விருந்து வைபவங்கள்
நமது நகர் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ஊர் ஆகும். நமதூரில் விருந்துகள் திருமணத்தை ஒட்டி வைக்கப்படும் வலீமா, மருவுணம், தண்ணிக் குடி சாப்பாடு, குட்டி மருவுண விருந்துகளும், சுன்னத் மற்றும் பெண்கள் பாலிகானதை ஒட்டி வைக்கப்படும் விருந்துகளும், பிள்ளைகள் பெயர் விடும் வைபவம், மாப்பிள்ளை பேசியதற்கு வைக்கப்படும் விருந்துகளும்,கந்தூரியில் வைக்கப்படும் விருந்துகளும், நண்பர்கள் சேர்ந்து வைக்கும் பார்ட்டி என்ற விருந்துகளும், விருந்தாளிகள் வெளியூர்களிலிருந்து வருகை தந்தால் வைக்கப்படும் விருந்துகளும், ஹஜ்ஜிற்கு செல்லும்போதும், அங்கிருந்து வரும் போதும் வைக்கப்படும் விருந்துகளும் இன்னும் பிற விருந்துகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பொதுவாக விருந்து வைக்கப்படும் போது மதியமாக இருப்பின் சோறு, கறி, கத்தரிக்காய், புளியானம் அல்லது நெய்ச்சோறு, கறி, மாங்காய் கறி அல்லது தற்போது வந்துள்ள பிரியாணி, பச்சடி போன்றவைகள் வைக்கப்படுகின்றன. இரவில் முன்னர் மேற்கூறியவைகள்தான் வைக்கப்பட்டு வந்தன. தற்போது நிலைமை மாறி இடியாப்பம், கறி, சவ்வரிசி, ரொட்டி போன்றவைகளும் சில இடங்களில் இட்லி, தோசை, வடை, கறி போன்றவைகளும் வைக்கப்படுகின்றன.
சோறு தாலங்களில் வைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. ஆரம்பத்தில் ஆண்கள் ஒரு தாலத்திற்கு (இதை சஹன் எ ன்றும் சொல்வார்கள்) மூன்று பேரும் பெண்கள் நான்கு பேர்களும் அமர்ந்து சாப்பிடுவார்கள். காலப்போக்கில் இது ஆண்கள் இரண்டாகவும், பெண்கள் மூன்று பேராகவும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுகிறார்கள். தற்போது பெண்கள் இரண்டு பேராக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். மஹ்லறா கந்தூரி சாப்பாடுக்கு மட்டும் ஒரு சஹனுக்கு மூன்று நபர்கள் இருந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. தற்போது அந்த சாப்பாடும் நின்று ஓலைப் பெட்டியில் சோறு போடப்படுகிறது.
சஹனில் இரண்டு சிட்டி கறி, ஒரு சிட்டி கத்தரிக்காய் அல்லது மாங்காய் கறி, புளியானம் வைக்கப்படுகிறது. சஹனுக்கு ஆண்களில் மூன்றுபேர் அமர்ந்தால் அவர்களுக்கு என்று ஒரு சிட்டி கறி கூடுதலாக கொடுக்கப்படுகிறது.ஆரம்பத்தில் சுட்ட களிமண் சிட்டியில்தான் கறி, கத்தரிக்காய் வைக்கப்பட்டது. மேலும் தண்ணீர்ர் சுட்ட களிமண் சிறிய பானை(கலயத்தலில்) வைக்கப்பட்டது. தற்போது கறி, கத்தரிக்காய் சில்வர் கிண்ணம் அல்லது பிளாஸ்டிக் டிஸ்போஸல் கிண்ணங்களில் வைக்கப்பட்டு தண்ணீர் மினரல் வாட்டர் பாக்கட் அத்துடன் கொடுக்கப்படுகிறது.
கறியை களறி கறி என்று சொல்கிறார்கள். இந்த கறியின் ருசி வேறு எங்கேயும் கிடைக்காது. அப்படிபட்ட தனி ருசியானது. புளியானத்தை காயல்பட்டணத்தை சார்ந்த மருத்துவர் அப்பா என்ற மகான் அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் ஐக்கிய விளையாட்டு சங்கத்தை ஒட்டிய ஷெய்கு சலாஹுத்தீன் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் இந்த மையவாடியை சுத்தம் செய்யும் போது இவர்களின் உடல் அப்படியே இருந்ததை பலர் பார்த்திருக்கிறார்கள்.
பெரிய சாப்பாடாக இருப்பின் ஜமாஅத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் பரிமாறுகிறார்கள்(விளம்புகிறார்கள்) சாப்பாடு வைக்கப்படும் இடத்தை பந்தி என்று அழைக்கிறார்கள். சிறிய விருந்து வைபவமாக இருப்பின் உறவினர்களே பரிமாறி கொள்கிறார்கள்.
பெண்களுக்கு உறவினர்கள் சேர்ந்து பரிமாறுகிறார்கள். சாப்பாடு அனைத்தும் வைத்து முடிக்கப்பட்ட பின்னர்தான் பிஸ்மி சொல்லப்படும் . அதன்பின்தான் சாப்பிட ஆரம்பித்த காலம் மாறி தற்போது சாப்பாடு வைத்தவுடன் சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
சோறு அதிகம் தேவைப்படுபவர்களுக்கு சோறு தாளத்தில் கொடுக்கப்படுகிறது. இதற்கு போடு சோறு என்று பெயர். பெண்களுக்கு கத்தரிக்காய் அதிகம் கொடுக்கப்படுகிறது.புளியானம் ஜொக்கு அல்லது போச்சி எனப்படும் பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டு ஊற்றிக் கொடுக்கப்படுகிறது.
வெளியூர்களிலிருந்து வரும் விருந்தாளிகளுக்கு தங்கும் இடவசதி தங்கள் வீடுகளிலோ அல்லது தெரிந்த நபர்கள் வீட்டிலோ ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தனியாக கவனிப்புகள் காட்டப்படுகின்றன. பெரும்பாலும் சாப்பாடுகள் பள்ளி வளாகங்களிலோ, தெருக்களில் பந்தல் அமைத்து அதிலோ, திருமண மண்டபங்களிலோ வைக்கப்படுகின்றன.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…