Home வழக்கங்கள் திருமண பழக்கவழக்கம்
வழக்கங்கள் - November 8, 2010

திருமண பழக்கவழக்கம்

Wedding
Wedding
உலகில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பழக்கவழக்கங்கள் உள்ளன. அப்பழக்கவழக்கங்கள் உலக நடைமுறை பழக்கத்திற்கு மாற்றமாகவோ ஒத்துப்போயோ   இருக்கலாம்.சில பழக்கவழக்கங்கள்வித்தியாசமாகவும்,  ஆச்சரியப்படத்தக்க அளவிலும் இருக்கும். அவ்வாறு உள்ள  பழக்கவழக்கங்களில் காயல்பட்டண மக்களுக்கு என்று தனியாக உள்ள பழக்க வழக்கங்களை இங்கே  நாம்  விவரித்துக் காட்ட வேண்டியுள்ளது.       

 
திருமண பழக்கவழக்கம்:

 ஒரு ஆணுக்குத் திருமணம் முடிந்தவுடன் அவன் தன்னுடைய வீட்டிற்கு தனது மனைவியை அழைத்து வந்து இல்லறவாழ்வில் ஈடுபடுவதுதான் வழக்கம். இவ்வழக்கம் மற்ற சமுதாயத்திலும் உள்ளது. 

 
காயல்பட்டணத்தில் வாழும் முஸ்லிம்கள் திருமணம் முடிந்தவுடன் தம் மனைவி வீட்டிற்கு குடியேறி இல்லற வாழ்வு வாழ்வதுதான் வழக்கமாக உள்ளது. இதற்கு காரணத்தை நோக்கும் போது, காயல்பட்டணத்தில் காழி(நீதிபதி)யாக இருந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரரான மகான் ஹஜ்ரத் காழி செய்யிது அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் இந்த வழக்கம் ஏற்பட காரணமாயிருந்தார்கள் என்று தெரியவருகிறது. அவர்களின் காலத்திலிருந்து தான் இந்த வழக்கம் இவ்வூரிலும் இவ்வூர் தொடர்புடைய கீழக்கரை, அதிராம்பட்டினம், தொண்டி போன்ற ஊர்களிலும் நடைமுறையில் இருக்கிறது.
 
காரணம்
 
ஒருமுறை காழி அலாவுத்தீன் வலி அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருத்தி மிகவும் கஷ;டத்துடன் கிணற்றில் தண்ணீர் இறைத்து அதை குடத்தில் சுமந்து கொண்டு செல்வதை கண்ணுற்றார்கள். அதை விசாரித்தபோது அந்தப் பெண்ணுடைய மாமியார் தான் இதை செய்யச் சொன்னதாக தெரியவந்தது. இது அவர்கள் மனதை மிகவும் நெருடியது. இரக்க குணம் கொண்ட காழியார் அவர்கள் தீர்க்க ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி எமதூரில் இனிமேல் மாமியார்களின் கொடுமை நடைபெற நான் அனுமதிக்கமாட்டேன். ஆகவே அதற்குப் பகரமாக மாப்பிள்ளை திருமணம் முடிந்தவுடன் பெண் வீட்டில் வாழ்ந்தால் இந்த கொடுமைகள் நடைபெற வாய்ப்பில்லை. மாறாக பெண்ணின் தாயாருடன் பெண் இருப்பதால் மிகவும் பாதுகாப்புடன் அப்பெண் இருப்பாள் என்று கருதி இந்த முறையைக் கொண்டு வந்தார்கள்.
 
காழியின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அன்றுமுதல் இன்றுவரை இந்த ஊர் மக்கள் திருமணம் முடிந்தபின் பெண்வீட்டிற்கு இல்லற வாழக்க்கை வாழ சென்று விடுகிறார்கள்.  காழியின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு நடப்பது இஸ்லாமாக இருப்பதால்  இன்றுவரை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 
 
இதையொட்டி வந்த வழக்கங்கள்:
 
இந்த வழக்கத்தை ஒட்டி இந்த ஊரில் திருமண நடைமுறையே மாறிவிட்டது. பொதுவாக பெண் வீட்டிற்குச் சென்றுதான் மாப்பிள்ளை பெண் பார்க்கும் வழக்கம் உள்ளது. ஆனால் இங்கு பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை கேட்பது வழக்கம்.
 
மாப்பிள்ளை பேசி முடித்தவுடன் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் சேர்ந்து தங்கள் உறவினர்களை அழைத்து பொதுவான ஒரு இடத்தில் மாப்பிள்ளை பெண் பேசிய விபரங்கள் அனைத்தையும் கலந்து பேசி ஒரு சீட்டில் எழுதி மாப்பிள்ளை, பெண் வீட்டாருக்கு தலா ஒரு காப்பி வீதம் வைத்துக் கொள்வார்கள். சில சமயத்தில் அங்கேயே திருமண தேதியை முடிவு பண்ணவும் செய்வார்கள்.இதற்கு 'சம்பந்தம் கலத்தல்' என்று  சொல்வார்கள்.
 
மாப்பிள்ளை பேசியவர்கள் திருமணம் முடிக்க நாடினால் இருவீட்டாரும் கலந்து பேசி ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கள் உறவினர்களுடன் ஒரு சிறு வைபவம் போல் வைத்து திருமண தேதியை குறிப்பார்கள். இதற்கு 'நாள் குறித்தல்' என்று பெயர். இதில் திருமணம் நடைபெற வேண்டிய இடம், நாள், நிகாஹ் எழுதக் கூடிய ஆள், திருமண விருந்து பற்றிய விபரம் ஆகியவைகளும் பேசி முடிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…