Home Uncategorized வீடு கட்டமைப்பு
Uncategorized - October 26, 2010

வீடு கட்டமைப்பு

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும், இனத்திலும், சமுதாயத்திலும் அவர்களுக்கென்று தனித் தனி கலாச்சாரம், அமைப்புகள் இருக்கின்றன. அதே போல் அவர்களின் கட்டிடங்களும் அவர்கள் வாழும் வீடுகளும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தே அமைக்கப்படுகின்றன. காயல்பட்டணத்திற்கென்று தனியாக வீட்டின் அமைப்பு இருக்கின்றது. மிகப் பெரும்பான்மையான வீடுகள் இதே மாதிரியே கட்டப்படுகின்றன. 
 
சாதாரணமாக வீடுகள் 20 அடி அகலம் 40 அடி நீளமும் உயரம் குறைந்தபட்சம் 10 அடி கொண்டதாகவே வீடுகள் கட்டப்படுகின்றன. இதில் ஜான்ஸ் என்னும் வரவேற்பறை, ஊட்டாங்கரை என்னும் படுக்கை அறை, திண்ணை என்னும் ஹால் அதன்பின் முற்றம்  அதன் ஒரு பகுதியில் கழிவறை, குளியலறை மற்றும் மறுபக்கத்தில் அடுப்பாங்கரை என்னும் சமையலறை ஆகியவை அமைக்கப்படுகின்றன.ஆண்களுக்கு மாடிக்கு செல்ல ஏணிபடிகள் ஜான்ஸிலிருந்தும் பெண்களுக்கு திண்ணையிலிருந்து மாடிக்கு செல்ல ஏணிப் படிகள் தனியாக அமைக்கப்படுகின்றன. இரண்டு வீடுகளுக்கு அடுத்தாற்போல் முடுக்கு எனப்படும் ஓடை அமைக்கப்படுகிறது. அது குறைந்த பட்சம் 3 அடி கொண்டதாக இருக்கும். அதன்பிறகு அடுத்த வீடு இருக்கும். ரோட்டிலிருந்து உள்பக்கம் உள்ள வீட்டினர் வெளியே செல்வதற்கு பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ளது.  
 
நகரின் இரட்டை வீடுகள் வரைபடம்

  

 
 

 

ஜன்னல்கள் , அலமாரிகள் . பக்கத்து வீடுகள்

1-ஜான்ஸ்
2-ஊட்டாங்கரை
3-திண்ணை
4-அடுப்பங்கரை
5-குளியலறை
6-கழிவறை
7-முற்றம்

8-ஓடை
9-ஆண்கள் செல்லும் ஏணி
9-பெண்கள் செல்லும் ஏணி

D-நடுவாசல்
d
கதவுகள்

D1-திட்டுவாசல்

D-2-தலைவாசல்  

m – முடுக்கு

 

R – ரோடு

 

 
இந்த முடுக்கில் அந்த முடுக்குக்கு பாத்தியப்பட்ட ஆண்களும், எல்லாப் பெண்களும் பாதையாக பயன்படுத்துவார்கள்.
 
வீட்டின் அமைப்பு கிழமேலாக இருந்தால் தென்பாகத்து முடுக்கிற்கு பாத்தியம் பெறுவார்கள்.
 
வடகிழக்காக இருப்பின் கிழக்குப் பக்கம் முடுக்குக்கு பாத்தியம் கொண்டாடுவார்கள். இந்த முடுக்கில் அவர்கள் கழிவறைக்கு காண் தொட்டி என்னும் கழிவறைத் தொட்டி அமைக்கவும் செய்வார்கள். மின்சார வயர்கள். குடிநீர் பைப்புகள் மற்றும் வீட்டிற்குது; தேவையான அனைத்தும் இந்த முடுக்கின் மூலமே எடுத்து செல்வார்கள். 
 
 

இரண்;டு வீடுகள் அமைக்கும் பட்சத்தில் ஒன்றையொன்று ஒட்டிக் கட்டுவார்கள். அந்த இரு வீட்டிற்கும் நடுச் சுவரில் நடுவாசல் அமைத்து இருவீட்டிற்கும் போய்வர வழி அமைப்பார்கள். விசேஷங்களுக்கு இது பயன்படும். இதே மாதிரி எதிர் திசையில் இரண்டு வீடுகள் அமைப்பார்கள். இந்த எதிர் திசை வீடுகளுக்கு மத்தியில் ஓடை அமைக்கப்படும். இது இந்த நான்கு வீட்டிற்கும் பொதுவானது. இந்தப் பொது ஓடையலிருந்து தங்களுக்குப் பாத்தியப்பட்ட முடுக்கிற்கு செல்ல வாசல் ஒன்று விடுவார்கள். அதற்கு தலைவாசல் என்று சொல்லப்படும்.தலைவாசல் மற்றும் முற்றக் கதவுகளில் குர்ஆன் ஆயத்துகளும், பாதுகாப்பிற்காக இஸ்முகளும் எழுதப்பட்டிருக்கும்.

இந்த வீடுகளை தொட்டிக்கட்டு வீடு என்று அழைப்பார்கள்.தங்களுக்கு பாத்தியப்படாத முடுக்கிற்கு வாசல் விடுவதென்றால் அந்த முடுக்கிற்கு பாத்தியப்பட்டவர்களின் அனுமதியுடன் வாசல் விடப்படும். மற்றும் தங்களுக்கு பாத்தியப்படாத முடுக்கை ஒட்டியது போல் கட்டப்படும் வீட்டிற்கு ஜன்னல், வாசல் விடுவதென்றால் அந்த பாத்தியப்பட்ட வீட்டுக்காரர்களின் அனுமதியுடன் விடப்படும்.

ஜன்னலுக்கு கம்பி வைத்து விடுவதென்றால் அவர்களின் அனுமதி வேண்டும். இல்லையென்றால் ஜன்னல்களில் மரஇலை             (லை ஜன்னல்) பொருத்தி ஜன்னல் விடப்படும்.

 
 
 
 
 
 
 
மெத்தை என்னும் மாடி வீடுகளில் ஹால் ஒன்றும், படுக்கையறை மற்றும் கழிவறை, குளியலறைகள் காணப்படும். ரோட்டோர வீடுகளில் பால்கனி அமைக்கப்படும். அதற்கு மேல் உள்ள பகுதி திறந்த வெளியாக இருக்கும். அதற்கு மொட்டைமாடி என்று சொல்லப்படும். அதற்கு உள்ள சுற்றுச் சுவருக்கு ஆளடி சுவர் என்று சொல்லப்படும். இது குறைந்த பட்சம் 3அடி உயரம் இருக்கும். அதற்குமேல் புழக்கத்திற்கு பயன்படும் நீர் தேக்க தொட்டி சிமெண்டால் அமைக்கப்பட்டிருக்கும். 
 
 
பரண் மற்றும் ஸ்டோர் ரூம்: அடுப்பங்கரையிலிருந்து ஓடையின் மேல் ஒரு தட்டு கான்கீரட்டால் அமைக்கப்படும். இதற்கு விறகுத் தட்டு என்று பெயர். அடுப்பாங்கரையிலிருந்து ஒரு குழாய் போன்ற அமைப்பு சமையல் புகை வெளியே செல்வதற்கு மொட்டை மாடி வரை அமைக்கப்பட்டிருக்கும். குளியறைக்கு முன் திண்ணையில் சாமான்கள் வைப்பதற்கென்று ஒரு ரூம் கட்டப்படும். அதற்கு ஸ்டோர் ரூம் என்று பெயர். அதற்கு மேல் அதாவது கழிவறை குளியலறைக்கு மேல் கான்கீரிட்டால் ஒரு பரண் எடுக்கப்பட்டு அங்கும் சாமான்கள் வைக்கப்படும். 
 
அலமாரிகள்: வீட்டின் மதில்களை குடைந்து அதில் அலமாரிகள் அமைக்கப்படுகின்றன. பொருட்கள் வைப்பதற்கு இது பயன்படுகின்றன.
 
சில வீட்டு அமைப்புகளில் தங்களது ஓடைக்கு எதிர்புறம் ஒரு கட்டிடம் கட்டப்படுகிறது. அதில் சமையலறை மற்றும் சாமான்கள் அறை அமைக்கப்படுகிறது. 
 
அதற்கு 'எதிரி' என்று அழைக்கப்படுகிறது. இது வீட்டிற்கு எதிர் புறத்தில் அமைக்கப்டுவதால் இதற்கு 'எதிரி'என்று பெயர் வந்தது.
 
முடுக்கின் இறுதிப்பகுதியில் இருக்கம் தோட்டத்தில் கிணறு இருக்கும். கோழி, ஆடு, மரங்கள் வளர்க்கப்படுகின்றன. துணிகள் இங்கு வைத்துதான் துவைக்கப்படுகின்றன. சில வீடுகளில் வீட்டை ஒட்டியே தோட்டங்கள் இருக்கும்.  தோட்டம் இல்லாத வீடுகளில் கிணறுகள் உள் ஓடையில் இருக்கும். குடிநீர் பைப்புகள் உள் ஓடையில் இருக்கும். 

முற்றக் கதவுஉள் ஓடையிலிருந்து நடு ஓடைக்கு வெளியே வரும் வாசல்.
 
திட்டு வாசல்: திண்ணையிலிருந்து முடுக்கிற்கு செல்லும் வாசல்.
 
இரு தெருக்களுக்கும் மத்தியில் பொதுவான ஓடை ஒன்று இருக்கும்.; இரண்டு தெருக்களை பிரிக்கும்.இதற்கு 'நாராயண ஓடை'என்று சொல்லப்படும். இது நகராட்சிக்கு சொந்தமானது.
 
இது போக தற்போது அமைக்கப்படும் வீடுகளில் தங்களுக்கு பாத்தியமில்லாத முடுக்கள் அமைந்த வீடுகள் உள் ஓடை என்று ஒன்று இடம் விட்டு வீடுகள் கட்டுகிறார்கள். அதனால் வீட்டின் அகலம் குறையும். அந்த ஓடையில் கம்பி ஜன்னல்கள், வாசல்கள் அமைத்துக் கொள்வார்கள்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…