சமுதாய கட்டமைப்பு
ஒவ்வொரு சமுதாயமும் ஒரு கட்டுக்கோப்பைக் கொண்டுள்ளன. அதன்படி இஸ்லாமிய சமுதாயம் ஒரு கட்டுக் கோப்பை கொண்டுள்ளது. அந்த கட்டுக்கோப்பு ஒழுக்கம் நிறைந்ததாகவும், அறிவாண்மையானதாகவும், அறிவியல் பூர்வமானதாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம். அந்த இஸ்லாமிய கட்டுக் கோப்புடன் கூடிய ஒரு கட்டுக்கோப்பை காயல்பட்டணம் மக்கள் கொண்டுள்ளனர். அந்தக் கட்டுக் கோப்புதான் நகர மக்கள் முன்னேறுவதற்கும், மாற்று சமுதாயத்தினர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் வழிவகுத்துள்ளது. மக்களை ஒழுக்க சீலர்களாகவும், மகான்களாகவும் மேம்படுத்தியுள்ளது.
காயல்பட்டணம் பெரும்பான்மையான முஸ்லிம்களைக் கொண்ட ஊராகும். ஊரைச் சுற்றி இந்து மதத்தவர்களும், கடற்கரையோரமாக கிறித்துவ மக்களும் அண்டை ஊர்களான திருச்செந்தூர், ஆறுமுகநேரியில் இந்துமக்கள் அதிகமாகவும், வீரபாண்டியன் பட்ணத்தில் கிறித்துவர்கள் அதிகமாகவும் வசித்து வருகின்றனர். இந்த மக்களுடன் காயல் நகர மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர் எனில், அதற்கு சமுதாயத்தின் பெரியவர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கோப்பே ஆகும்.
சமுதாயம் சிறந்து விளங்க வேண்டுமெனில் தாம் வாழும் வீடும் சிறந்து விளங்க வேண்டும். வீடு சிறந்து விளங்க அதில் வசிக்கும் மக்கள் சிறந்த மக்களாக இருக்க வேண்டும். அதற்காக நமது பெரியவர்கள் வீட்டின் ஒழுக்கத்தை மிகவும் கண்ணியமாக பேணி நடக்க செய்தனர். அதன் அடிப்படையில் வளர்ந்த மக்கள் நமது சமுதாயத்தை சிறக்க செய்தனர்.
குழந்தை பிறந்ததிலிருந்து மறையும் வரை ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒரு விதமான பழக்கவழக்கங்களை இஸ்லாமிய நெறியில் மக்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்த சமுதாயமாக மாற்றிய பெருமை நமது காயல் நகர முன்னோர்களுக்கு சாரும்.
வீடுகளில் பெரியவர்கள் சொல்படி கேட்டு நடப்பதற்கு சிறியவர்களுக்கும், சிறியவர்களிடம் எப்படி கண்டிப்பாகவும் அதே சமயம் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று பெரியவர்களுக்கும் நமது முன்னோர்கள் கற்றுத் தந்து இருக்கிறார்கள். அதன்படி பெரியவர்களும், சிறியவர்களும் நடந்து வருகிறார்கள். தாய்மார்களும் தங்கள் கணவன்மார்களிடமும், குழந்தைகளிடமும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் தெரிந்து நடந்து கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையால் சமுதாயம் மிகவும் கட்டுக்கோப்புடனும், சிறப்பாகவும் செயல்பட முடிகிறது.
குழந்தைகளுக்கான மத்ரஸாக்கள்:
குழந்தைகளுக்கு முதன் முதலாக குர்ஆன் ஆரம்ப அடிச்சுவடியிலிருந்து ஓத கற்றுக் கொடுக்கிறார்கள். இதை மரப்பலகைகளில் மரப்பிசின் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒருவித கறுப்பு மையால் எழுதுகிறார்கள். பலகைக்கு மாலா என்ற ஒன்றை பலகையில் தேய்த்து அதை காய வைத்து அதன்மேல் எழுதுகிறார்கள். தற்போது நவீனகாலத்தில் எஸ்ஸர்னல் குர்ஆன் என்ற புத்தகத்தை வைத்து ஓதி கற்றுக் கொடுக்கிறார்கள்.
குர்ஆனுடன் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை சுருக்கமாக சொல்லிக் கொடுக்கிறார்கள். அது:
எங்கள் நையினார் முஹம்மது நபி
மக்கத்தில் பிறந்து மதீனாவில் அடங்கப்பட்டார்கள்.
அவர்கள் தாயார் பெயர் ஆமீனா
தகப்பனார் பெயர் அப்துல்லா
பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிப்
முப்பாட்டனார் பெயர் அப்துல் முனாப்
குழந்தை பிறந்து பேசத் தொடங்கியதும் அல்லாஹ், ரஸூல் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் அவர்களிடம் தாய்மார்களும், பெரியவர்களும் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். குழந்தைகளுக்கு இஸ்லாமிய கல்வி கற்றுக் கொடுப்பதற்கென்றே ஆங்காங்கு மத்ரஸாக்கள் பள்ளிவாயில்களிலும், வீடுகளிலும் பெண்களுக்கு தைக்காக்களிலும் உள்ளன. அவை குழந்தைகளுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களையும், ஈமான் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற இன்னபிற விஷயங்களையும் கற்றுக் கொடுப்பதோடு ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறார்கள். அதற்கென்று தனியாக பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன்படி செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாணவ மாணவியர்களுக்கு உலக கல்விக் கூடங்களின் விடுமுறை நாட்களில் மத்ரஸாக்களை நடத்துகிறார்கள். முன்பு வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை ஆகிய இருதினங்களில் மத்ரஸாக்கள் நடைபெற்றதுண்டு. தற்போது வாரம் ஒருமுறை நடைபெறுகிறது.
நடத்தப்படும் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரீட்சை நடத்தப்படுகிறது. வருடத்திற்கு ஆண்டுவிழா மீலாது விழாக்கள் நடத்தப்பட்டு பேச்சு போட்டி, வினாடிவினா, மார்க்கப்போட்டிகள் நடாத்தி மாணவ மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறார்கள். ஆண், பெண் குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் விருத்தசேனம் என்ற கத்னா செய்துவிடுகிறார்கள்.
காலையில் எழுந்து பள்ளிவாயில்களில் சுப்ஹுத் தொழுக சென்றால் தெருக்களில் பெண்களின் குர்ஆன் ஓதும் சத்தம் கேட்பதுண்டு.
குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுத்தல்:
குழந்தைகள் தங்கள் சகோதர சகோதரிகளுடன் பாசமாகவும், நேசமாகவும் இருந்திடவும் சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு சொந்தங்களை அறிமுகப்படுத்தி அடிக்கடி சொந்தக்காரர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். குறிப்பாக வாப்பிச்சா அவர்கள் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியிருந்து வருகிறார்கள். வீட்டு விசேஷங்களுக்கும், தெரு விசேஷங்களுக்கும் வாப்பிச்சா வீட்டிலிருந்து அழைப்பு வந்து குழந்தைகள் அங்கு செல்வதுண்டு. இரு பெருநாட்களுக்கும் தமது வாப்பிச்சா வீடுகளுக்கு பிள்ளைகள் செல்வதுண்டு. அங்குள்ள பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பெருநாள் துட்டு என்று அன்பளிப்பாக வழங்குவதுண்டு.
பெரியவர்களை மதிக்கவும், தமது வயதொத்த சிறுவர்களுடன் அன்பாக நடந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்கிறார்கள். சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பெரியவர்கள் அவர்கள் கண்களுக்குத் தென்பட்டால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக உடனே விளையாட்டை நிறுத்திவிட்டு, அவர்கள் அவ்விடத்தை விட்டும் அகன்றதும் மீண்டும் விளையாட ஆரம்பிப்பார்கள். குழந்தைகள் வேஷ்டியை மடித்துக் கட்டியிருந்தால் அதை அவிழ்த்து விட்டு விடுவார்கள்.
சிறுகுழந்தைகள் முடிவெட்டாமல் அதிகமாக முடி வைத்திருப்பின், நகங்களை வெட்டாமல் இருப்பின் பெரியவர்கள் அவர்களை அழைத்து கண்டித்து வெட்டச் சொல்வார்கள். அவர்களின் வீட்டிலும் சென்று அவர்களின் தாயார் அவர்களிடமும் சொல்வார்கள். வேறு ஏதேனும் சேட்டை இருப்பின் அதை அவர்கள் வீட்டில் உரியவர்களிடம் சொல்லி கண்டிக்கச் சொல்வது நமதூர் பெரியவர்களின் வழக்கம்.
பள்ளிகளில் பெரியவர்களின் ஒழுக்க சோதனை:
காயல்பட்டணத்தில் உள்ள சென்ட்ரல் மேநிலைப் பள்ளி(முஸ்லிம் ஸ்கூல்), எல்கே. மேநிலைப் பள்ளி, ஜுபைதா பெண்கள் பள்ளி ஆகிய பள்ளிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளாகும். இப் பள்ளிகளை நிர்வாகம் செய்த எல்.கே. அப்பா, எம்.கே.டி. அப்பா போன்றோர் பள்ளிகளுக்கு திடீரென விஜயம் செய்து மாணவர்கள் படிக்கும் விதத்தையும், ஆசிரியர்கள் செயல்படும் விதத்தையும், மாணவர்கள் ஒழுங்காக சீருடை அணிந்து வருவது பற்றியும், முடிவெட்டுதல், நகம் வெட்டுதல் ஆகியவற்றைப் பற்றியும் ஒவ்வொரு மாணவரிடமும் விசாரித்து சரியில்லையென்றால் அதை சரிபடுத்திவிட்டு படிக்க வரும்படி சொல்வார்கள். பெரியவர்கள் அந்தளவு கண்டிப்பாக, ஒழுக்கமாக இந்த பள்ளிகளை நடத்தினார்கள்.
பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், தாய்மார்கள் பிள்ளைகளின் சேர்மானங்கள் (கூட்டாளிகள்) பற்றியும், பிள்ளை எங்கு செல்கிறான் அவன் பழக்கவழக்கங்கள் எப்படியுள்ளன என்பது பற்றியும் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். நல்ல கூட்டாளிகளுடன் சேருமாறு அறிவுறுத்துவார்கள். அடித்தும் திருத்துவார்கள்.
உரிய காலத்தில் கல்லூரிகளுக்கு படிக்க அனுப்புவதும் இல்லையெனில் வியாபாரத்திற்காக அனுப்புவதும் தாய்மார்களின் கடமையாக இருக்கும். இல்லையெனில் வியாபாரத்தை படிப்பதற்காக ஆந்திரா, சென்னை, கொழும்பு போன்ற நகரங்களுக்கு அனுப்பி வியாபாரத்தைக் கற்றுக் கொள்ளச் செய்வார்கள்.அதன்பின் திருமண வயதை அடைந்ததும் திருமணம் பேசி முடிப்பார்கள்.
தாய்மார்களின் கட்டுக்கோப்பு:
தாய்மார்கள் தங்கள் கணவன்மார்களுக்கு பணிவிடை செய்வதி;லும், குழந்தைகளைக் கவனிப்பதிலும், தமது சொந்த பந்தங்களின் வீடுகளுக்குச் சென்று உறவுகளை பலப்படுத்துவதிலும், தைக்காக்களுக்கு சென்று தொழுது, ஓதி வருவதிலும், மகான்களின் அடக்கவிடங்களுக்கு முறையாக சென்று தரிசிப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.
பெண்களை வெளியில் பார்ப்பதே அரிதாக இருந்தது. பெண்கள் அவர்களுக்கென்று அமைக்கப்பட்ட தனிப்பாதை(முடுக்கு)களில்தான் சென்று வந்தார்கள். முடுக்குகளுக்கு இடையில் ரோடுகள் குறுக்கிட்டால் அதை தாண்டிச் செல்வது ஏற்படுமானால் அந்த முடுக்கில் நின்று கொண்டு தெருவின் இருபுறங்களையும் ஆண்கள் யாரும் வருகிறார்களா? என்று நோட்டமிட்டுவிட்டு, அப்படி ஆண்கள் வரவில்லையெனில், தம்மை மூடிக் கொண்டு ரோட்டைக் கடப்பார்கள். ஆண்கள் வருதாயிருப்பின் அவர்கள் அந்த முடுக்கை கடப்பதுவரை காத்திருந்து இவர்கள் ரோட்டைக் கடப்பார்கள். தப்பித் தவறி பெண்கள் ரோட்டில் நடக்க ஆரம்பித்தால் ஆங்கே இருக்கும் பெரியவர்கள் பெண்களை பார்த்து சத்தம் போட்டு அதட்டி முடுக்கின் வழியே செல்லச் சொல்வார்கள்.
அதேபோல் ஆண்களும் பெண்களின் தனிப்பாதையான முடுக்கில் அந்த முடுக்கிலுள்ள பெண்களின் அனுமதியின்றி செல்ல முடியாது. அப்படி சென்றால் பெண்கள் அவர்களைப் பார்த்து கேள்விகணைகள் கேட்டு அடுத்தமுறை அந்தப்பகுதி வழியாக வருவதை தடுத்து விடுவார்கள். ரோட்டிலிருந்து பெண்களின் முடுக்குப் பகுதியைப் பார்த்தால் தெரியாதபடி தட்டி போட்டு அடைக்கப்பட்டிருக்கும். பெண்கள் தமது பொழுது போக்கிற்காக வீடுகளுக்கு இடையேயுள்ள வெற்று காலி நிலங்களில் (வெட்டை) சாயங்கால நேரம் ஒன்று கூடுவதுண்டு.
வெளியூர்களுக்குச் செல்வது என்றால், ஆண்கள் துணையில்லாமல் செல்ல மாட்டார்கள். அந்த ஆண்கள் சொந்த பந்தங்களிலுள்ளவர்களாக இருப்பார்கள். வயதிற்கு வந்த பெண் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு சென்று விடுவதற்கென்றும், தோழிமார்களை சந்திப்பதற்கென்று செல்வதற்கும் தனியாக வயதான பெண்களை நியமித்திருப்பார்கள். அல்லது பெற்றோர்கள், சொந்த பந்தங்களிலுள்ள திருமணம் முடிந்த பெண்கள் இதை செய்வார்கள். பெண்கள் தனியாக ஊருக்குள்வெளியில் செல்வது திருமணம் முடிந்த பின்தான். திருமண விருந்திற்கும், கல்யாண வைபவங்களுக்கும் திருமணம் முடிந்தபின்தான் செல்வார்கள். தோழிகளின் கல்யாணங்களுக்கு மட்டும் பெண் துணையோடு செல்வதுண்டு.
பெண்கள் புனித பயணமாக ஹஜ் செல்ல நாடியிருப்பின் அதை தமது சொந்த பந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் வீடு தேடி சென்று சொல்லி அவர்களிடம் பிழைபொறுப்பு தேடுவார்கள்.
பெரியவர்களின் கட்டுக்கோப்பு:
பெரியவர்கள் ஓய்வு பெறுவது என்பது தமது பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கியதும் இவர்கள் ஊரிலேயே செட்டிலாகி விடுவார்கள். ஊரின் முக்கிய நிகழ்வுகள், குடும்ப விசேஷங்கள், ஊர் பிரச்சனைகள், பேரக்குழந்தைகளை கவனிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவர்கள் போன்ற பெரியவர்கள் ஒன்று கூடுவதற்கென்று தனியாக சதுக்கைகள் இருக்கின்றன. அந்த சதுக்கைகளில் ஊர் பிரச்சனைகளின் பஞ்சாயத்துகள் நடந்து நியாயத் தீர்ப்புகள் வழங்கப்பட்டது உண்டு. பெண்கள் ரோட்டில் நடந்து செல்லாமல் ஒழுங்கு செய்வதிலும், சிறுவர்களின் ஒழுக்கங்களை கண்காணிப்பதிலும் இவர்கள் ஈடுபடுவார்கள்.
செல்வந்தவர்கள் எழை எளியவர்களுக்கு தான தர்மங்கள் மறைமுகமாகவே செய்துவந்தனர். அக்காலத்தில் அவர்கள் சுப்ஹு தொழுதவுடன் கஷ்டப்படும் வீடுகளைப் பார்த்து பணத்தையோ பொருட்களையோ எடுத்துச் சென்று அந்த வீட்டில் யாருக்கும் தெரியாமல் வீசி விடுவதுண்டு. அதுமட்டுமில்லாமல் சிலர் எளியவர்களின் வீடுகளுக்கு சலாம் கூறி திடீரென நுழைந்து பணத்தை கொடுத்து விட்டு வருவதுண்டு. கஷ்டப்படும் நபர்களைப் பற்றி தெருவில் பேசிக்கொள்வதை கவனித்தும், அதற்காக ஆட்களை நியமித்தும் அறிவதுண்டு.
இதன் அடிப்படையில்தான் ஊரின் உள்ளே சினிமா தியேட்டர், சாராயக் கடை போன்ற ஒழுக்க கேட்டிற்கு வழிவகுக்கும் கேளிக்கைகள் இருப்பதற்கு இந்த பெரியவர்கள் அனுமதிக்கவில்லை.காவல் நிலையம், தொடர்வண்டி நிலையம் போன்றவைகளும் ஊரின் கலாச்சாரத்தை பாதிக்கும் என்று எண்ணி இதையும் அனுமதிக்கவில்லை.
குடிமகன் என்னும் நாவிதர்களுக்கும், துணி துவைக்கும் வண்ணார்களுக்கும் குடியிருப்பு அமைப்பதற்கு கொடைவள்ளல்களான லெப்பப்பா வலிமார்கள் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நிலங்கள் தானமாக வழங்கியுள்ளார்கள். தற்போது வண்ணார்குடி தெரு என்றும், முஹிய்யத்தீன் தெரு என்றும் இன்றும் இருக்கிறது.
மாற்று மதத்தவர்கள் கூட இவர்களிடம் பிரச்சனைகளைத் தீர்க்க வருவதுண்டு. இவர்களைக் கண்டால் அவர்கள் மடித்து கட்டிய வேஷ்டியை அவிழ்த்து விட்டு மரியாதையாக நடப்பார்கள். மஹ்லறா, ஸாஹிப் அப்பா தைக்கா போன்ற இடங்ளின் ரோடு வழியே செல்லும்போது செருப்பை கையிலெடுத்து, வேஷ்டியை அவிழ்த்துவிட்டு மிகவும் பவ்யமாக குனிந்து மாற்றுமதத்தவர்கள் செல்வதுண்டு.
தங்களின் மருமகன்களுக்கு (மகளைக் கட்டிக் கொண்டவருக்கு) மிகவும் மரியாதை கொடுப்பார்கள். மருமகன்கள் வெளியூரிலிருந்து ஊருக்கு வந்து விட்டால், இவர்கள் தங்களது படுக்கையை பள்ளிகளில் வைத்துக் கொள்வார்கள்.
இந்த ஊர் இஸ்லாத்தில் ஷாஃபி மத்ஹபை பின்பற்றி வாழும் மக்கள் கொண்டதால், அதுவும் பெரும்பாலானோர் வெளியூர் சென்று சம்பாதிப்பவர்களாய் இருப்பதால், காயல்பட்டணம் ஊர் எல்கையைக் கடந்து தொடர்வண்டி மூலம் பயணம் செல்லும் நபர்கள் ஜம்உ கஸ்ரு தொழுகை தொழுவதற்கு வசதியாக ரயில் நிலையம் அருகில் பள்ளிவாயில் கட்டப்பட்டது.
இளைஞர்களின் கட்டுக் கோப்பு:
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பெற்றோர்கள்; சொல் கேட்டு நடப்பதிலும், பெரியவர்களுக்கு கண்ணியம் கொடுப்பதிலும் மிகவும் கவனம் செலுத்துவார்கள். தெருவில் நடக்கும்போது தலைக்கு தொப்பி அணியாமல் செல்வது கிடையாது. வேஷ்டியை மடித்துக் கட்டி செல்வதில்லை. இளைஞர்கள் தவறிவிடாமலிருக்க ஆங்காங்கே பள்ளிகளோடு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு பொதுச் சேவைகள் செய்தும், ஊர் பெரியவர்களோடு கலந்து பேசியும் வருவதுண்டு. இந்த சங்கங்களில் தாம் எனப்படும் ஒரு விளையாட்டு (சதுரங்கம் போன்றது) விளையாடப்படுகிறது. சில இடங்களில் வாசகசாலையும் அமைக்கப்பட்டு தினசரிகள் வருகின்றன. கேரம்போர்டு விளையாடப்படுகிறது. மாலை நேரங்களில் பெரியவர்கள் சங்கத்தின் வெளியே வந்து இருந்து பொழுது போக்குவார்கள்.
இவ்வாறு மார்க்கத்துடன் கூடிய ஒழுங்குகள், கட்டுக் கோப்புகள் காயல்பட்டணத்தில் நிலவி வந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது இதில் சில காணாமல் போய்விட்டன என்பது வருத்தத்திற்குரியது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…