர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
அப்துல்காதிர் அவர்கள் சிறுவயது பிராயத்திலேயே இஸ்லாமிய மார்க்க கல்வியை தம் தாய் தந்தையிடம் கற்றனர். திருக்குர்ஆனை ஓதி முடித்தனர். அவர்களுக்கு அக்காலத்தில் மார்க்க கல்வி கற்பதில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமான பாக்தாது நகர் சென்று கல்வி கற்பதற்கு ஆர்வம் இருந்தது. இதை தமது தாயார் அவர்களி;டம் சொன்னார்கள்.
தாயார் அவர்களும் இதற்கு விருப்பம் தெரிவித்து மகனை மார்க்க கல்வி கற்பதற்கு பாக்தாது நகர் செல்ல ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர். பாக்தாது நகர் செல்லும் வணிக குழுவுடன் இவர்களையும் சேர்த்து அனுப்ப முடிவு செய்தனர். மகனிடம் இவ்விசயத்தை எடுத்துச் சொல்லி அவர்களை அனுப்பும் போது,
'மகனே! உன்னை மார்க்க கல்வி கற்பதற்காக பாக்தாது நகர் அனுப்பி வைக்க முடிவு செய்து வணிக குழுவுடன் சேர்த்திருக்கிறேன். நான் உன்னிடம் ஒன்றை கூற விரும்புகிறேன். அது என்னவெனில், நீ எச்சூழ்நிலையிலும், எக்காரணத்திற்காகவும் பொய் பேசக்கூடாது' என்று சொல்லி அதற்கான உறுதி மொழியையும் வாங்கி கொண்டனர். அதன்பின் கல்வி கற்பதற்கான செலவுகளுக்கு அவர்களின் சட்டையின் உட்புறத்தில் 40 தங்க காசுகளை மறைத்து வைத்து தைத்து அனுப்பினர்.
அப்துல்காதிர் அவர்களும் தாயாருடன் விடை பெற்று அந்த வணிகக் குழுவுடன் பயணமாயினர். வணிகக் குழுவினர் பயணம் சென்று கொண்டிருக்கும் போது, காட்டுப்பகுதியில் கொள்ளையர்கள் அவர்களை வழிமறித்து அவர்களிடமிருந்த பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
அதன்பின் சிறுவனாக இருந்த அப்துல்காதிர் அவர்களிடம் வந்து உன்னிடம் என்ன இருக்கிறது? என்று வினவினர். அதற்கு அப்துல் காதிர் அவர்கள் என்னிடம் 40 தங்க காசுகள் எனது சட்டைப்பையில் மறைத்து தைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். தங்கள் தாயாரிடம் உறுதி மொழி சொன்னபடி மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்கள் பொய் பேசவில்லை.
இதைக் கேட்ட திருடர்கள் அதை நம்பாமல் எள்ளி நகையாடிச் சென்று தம் தலைவனிடம் இதைப் பற்றி சொன்னார்கள். தலைவன் உடனே அங்கு வந்து அப்துல்காதர் அவர்களிடம் உன்னிடம் என்ன இருக்கிறது? என்று மிரட்டி கேட்டார். அதற்கும் அவர்கள் முன்பு சொன்ன பதிலையே சொன்னார்கள்.
தலைவனும் அதை நம்பவில்லை. இந்த சிறுவனி;டம் இவ்வளவு தொகை இருக்க முடியுமா? அவர் பொய் சொல்கிறார் என்று எண்ணினான். பின்பு அவனுக்கு ஒரு யோசனை தோன்றி, அவர்களை சோதித்து பார்க்க நாடினான். அதன்பின் அவர்களை சோதித்ததில் அவர்கள் சொன்னபிறகாரம் சட்டையின் உட்புறத்தில் 40 தங்க காசுகள் இருக்க கண்டான்.
உடனே கொள்ளையர்கள் ஆச்சரியமுற்று, நீர் உண்மைதான் சொன்னீர். ஆனால், நீ என்னிடம் பொய் சொல்லி தப்பித்துக் கொண்டிருக்க முடியும். அதை நீர் செய்யவில்லை. அதற்குரிய காரணம் என்ன? என்று வினவினான்.
அதற்கு அப்துல்காதர் அவர்கள், நான் புறப்படும்போது எனது தாயார் அவர்கள் என்னிடம் எந்நிலையிலும் பொய்யுரைக்கலாகாது என்று சொல்லி அனுப்பினார்கள். அதன்படியே தாயாரின் சொல்லை மதித்தே உண்மை பேசினேன் என்று கூறினார்கள்.
கொள்ளையர்கள் ஆச்சரியமுற்று, தயாரின் பேச்சைக் கேட்டு இவர் உண்மை பேசியிருக்கிறார். நாம் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்து மக்களிடம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது, இறைவனின் தண்டனைக்கு உள்ளாகுவோம் என்று பயந்து மனம் திருந்தி அப்துல்காதிர் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். கொள்ளையடித்த பொருட்களை திருப்பிக் கொடுத்தனர்.
அதன் பின் அவர்கள் மார்க்க நெறியில் சிறந்து விளங்கி அனைவர்களும் இறைநேசர்களாயினர்.
படிப்பினை:
1. எச்சூழ்நிலையிலும் பொய் உரைக்க கூடாது.
2. பெற்றோர்களை மதித்து அவர்கள் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.
3. தவறான காரியங்களில் ஈடுபடுவது கூடாது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…