Home Uncategorized அல்லாஹ்வின் திக்ரின் சிறப்புகள்
Uncategorized - பொது - February 8, 2011

அல்லாஹ்வின் திக்ரின் சிறப்புகள்

தொகுப்பு:W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன்

ஹஜ்ரத் அபூதர்தா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை நோக்கி,உங்களுடைய இறைவன் அல்லாஹ்விடத்தில் மிகவும் உயர்வான,தூய்மையான ஒரு செயல்,அது உயர்ந்த தரஜாவை கொடுக்கும்,அல்லாஹ்வின் பாதையில் தங்கம்,வெள்ளி இவைகளை செலவு செய்வதை காட்டிலும்,எதிரிகளின் தலையை வெட்டி வீழ்த்துவதை விடவும் மிகவும் மேலானது.அப்படிபட்ட ஒரு செயலை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா?என வினவினார்கள். ஸஹாபாக்களும் ஆம்,யாரஸூலல்லாஹ்! கூறுங்கள் என்றனர். அது தான் “திக்ருல்லாஹ் “ (இறை தியானம்) எனக் கூறினர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (திர்மிதி)

ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவக்கிறார்கள்,ரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,எந்த ஒரு கூட்டத்திலும்  மக்கள் அமர்ந்து அல்லாஹ்வை திக்ர் செய்யமாலும்,ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறாமலும் இருப்பது அவர்களுக்கு நஷ்டமே,அல்லாஹ் நாடினால் அவர்கள் மீது அதாபை இறக்கவும்,அல்லது அவன் நாடினால் மன்னிக்கவும் செய்யலாம். (திர்மிதி)

ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,கண்மணி நாயகம் ரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,“அல்லாஹ் தபாரக வதஆலா கூறுகிறான் எப்பொழுது ஒரு மனிதன் தான் உதட்டை அல்லாஹ்வின் திக்ருக்காக அசைக்கிறானோ,அப்போது நான் அவனிடத்தில் இருக்கிறேன்”. (புஹாரி)

 

ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ் தபாரக வதஆலா கூறுகிறான்,நான் என் அடியனுக்கு அவன் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறேன். அவன் என்னை திக்ர் செய்யும்போது அவனுடனே இருக்கிறேன். அவன் தன்னுடைய கல்பில் என்னை திக்ர் செய்யும்போது நானும் மிக நெருக்கத்தில் அவனை திக்ர் செய்கிறேன். கூட்டத்தில் என்னை அவன் திக்ர் செய்யும்போது,நான் அவனை கூட்டத்தில் மிகவும் சிறப்பாக நினைக்கிறேன்”. (புஹாரி)

 

ஹஜ்ரத் அபு மூஸா அஷ்அரி ரழியல்லாஹு தஆலா அன்ஹு  அறிவிக்கிறார்கள்,தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,“அல்லாஹ்வை திக்ர் செய்பவனுக்கும், செய்யாதவனுக்கும் உள்ள உதாரணம்,உயிரோடு இருப்பவனுக்கும், மரணித்தவனுக்கும்  ஒப்பாகும்”. (புஹாரி)

ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,நூர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,“மலக்குமார்கள் செல்லும் வழியில் அல்லாஹ்வை திக்ர் செய்து கொண்டிருப்பவர்களை கண்டால்,தங்களுக்குள் “வா,நீ விரும்பியதை கண்டு கொண்டாய்”யென்று கூறி கொள்வார்கள். பின்பு அந்த மலக்குகள் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களை தங்கள் இறக்கையினால் இவ்உலகத்தின் வான எல்லை வரை மறைத்துக் கொள்வார்கள்.அல்லாஹ் ரப்புல் இஜ்ஜத் மலக்குமார்களை விட நன்கு அறிந்தவனாக இருந்தும்,அவர்களை பார்த்து “என்னுடைய அடியார்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?”என்று கேட்பான். அப்போது மலக்குமார்கள்,இவர்கள் உன்னை தஸ்பீஹ்,தஹ்மீத்,தம்ஜீத் செய்து கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள். அல்லாஹ் தஆலா “அவர்கள் என்னை பார்க்கிறார்களா?”என கேட்க,மலக்குமார்கள் “நாங்கள் உன்னுடைய பரிசுத்த உள்ளமையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறோம்,அவர்கள் உன்னை பார்க்கவில்லை”. அல்லாஹ் தஆலா “அவர்கள் என்னை பார்த்திருந்தால் அவர்களுடைய நிலைமை என்ன?”என வினவுவான். அதற்கு மலக்குமார்கள் “அவர்கள் உன்னை பார்க்க முடியும் என்றிருந்தால்,இதை விட இன்னும் அதிகமதிகம் உன்னை தம்ஜீத்,தஸ்பீஹ் செய்து கொண்டிருப்பார்கள்” என்று கூறுவார்கள்.
அல்லாஹ் தஆலா “அடியார்கள் என்னிடத்தில் என்ன கேட்டுக் கொண்டிருந்தார்கள்?”என்று கேட்க,மலக்குமார்கள் "அவர்கள் சுவர்க்கத்தை உன்னிடத்தில் கேட்கிறார்கள்" என்பர். அல்லாஹ் தஆலா "சுவர்க்கத்தை அவர்கள் பார்க்கிறார்களா?"என வினவ,மலக்குமார்கள் "நாங்கள் உன்னுடைய பரிசுத்த உள்ளமையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறோம்,அவர்கள் சுவனத்தை பார்க்கவில்லை". அல்லாஹ் தஆலா "சுவனத்தை பார்த்திருந்தால் அவர்கள் நிலைமை என்ன?"என்று கேட்பான். அதற்கு மலக்குமார்கள் "சுவனத்தை பார்த்திருந்தால் அவர்களுக்கு அதன் மீதுள்ள பேராசை,பற்று,ஆவல் மேலும் மேலும் அதிகரித்து இருந்திருக்கும்". அல்லாஹ் தஆலா "வேறு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?"எனக் கேட்க,மலக்குமார்கள் "அவர்கள் புகலிடம் தேடுகிறார்கள்" என்பர். அல்லாஹ் தஆலா "எதற்காக அவர்கள் புகலிடம் தேடுகிறார்கள்?"என கேட்க,மலக்குமார்கள் "நரகத்திலிருந்து விடுதலை பெற புகலிடம் தேடுகிறார்கள்" எனக் கூறுவர். அல்லாஹ் தஆலா "நரகத்தை அவர்கள் பார்க்கிறார்களா?"என்று கேட்க,மலக்குமார்கள் "நாங்கள் உன்னுடைய பரிசுத்த உள்ளமையின் மீது ஆணையிட்டுக் கூறுகிறோம்,அவர்கள் நரகத்தை பார்க்கவில்லை". அல்லாஹ் தஆலா "நரகத்தை பார்த்திருந்தால் அவர்கள் நிலைமை என்ன?என வினவ,மலக்குமார்கள் "நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் ,அதிக பயத்தினால் அதை விட்டும் மிக தொலைவில் வெருண்டோடி இருப்பார்கள்".

அல்லாஹ் தஆலா "மலக்குமார்களே,நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்க்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறுவான். ஒரு மலக்கு கூறுவர்,"திக்ர் செய்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் மட்டும் பங்கெடுக்காமல்,அவருக்குள்ள சில தேவைகளுக்காக அங்கு இருக்கிறார்". அல்லாஹ் தஆலா கூறுவான் "அப்படிப்பட்ட நபரும் அங்கே அமர்ந்ததால்,அவரும் எதையும் இழக்க மாட்டார்". (புஹாரி)

ஹஜ்ரத் அனஸ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,"சுவனத்துப் பூங்காவின் பக்கம் நீங்கள் செல்ல நேர்ந்தால், அதனுடைய பழங்களை சாப்பிடுங்கள்". சஹாபா பெருமக்கள் கேட்டார்கள் "சுவனத்து பூங்கா என்றால் என்ன?என்று. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அல்லாஹ்வை திக்ர் செய்ய ஒன்று கூடும் இடம் – திக்ர் மஜ்லிஸ்" என்று கூறினார்கள். (திர்மிதி)

ஹஜ்ரத் அபூஹுரைரா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள் ஹஜ்ரத் அபு ஸயீதுல் குத்ரி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறியதாக,ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,"அல்லாஹ்வை திக்ர் செய்வதற்காக எப்பொழுதெல்லாம் மக்கள் ஒன்று கூடுகிறார்களோ,அங்கே மலக்குமார்களும் சூழ்ந்து கொள்கிறார்கள்". அல்லாஹ்வின் ரஹ்மத்தும்,சாந்தியும் சமாதானமும் அங்கே இறங்குகிறது. அல்லாஹ் தஆலா மலக்குமார்களிடத்தில் தன்னுடைய சபையில் ஆஜராகும்படி உத்தரவு இடுகிறான். (முஸ்லிம்)

அமீர் முஆவியா அறிவிக்கிறார்கள்,ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லும் வழியில் ஒரு கூட்டத்தைப் பார்த்து "எதற்காக கூடி இருக்கிறீர்கள்?"யென்று கேட்டார்கள்.  அதற்கு அவர்களில் சிலர்,  "எங்கள் மீது கருணை புரிந்து நேரான பாதையாகிய தீனுல் இஸ்லாத்துக்கு வழிகாட்டிய ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வை திக்ர் செய்வதற்காகவும்,அவனை புகழ்வதற்காகவும் இங்கே குழுமி இருக்கிறோம்" என்றனர். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அல்லாஹ்வுக்காக மட்டும் தான் நீங்கள் கூடியிருக்கிறீர்களா?என வினவ,ஆம்,அந்த ஒரு நோக்கத்திற்காக மட்டும் தாம் கூடியிருக்கிறோம் என்றனர்.  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் "நான் உங்கள் மீது எந்த ஒரு சந்தேகம் கொள்ளவில்லை,ஏனெனில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து கூறினார்,அல்லாஹ் உங்களை அவனுடைய மலக்குமார்கள் கூட்டத்தில் சிலாகித்து கூறினான்" என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள், அஹ்மது முஜ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,"ஆதமின் மக்களின் உள்ளத்தில் ஷைத்தான் ஒட்டிக் கொண்டுள்ளான். எப்பொழுது ஒருவன் அல்லாஹ்வின் திக்ரை செய்கிறானோ அப்போது ஷைத்தான் அவனை விட்டும் தூரமாகி ஓடி விடுகிறான். ஆதமின் மக்கள் எப்போது அல்லாஹ்வை திக்ர் செய்வதில் கவனக் குறைவுடன் இருப்பார்களோ,அப்போது ஷைத்தான் வஸ்வஸா என்ற கெட்ட எண்ணங்களை அவர்களுடைய உள்ளத்தில் போட்டு விடுகிறான்". (புஹாரி)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள், ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,"அல்லாஹ்வின் திக்ர் இல்லாமல் உரையாடாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வின் திக்ர் இல்லாமல் அதிகமாக பேசுவது,இதயத்தின்  கடினத்தன்மைக்கும்,துயரத்தன்மைக்கும் காரணமாக அமைந்துவிடும். இதயத்தில் கடினத்தன்மை உடைய மனிதன் அல்லாஹ்வை விட்டும் மிகவும் தூரமாகி விடுவான். (திர்மிதி)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் பிஷ்ர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,ஒரு மனிதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து,யா ரஸூலல்லாஹ் ! இஸ்லாத்தில் நிறைய கட்டளைகள் இருக்கின்றன. நான் உறுதியாக பற்றிப் பிடித்து கொள்ளத்தக்க ஒரு விஷயத்தை சொல்லித் தாருங்கள் என்று கேட்டார்.ரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "எப்பொழுதும் அல்லாஹ்வுடைய திக்ரிலேயே உன்னுடைய நாவை ஈரமாக இருக்க வை" என பதில் கூறினார்கள். (திர்மிதி)

ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் பிஷ்ர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,ஒருமுறை கிராமவாசி ஒருவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் வந்து "எந்த மனிதன் மிகவும் சிறப்பானவன்?"என்று கேட்டார். அதற்கு ஒளிவாம் கண்மணி நாயகம் ரஸூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,"அதிர்ஷ்டமும்,நற்பேறும் பெற்ற மனிதன் யாரெனில்,எவனுக்கு வாழ்நாள் நீளமாயும்,அவனுடைய செயல்கள் அழகாக இருக்குமோ அவன்தான் சிறந்த மனிதன்" என்று கூறினார்கள். அந்த கிராமவாசி மீண்டும் கேட்டார் "எந்த செயல் மிகவும் சிறப்பானது?". அதற்கு தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,"நீ இந்த உலகத்தை விட்டு பிரியும் போது,உன்னுடைய நாவு அல்லாஹ்வின் திக்ரிலேயே ஈரமாகி இருப்பது" என்று உரைத்தார்கள். (திர்மிதி)

ஹஜ்ரத் முஆஜ் பின் ஜபல் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "சுவனத்து வாசிகள் அல்லாஹ்வின் திக்ரில்லாமல் கழிந்த நேரத்திற்காக மட்டும் தான் வருந்துவார்கள்" என்று கூறினார்கள். (பைஹகி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…