ஈமான்
அல்லாஹ்வையும் அவனுடைய அமரர்களையும், நபிமார்களையும், வேதங்களையும் இறுதி நாளையும், நன்மை தீமைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்பதையும் உளமாற நம்பி உறுதி கொள்வது ஈமானின் அடிப்படையாகும்.
அல்லாஹ்:
பரம்பொருளான அல்லாஹுதஆலா ஏகனாக, நித்திய ஜீவியாக இருக்கின்றான். அவன் ஆரம்பமும், முடிவும் இல்லாதவனாக எல்லா அம்சங்களிலும் படைப்பினங்களுக்கு வேறுபட்டவனாக தானாகவே இயங்குபவனாக, சிருஷ்டிகளைப் படைத்து இயக்குபவனாக, பிற பொருளின் பால் எவ்விதத் தேவையும் இல்லாதவனாக இருக்கிறான். இறைவனுக்கே உரிய முறையில் பார்த்தல், கேட்டல், அறிதல், பேசுதல், ஆக்கல், அழித்தல் போன்ற பண்புகளைக் கொண்டு படைப்பினங்களைத் தான் விரும்பியபடி ஆக்கவும், அழிக்கவும் செய்கிறான். படைப்பினங்களின் சப்தங்களையும், சொற்களையும் கேட்கிறான். அவைகளின் மிகச் சிறிய அசைவுகளையும் கூடப்பார்க்கிறான். அவைகளின் உள்ளுணர்வுகளையும் அறிகின்றான். தன் திருத்தூதுவர்களோடு வஹீ (வேத வெளிப்பாடுகள்) மூலம் பேசுகின்றான். இவ்வாறு சம்பூரணமான பண்புகளை உடையவனாக அல்லாஹுதஆலா இருக்கின்றான். இவைகளுக்கு எதிர்மறையாகப் பொருள் தரும் இறைமைக்குத் தகாத பண்புகளை விட்டு நீங்கியவனாக இருக்கின்றான்.
நபிமார்கள்:
நபிமார்கள் அல்லாஹ்வினால் அருளப்படும் (வஹீ) வேத வெளிப்பாடுகளை விளங்கும் சக்தியுடையவர்கள். அவற்றைச் சிறிது கூட மாற்றாது சமுதாயத்தவர்களுக்கு உண்மையும், நாணயமும், நேர்மையும் உடையவர்கள். இப்பண்புகளுக்கு மாற்றமான தன்மை கொண்டவர்களாக நபிமார்கள் இருக்க மாட்டார்கள்.
ஓரிலட்சத்து இருபத்தி நான்காயிரம் அல்லது அதற்கு கூடுதலாக அனுப்பப்பட்ட நபிமார்களில் 313 பேர் ரஸூல்மார்கள் ஆவார்கள். அவர்களில் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் , நூஹு அலைஹிஸ்ஸலாம் , இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம்;, மூஸா அலைஹிஸ்ஸலாம் , ஈஸா அலைஹிஸ்ஸலாம், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகிய ஆறு ரஸூல்மார்களும் உலுல் அஜ்ம் எனும் சிறப்புக்குரியவர்கள். இவர்களில் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காத்தமுன்னபிய்யீன் (இறுதி நபி) ஆக இருக்கிறார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் எந்த நபியும் தோன்றப் போவதில்லை. அவர்களே உலகமுடிவுநாள் வரை அரபியர், அரபியல்லாதார் என்ற பாகுபாடின்றி அனைத்துலக மக்களுக்கும் நபியாவார்கள்.
மலக்குகள்(வானவர்கள்):
இவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். இவர்கள் பிணி, மூப்பு, ஊண், உறக்கம், பாவம் அற்றவர்கள். இறைவனிட்ட பணியை ஆற்றும் அலுவலர்கள். அல்லாஹ் இவர்களுக்கிடும் கட்டளை எதற்கும் மாறு செய்யாது தங்களுக்கு ஏவப்பட்டபடியே செய்து வருபவர்கள். இவர்கள் ஆணுமில்லை, பெண்ணுமில்லை.
வேதங்கள்:
இவை இறைவனால் நபிமார்களுக்கு அருளப்பட்ட திருவசனங்கள். அல்லாஹுதஆலா மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அப்ரானி பாசையில் தௌராத் வேதத்தையும், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு யூனானி மொழியில் சபூர் வேதத்தையும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸுர்யானி பாசையில் இஞ்சீலையும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அரபி மொழியில் குர்ஆனையும் வழங்கினான். தவிர ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பத்து சுஹ்ஃபுகளையும், ஷுது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஐம்பது சுஹ்ஃபுகளையும், இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு முப்பது சுஹ்ஃபுகளையும், இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பத்து சுஹ்ஃபுகளையும் அல்லாஹ் தஆலா வழங்கினான்.
களா-கத்ர்:
உலகத்தில் நடக்கும் அனைத்தும் அல்லாஹ் விதித்த விதிப்படியும் அளவுப்படியுமே நடக்கிறது. நன்மை, தீமை, வறுமை, செல்வம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியும், விதிப்படியுமே நிகழ்கின்றன. மனிதன் செய்யும் நன்மையான செயல்களுக்கு நற்கூலியையும், தீமையான செயல்களுக்கு தண்டனைளையும் அல்லாஹ் வழங்குவான்.
மறுமை:
மறுமை உண்டு. அப்பொழுது படைப்பினங்கள் அனைத்திற்கும் உயிர் கொண்டுத்து எழுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டு அவரவர் செய்த நன்மைகளுக்கேற்ப கவனமோ, தீமைகளுக்கேற்ப நரகமோ புகுவர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின்பு மீண்டும் உயிர் கொடுத்து அவனை எழுப்புவதற்கு அல்லாஹ் ஆற்றல் உள்ளவன்.
இவ்வாறு தெளிவாக அறிந்து ஈமான் கொள்ள வேண்டும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…