திருமண வைபங்கள்
பெண்கள் வயதுக்கு வருதல்
பெண்கள் வயதுக்கு வந்தது தெரிந்ததும் அதை சொந்த பந்தங்களுக்கும் மற்றும் தெரிந்தவர்களுக்கும் சொல்லியனுப்புவார்கள். வயதுக்கு வந்த பெண்ணை அலங்காரம் பண்ணி தண்ணீர் ஊற்றும் வரை வைத்திருப்பார்கள். சொந்தபந்தங்கள், தெரிந்தவர்கள் வந்து பார்த்து முகர்ந்து 'கூடிய சீக்கிரம் திருமணம் வரட்டும்' என்று துஆ செய்து செல்வார்கள். அந்தப் பெண்ணிற்கு அன்பளிப்பு பணமாகவும், பொருட்களாகவும் கொடுப்பார்கள். தண்ணீர் ஊற்றும் நாளில் சொந்தபந்தங்களை அழைத்து விருந்து வைப்பார்கள். இது சில குறிப்பிட்ட பகுதியில்தான் நடக்கிறது. ஏனைய பகுதிகளில் இந்த வைபவம் நடப்பதில்லை.
அதுவரை தனியாக ஓடித்திரிந்த இந்த பெண் தற்போது தலைக்கு முக்காடிட்டு பெண் துணையுடன்தான் வெளியே செல்வாள். பள்ளிக்கூடத்திற்கும், மற்றும் வெளியிலும் செல்வதற்கு தன் தாயார், சொந்தபந்தங்களின் உதவியை இவள் நாடியிருக்க வேண்டும்.திருமணம் முடியும்வரை இதேநிலைதான்.
மாப்பிள்ளை பார்க்கும் படலம்:
காயல்பட்டணத்தில் மிகப்பெரும்பான்மையினர்கள் ஊருக்குள்ளேயே அதுவும் குடும்பத்திற்குள்ளேயே மணமுடித்துக் கொள்கிறார்கள். சிறுவயதிலேயே மாப்பிள்ளை பெண் பேசி விடுகிறார்கள். சொந்தபந்தமாக இருப்பினும் சிறுவயதில் பேசிய சம்பந்தத்தால் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கும், மாப்பிள்ளை பெண் வீட்டிற்கும் செல்ல வெட்கப்படுவார்கள். அவர்கள் வீட்டுப் பக்கத்தில் கந்தூரி மற்றும் விசேஷங்கள் நடந்தால் மட்டும் பெண்ணை வீட்டில் தங்க வைப்பார்கள். பேசப்பட்ட மாப்பிள்ளையை கண்டாலோ, அல்லது அவர் வருகிறார் என்று சொன்னாலோ பெண் வெட்கப்பட்டு ஓடி விடுவாள். சொந்தபந்தங்கள் இல்லாத இடத்தில் பெண் பேசப்பட்டால் மாப்பிள்ளை வீட்டின் சொந்தபந்தங்களைக் கண்டும் பெண் வெட்கப்பட்டு ஓடுவது வழக்கமாக இருக்கிறது.
ஸெய்யிதினா சுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம்முடைய மகளை மணமுடிக்க நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வேண்டியதையும், ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மகள் ஹப்ஸா நாயகி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மணமுடிக்க ஸெய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வேண்டியதையும் இங்கு நினைவு கூறத்தக்கது. அதன் அடிப்படையிலேயே காயல் நகரில் பெண் பார்க்க மாட்டார்கள். மாப்பிள்ளைதான் பார்ப்பார்கள். ஒரு வீட்டில் நல்ல மாப்பிள்ளை இருப்பதாக கேள்விப்பட்டால் முதலில் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரித்து தமக்கு பிடித்தமென்றால், மாப்பிள்ளை வீட்டிற்கு தெரிந்த நபர்களை வைத்து முதலில் கேட்டு வரச் சொல்வார்கள். நல்ல சமிக்ஞை கிடைத்தால் பெண் வீட்டிலிருந்து பெண்கள் மாப்பிள்ளை கேட்டு செல்வார்கள். மாப்பிள்ளை வீட்டில் சம்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டபின் ஆண்கள் சென்று எல்லாம் பேசி முடிப்பார்கள். அதற்கென பெரியவர்கள் சேர்ந்து ஒப்பந்த சீட்டு எழுதிக் கொள்வார்கள். இரு வீட்டிற்கும் தலா ஒரு காப்பி எடுத்துக் கொடுக்கப்படும். அதன்படி செயல்படுவார்கள். இது குடும்பத்திற்கு வெளியில் மாப்பிள்ளை பேசும்போது செய்யும் நடைமுறையாகும். சொந்தத்திற்குள் பேசினால் எல்லாம் வாய்மூலம் பேசிக் கொள்வார்கள்.
அதன்பின் 'பாலும் சீனியும்'; என்று ஒரு வைபவம் போல் நடத்தி பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு பால், சீனி, பண்டங்கள் போன்றவைகளை தம் சொந்தபந்தங்களுடன் சென்று கொடுப்பது வழக்கம். அவ்வாறு வரும் பண்டங்கள் இருக்கும் பாத்திரங்களை திரும்ப மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுத்தனுப்பும்போது மாப்பிள்ளை வீட்டிலிருந்து அதில் பண்டங்கள் போட்டு திருப்பி அனுப்புவதும் வழக்கம். பாலும் சீனியும் கொடுத்தாச்சு என்றாலே பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளை உறுதி என்று ஆகிவிட்டது. பெண் பேசிவிட்டாலே இருபெருநாட்களுக்கும் பெண்ணுக்கு என்று புதிய புடவை பேசி வைத்திருக்கும் மாப்பிள்ளை (சம்பாதிக்கத் தொடங்கியதும்) எடுத்துக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருந்து வருகிறது.
திருமணம் முடிக்க நாடினால் இருவீட்டாரும் சேர்ந்து ஒரு வீட்டில் வைத்து ஆட்களை அழைத்து 'நாள்குறிக்கும் வைபவம்' என்று ஒன்று வைப்பார்கள். அதில் திருமணம் முடிக்க வேண்டிய நாள், இடம், விருந்து பற்றிய குறிப்புகள் போன்றவைகள் இடம் பெற்றிருக்கும். அதை இருவரும் எழுதிக் கொள்வார்கள். இருவீட்டாரும் சம்பந்தப்பட்டிருக்கும் விசேஷங்களுக்கு செலவுகளை சரிபாதியாக பகிர்ந்து கொள்வார்கள். சொந்தங்கள் சேர்ந்து 5 அல்லது ஆறு அல்லது அதற்குமேல் ஜோடிகளின் கூட்டுக் கல்யாணங்கள்தான் நடைபெறும். விருந்தும் ஒன்றாக வைப்பார்கள். அதன் செலவுகளை விகிதப்படி பகிர்ந்து கொள்வார்கள். கல்யாணங்கள் தைக்கா, மஹ்லறா, பள்ளிவாயில்கள் மற்றும் கல்யாண மண்டபத்தில் அல்லது ரோடுகளில் மேடை அமைத்து நடைபெறுகிறது.
திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டிற்கு பெண் வீட்டிலிருந்து 'சீப்பனியாம், வெள்ளரியாரம்' என்ற பண்டங்கள் கொடுத்து அனுப்பப்படுகிறது. அதை மாப்பிள்ளை வீட்டார்கள் தங்களது சொந்த பந்தங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.
கல்யாணத்திற்கு மாப்பிள்ளைக்கு 'உடுப்பு வைபவம்' நடைபெறுகிறது. பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை திருமணத்தன்று அணியும் ஆடைகளை ஒரு தட்டில் வைத்து அதை சொந்த பந்தங்களுடன் சென்று மாப்பிள்ளை வீட்டில் கொடுப்பார்கள். அப்படி கொடுப்பவர்களுக்கு மாப்பிள்ளை வீட்டில் உபசரிப்பு நடக்கிறது.
கல்யாணத்திற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணத்திற்கோ அல்லது விருந்திற்கோ சொல்லியனுப்ப சொந்த பந்தங்கள், தெரிந்தவர்களின் பட்டியல் போடப்படுகிறது. இதற்காக இரு வீட்டாரும்(மாப்பிள்ளை, பெண் வீட்டார்) அமர்ந்து தங்களுக்கு தெரிந்த சொந்த பந்தங்கள், வட்டாரவழியினர்(சுற்றுவட்டாரத்தினர்) கொண்ட பட்டியலை தயாரிக்கிறார்கள். அதை தயாரிப்பதற்கு ஏரியா வாரியாக திருமணத்திற்கு சொல்லக் கூடியவர் ஒருவர் இருக்கிறார். அவரை அழைத்து இணைந்து இவர்கள் பட்டியல் தயாரிக்கிறார்கள். இதற்கு 'அடாப்பு' என்று பெயர். இதை சொல்பவருக்கு அடாப்பு சொல்பவர் என்று பெயர். இந்த அடாப்பு சொல்பவர் தாங்கள் குறித்து வைத்திருந்த பட்டியல் பிரகாரம் வீடு வீடாக சென்று திருமணத்திற்கோ, விருந்திற்கோ அழைக்கும் நபர்களின் பெயரைச் சொல்லி வீடுகளில் அழைக்கப்பட்டவர்களின் பெயரையும் சொல்லி செல்வார். தலைவாசல் அல்லது வீடு மொத்தமாக இருப்பின் தலைவாசல் மொத்தம் என்று சொல்வார். தற்போது கல்யாண அழைப்பிற்கும், விருந்திற்கும் கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. அந்த கார்டை ஆண்களுக்கு அடாப்பு சொல்பவரும், பெண்களுக்கு சொந்த பந்தங்களிலுள்ளவர்களும் வீடு வீடாக சென்று வழங்குவார்கள். அடாப்பு சொல்பவருக்கு ஒரு நபருக்கு சொல்வதற்கு குறிப்பிட்ட தொகை பேசப்பட்டிருக்கும். பெண்கள் தங்கள் சொந்தபந்தங்களுக்கு பெரும்பாலும் மாலை நேரங்களில் சென்று திருமணத்திற்கு அழைப்பார்கள்.
கல்யாணங்கள் காலை அல்லது இரவுகளில் நடைபெறுகிறது. காலையில் 9 மணி முதல் 10 மணிக்குள் கல்யாணங்கள் முடிந்து விடுகின்றன. இரவு 8 மணிக்குள் கல்யாணங்கள் முடிந்து விடுகின்றன. கல்யாணத்திற்கு முன் 'அழைப்பு' என்று வரவேற்பு வைப்பார்கள். தெருவில் பந்தல் போடப்பட்டிருக்கும். அதில் கல்யாண மாப்பிள்ளை, அவரது தந்தை, சகோதரர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் இருப்பார்கள். அந்த அழைப்பிற்கு வரும் ஆட்களுக்கு சாக்லேட் இனிப்புகள் கொடுக்கப்படுகின்றன. சிலர் 'சர்பத்' என்ற பானம் வழங்குகிறார்கள். பூ, சந்தனம் வைக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.வரும் ஆட்கள் மாப்பிள்ளையின் தந்தை, மாப்பிள்ளைக்கு சலாம் கைலாகு கொடுத்து வாழத்துகிறார்கள்.
பெண் வீட்டில் பெண்ணின் தாயார், சகோதரிகள் மற்றும் சொந்தங்கள் அமர்ந்து வருகிறவர்களை வரவேற்பார்கள். அங்கு பிஸ்கட் மற்றும் இனிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்யாணத்திற்கு சொல்லிய பெண்களுக்கு விருந்து வைத்திருந்தால் பெரும்பாலும் அழைப்பில் ஒன்றும் கொடுப்பதில்லை. திருமணப் பெண் வீட்டில் தமது தோழியர்களுடன் இருப்பாள்.
ஆண்கள், பெண்கள் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள் என்று அறிவதற்கு இந்த அழைப்புக்கு வரும் ஆட்களை வைத்து கணிக்கிறார்கள். அழைப்பு மஃரிபிற்கு முன் முடிந்து விடுகிறது.
காலையில் நடைபெறும் திருமணத்திற்கு இரு வீட்டிலும் தனித்தனியே இரவில் 8.30 மணிக்கு சற்று சிறியதாக தங்கள் சுற்றுவட்டார சொந்தங்களை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். இரவில் நடைபெறும் திருமணத்திற்கு திருமணம் முடிந்தபின் விருந்து வைக்கிறார்கள். காலையில் பெரிய விருந்து சொந்தபந்தங்கள், தெரிந்தவர்கள், நண்பர்களை அழைத்து 'வலீமா விருந்து' வைக்கப்படுகிறது.
திருமணம் முடிந்த காலையில் மாப்பிள்ளையை குறிப்பிட்ட நபர்களை அழைத்து வந்து பசியாரம் சாப்பிட அழைக்கிறார்கள். அவரும் தம் தோழர்கள், சொந்தங்களுடன் சென்று பசியாரம் சாப்பிட செல்கிறார்;. அங்கு வாடா, வெள்ளரியாரம், சீப்பனியம், தேநீர் மற்றும் பண்டங்கள் வைக்கப்படுகின்றன. மாப்பிள்ளை பெண் வீட்டாரால் கேலி பண்ணப்படுகிறார். அதை சமாளிக்க மாப்பிள்ளையுடன் கூட சென்ற தோழர்கள் உதவுகிறார்கள்.
திருமணம்:
மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டு, பேண்ட் சர்ட் போட்டு பூமாலை, கையில் ஒரு பூச்செண்டு கொடுக்கப்பட்டு ஒளு எடுத்து இரண்டு ரக்அத் இஸ்திகாரா தொழுதுவிட்டு திருமணத்திற்கு தயாராகிறார். இவரை ரெடியாக்குவதற்கு நெருங்கிய தோழர்கள் உதவுகிறார்கள். பைத்து சபா(விற்கு முற்கூட்டியே இந்த கல்யாண விஷயத்திற்கு பைத்து சொல்லும்படி) பிள்ளைகள் வந்ததும் வீட்டில் பைத்து சொல்லப்படுகிறது. அதற்குள் மாப்பிள்ளை வீட்டில் சேரில் உட்கார வைக்கப்பட்டு தாயார், தந்தை, கம்மா போன்றோர் பால் கொடுத்து உச்சிமுகர்ந்து துஆ செய்து அனுப்ப தயாராகிறார்கள். அதன்பின் மாப்பிள்ளை தலைவாசல் வழியாக பைத்து சொல்லி வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். இடையில் வரும் ஜியாரத்துகளுக்கு பாத்திஹா ஓதப்படுகிறது. பைத் சபாவிற்கு என்று நன்கொடையாக ஒரு தொகை கொடுக்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட மாப்பிள்ளைகள் இருப்பின் முதலிலேயே பேசி முடிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் பைத்து சந்திக்கும்படி ஏற்பாடு செய்து அங்கிருந்து ஒன்றாக பைத்து கிளம்புகிறது. வழியில் தெரிந்தவர்கள் வீடு அல்லது வாப்பிச்சா வீடு இருப்பின் அங்கு சென்று பெரியவர்களை பார்த்து அவர்கள் பால் கொடுத்து உச்சி முகர்ந்து துஆ செய்து அனுப்பி வைக்கிறார்கள். திருமணம் நடக்கும் இடம் வரைக்கும் பைத்து செல்கிறது.
மண மேடையில் அமர்ந்ததும் மாப்பிள்ளைக்கு நிகாஹ் எழுதும் வைபவம் தொடங்குகிறது. முதலில் தப்தர் எனும் நிகாஹ் பதிவு ஏட்டில் உறவுகளிடமும் பெரியவர்களிடமும், மாப்பிள்ளையிடமும் கையொப்பங்கள் வாஙகப்படுகின்றன.
அதன்பின் நிகாஹ் குத்பா ஓதப்படுகிறது. அதன்பின் மாப்பிள்ளைக்கு நிகாஹ் என்னும் வாழ்க்கை ஒப்பந்தம் செய்யப்படுகிறது. வாழ்க்கை ஒப்பந்தத்தை சொல்லிக் கொடுக்கும் நபர் ஏற்கனவே பெண்ணிடமோ அல்லது பெண்ணின் வலிகாரரிடமோ அதற்கான உத்தரவைப் பெற்றிருப்பார். அதன்படி வாழ்க்கை ஒப்பந்தம்(ஈஜாப் கபூல்) நிறைவேற்றப்படுகிறது. அதன்பின் திருமண துஆ ஓதப்படுகிறது. திருணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகிறது. திருமணத்திற்காக கலந்து கொள்ள சொல்லியனுப்பிய அனைவருக்கும் வலீமா விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் பிஸ்கட் போன்றவை வழங்கப்படுவதில்லை. நிறைவேற்றும் கூட்டுத் திருமணங்கள் எனில் சில திருமணங்களைத் தவிர ஒரு குத்பாவில் அனைத்து வாழ்க்கை ஒப்பந்தங்களும் நடத்தப்பட்டு விடுகின்றன . நிகாஹ் எழுதிய ஹஜ்ரத் அவர்களுக்கும், குத்பா, துஆ ஓதிய ஹஜ்ரத்மார்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப ஹதியா கொடுக்கிறார்கள். திருமண தப்தர் உடைய பள்ளிவாசல் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்தபட்சமாக நிர்ணயித்திருக்கிறது. திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளைக்கு பெண்ணின் தந்தை, தாய்மாமன், பெரியப்பா போன்றோர் பால் கொடுக்கிறார்கள். வெள்ளியால் ஆன மோதிரமும் போடுகிறார்கள். திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் மாப்பிள்ளைக்கு சலாம் கொடுத்து துஆ செய்யச் சொல்கிறார்கள். பரிசுப் பொருட்களும் கொடுக்கப்படுகின்றன.
அதன்பின் மாப்பிள்ளையை பெண் வீட்டிற்கு பைத்து சொல்லி அழைத்துச் செல்வார்கள். பெண் வீட்டிற்கு முதலில் நுழையும்போது தலைவாசல் வழியாகத்தான் நுழைவார். அங ;கு அவருக்கு வெத்திலை பாக்கு தாம்பூலத்தில் வைத்து சுற்றி போடப்படுகிறது. அங்கு மாப்பிள்ளை தன் தோழர்களுடன் இருப்பார். பெண் அலங்காரம் செய்யப்பட்டு தனியொரு இடத்தில் இருப்பாள். அங்கு மாப்பிள்ளை அழைத்து செல்லப்பட்டு சுன்னத்தான வழிமுறையான பெண்ணின் முடியை தாய்மாமன் பிடித்துக் கொடுக்கிறார். அதற்கு நிகாஹில் ஓதிய துஆ ஓதப்படுகிறது. பிறகு சிலசமயம் மஹ்ர் தொகையை மாப்பிள்ளை பெண்ணிடம் இந்த சமயத்திலோ அல்லது முதலிரவு சமயத்திலோ கொடுக்கிறார். அத்துடன் மாப்பிள்ளை, பெண்ணை சொந்தபந்தங்கள் (உளுமுறியாத ஆட்கள்) உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார்கள்.
இதன்பின் மாப்பிள்ளை வேஷ்டி அணிந்து கொண்டு தாய் வீடோ அல்லது வலீமா விருந்து வைக்கப்படும் இடத்திற்கோ சென்று விடுவார். அதன்பின் பெண் வீட்டிலிருந்து பசியாரம் சாப்பிட அழைப்பு வருகிறது. தனது தோழர்களுடன் வந்து சாப்பிடுகிறார்.
திருமணம் முடிந்த மாலை பெண் அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்படுகிறாள். அதை சொந்தபந்தங்கள், தோழிகள் பார்த்து செல்கிறார்கள்.
இரவு திருமணம் முடிந்தால் அந்த இரவோ அல்லது அடுத்த இரவோ மாப்பிள்ளையும் பெண்ணையும் சேர்த்து விடப்படும். காலை திருமணங்களுக்கு திருமணம் நடந்த இரவே சேர்த்து விடப்படும். சேர்த்து விடும் முன்னால், மாப்பிள்ளை பெண் வீட்டார்களால் அழைக்கப்படுவார். மாப்பிள்ளை பெண் வீட்டில் நுழைந்ததும் பெண்கள் குலவையிட்டு வரவேற்பார்கள். மாப்பிள்ளையுடன் தோழர்களும், மாப்பிள்ளை வீட்டைச் சார்ந்த முக்கியமானவர்களும் வருகிறார்கள். அங்கு 'குத்ரத்'என்று ஒன்று செய்யப்படுகிறது. பெண்ணிற்கு காசுகளை ஒட்டி விடுவார்கள். அதை மாப்பிள்ளை எடுப்பார். அடுத்து பல்லாங்குழி மாப்பிள்ளையும் பெண்ணும் விளையாடுகிறார்கள். இருவரில் மாப்பிள்ளை வெல்வதாக மாப்பிள்ளை வீட்டார் அமைத்துக் கொள்வார்கள். இச்சமயங்களில் கேலி, கிண்டல் செய்யப்படுகிறது. அதன்பின் மாப்பிள்ளையும் பெண்ணும் தனியே ஒரு அறையில் விடப்படுகிறார்கள். மாப்பிள்ளை அந்த இரவிற்கு என்று தனியாக அன்பளிப்பு மனைவிக்கு கொடுக்கிறாள்.
மாப்பிள்ளை சில நாட்கள் கழித்து தனது முதல் மாத படியை பெண்ணிடம் கொடுக்கிறார். அதை அவள் தன் தாயாரிடம் கொடுக்கிறாள். தாயார் அவர்கள் அதை சொந்தபந்தங்களிடம் சொல்லி துஆ செய்ய சொல்கிறார்கள்.
அதிகாலையிலேயே மாப்பிள்ளை எழுந்து குளித்து தன் தாய் வீட்டிற்கு சென்று விடுவார். இரண்டு மூன்று நாட்களுக்கு மாப்பிள்ளையை பெண் வீட்டிலிருந்து சாப்பாட்டிற்காக அழைக்கப்படுகிறது. அதன்பின் அவர் பழகி அச்செயல் நடைமுறைக்கு வருகிறது.
பெண் வீட்டில் சாப்பாடு வைக்கப்படுகிறது. அதற்கு 'தண்ணீர்குடி சாப்பாடு' என்று பெயர். இதில் மாப்பிள்ளை தோழர்களும், மாப்பிள்ளையின் சொந்த பந்தங்களும் பெண் வீட்டாரால் அழைக்கப்படுகிறார்கள்.
அடுத்து மாப்பிள்ளை வீட்டாரால் ஒரு சாப்பாடு வைக்கப்படுகிறது. அதற்கு 'மருவுண சாப்பாடு(மறுவீடு புகுதல்)' என்று பெயர். பெண் அலங்காரம் செய்யப்பட்டு தன் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கப்படுகிறாள். அங்கு மாப்பிள்ளையின் தாயார் அல்லது உடன்பிறந்தோர் அவளுக்கு அன்பளிப்பாக நகைகளை அணிவிக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டின் அக்கம்பக்கத்துள்ளோர்களும் அன்பளிப்புகள் வழங்குகிறார்கள். இதற்கு முதல் மருவுணம் என்று பெயர்.
அதற்கடுத்தாற்போல் சில நாட்கள் கழித்து பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைக்கப்பட்டு தங்க வைக்கப்படுகிறார். இதற்கு குட்;டி மருவுணம் என்று பெயர். இதற்கும் நகைகள் அன்பளிப்பு செய்யப்படுகிறது. இனி தொடர்ந்து தன் விருப்பம்போல் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று வருகிறாள்.
ஆரம்பத்தில் திருமண விசேஷங்கள் சுமார் நாற்பது நாட்கள் நடப்பதுண்டு. அது குறைந்து 30 நாட்களாகி பின்பு ஒரு வாரமாகி, அதன் பிறகு மூன்று நாட்களாகி தற்போது ஒரே நாளில் விசேஷங்கள் முடிந்து விடுகின்றன.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…