வயிற்றுப் பிரச்சனைகளும், தீர்வும்!
உங்கள் வயிற்றுக்கு நீங்கள் உற்ற நண்பன். அதே வயிற்றுக்கு நீங்கள் மோசமான எதிரியாகவும் இருக்க முடியும். உங்கள் ஜீரணமண்டலத்தை ஒழுங்காக வைத்துக் கொண்டால் நோய்களிலிருந்து தப்பிக்க முடியும். இதைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இக்கட்டுரை டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார் எழுதிய 'வயிறு' என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.
நெஞ்செரிச்சல் (Heart Burn ):
உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு அதாவது ஒரு தடுப்பிதழ் இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில் இருந்து வயிற்றுக்குள் போகும் உணவை அனுப்புகிற ஒரு வழிப் பாதையாக செயல்படுகிறது. அத்தோடு உணவுக்குழாயில் ஆல்கலியும், வயிற்றில் அமிலமும் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக கலக்காமல் தடுப்பதுதான் இந்த வால்வின் வேலையாகும்.மசாலாப் பொடி, எண்ணெய், டீ, காபி, புகைபிடித்தல், காரமான உணவு போன்றவைகளை எதிர் கொள்ளும் சக்தி இயற்கையாகவே சிலருக்கு குறைவாக இருப்பதால் இந்த வால்வு பலவீனமாகிறது.
அதே போல் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலே பொங்கி வரும்போது உணவுக்குழாய் தடுப்பிதழ் பலஹீனமாக இருப்பவர்களுக்கு இந்த அமிலம் உணவுக் குழாயின் உள் அறையின் மேல் பட்டு படர்ந்து விடுகின்றது. இந்த உள் அறைக்கு அமிலத்தின் வீரியத்தை தாங்கும் சக்தி இல்லை. இதனால் அந்த உள் அறை பாதிக்கப்பட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை 'ரிஃப்ளக்ஸ் ஆக்ஷன்' என்று சொல்வார்கள்.
சாப்பாட்டை கண் எதிரே பார்க்கும் போதும் இரைப்பையில் அமிலம் சுரப்பது இயற்கை. இந்த அமிலத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த-சமப்படுத்த சாப்பாட்டுடன் தண்ணீரையும் உட்கொள்வது அவசியம்.
காரசார உணவை கண்ணில் நீர்வர நாக்கு எரிய எரிய அடிக்கடி சாப்பிடும்போது உணவுக்குழாயின் உள் அறை செல்களில் மாற்றமேற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை முற்றி புற்று நோயாகக் கூட மாறலாம்.
அத்தோடு சில உணவுகள் வயிற்றின் அமிலத்தை மேலெழுப்பி உணவுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, தக்காளி, ஆரஞ்சு, ஐஸ் கிரீம், புளித்த கிரீம்கள், மசித்த உருளைக் கிழங்கு, காபி, டீ, வினிகர், சிப்ஸ் வகைகள், கொழுப்பு சத்து அதிகமுள்ள கு;கீஸ், பேஸ்ட்டரீஸ் போன்ற உணவுகள் அமிலத்தை எதிர்க்களிக்கச் செய்யும். இவ்வுணவுகளை அன்றாடம் சேர்க்காமல் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
நெஞ்செரிச்சல் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதய நோய் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் வரலாம். அதன் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
சிகிச்சை:
எண்டோஸ்கோப்பி பண்ணி பாதிப்பை பரிசோதித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்கலாம்.
பொதுவாக இதற்கு ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை மருந்து மாத்திரை கொடுத்து உணவு கட்டுப்பாடுடன் சுரக்கும் அமில அளவை குறைத்து வால்லை இறுகச் செய்வது ஒருமுறை. மருந்து மாத்திரைகளில் குணமாகாத நெஞ்செரிச்சலுக்கு ஆபரேஷன் மூலமும் தீர்வு காணலாம்.
எண்டோஸ்கோப்பி மூலமே சரிபடுத்த தற்போது புதிய முறைகள் உருவாகி இருக்கிறது. இதை எண்டோசின்ச்(Endocinch ) என்று சொல்வார்கள். உணவுக் குழாயும் இரைப்பையும் சேருமிடத்தை எண்டோஸ்கோப் மூலம் பார்த்து அந்த இடத்தில் தையல் போட்டு விடுவது ஒருமுறை.
தற்போது நவீன சிகிச்சையாக 'எண்டோஸ்கோபிக் சிமெண்ட் இன்செக்ஷன்' என்ற முறை மூலம் சிமெண்ட் மாதிரியான பொருளை உணவுக் குழாய், இரைப்பையுடன் சேருமிடத்தில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் அது உள் சென்று இறுகி வால்வு போன்று வேலை செய்கிறது.
மற்றொரு முறையான 'ரேடியோ ஃப்ரிகுவென்சி எனர்ஜி' (Radio Frequency Energy ) மூலம் உணவுக்குழாயும் இரைப்பையும் சேருமிடத்தில் சுட்டுவிட முடியும். இப்படி சுடுவதால் அந்த இடங்களில் தசை நார்கள் அதிகமாகி, இறுகிவிடும். அதனால் நெஞ்செரிச்;சல் நின்று விடும்.
நெஞ்செரிச்சலால் வரக்கூடிய அடினோகார்ஸினோமா என்ற புற்றுநோய் இந்தியாவில் அதிகமாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தவிர்க்க முடியும்.
ஏப்பம்:
சாப்பிடும்போது நடுநடுவே பேசுவதாலோ, தண்ணீர் அருந்துவதாலோ நாம் நம்மை அறியாமலேய காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகின்றோம். இதனால் குறைந்த அளவு உண்டபோதும் வயிறு நிறைந்து விடுகின்றது. இதேபோல் தண்ணீரை அண்ணாந்து குடிக்கும்போதும், மூக்கடைப்பினால் வாயால் மூச்சு விடுவதினாலும் நான் காற்றை உள்ளே விழுங்குகிறோம். இதுதான் பிற்பாடு ஏப்பமாக வருகிறது.
விழுங்க முடியாமை(Dysphagia ):
பசி இல்லாமல் போவது, விழுங்க முடியாமல் தவிப்பது, எடை குறைவது போன்ற அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டிருக்கிற குடல் புண் புற்று நோயாக மாற ஆரம்பித்துவிட்டதன் அறிகுறி போல் தோன்றுகிறது. இதைக் கண்டறிய எண்டோஸ்கோப்பி
முறை அவசியம். உணவுக் குழாய்கு இடையே உணவு செல்ல இடைவெளி இல்லாமல் பக்கவாட்டுச் சுவர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறதா? என்பதை கண்டறிவதும் அவ்வாறிருப்பின் மருத்துவரை அணுகுவதும் அவசியம்.உணவுக் குழாய் தசைகளால் ஆனாது. உணவுக் குழாயின் நெடுக்கிலும், பக்கவாட்டிலும் இருக்கும் தசைகள் இயங்கி உணவை உட்செலுத்த உணவு விழுங்கப்படுகின்றது. ஆனால் இந்த தசைகள் இறுகிப் போய் உணவு மேற்கொண்டு உள்ளிறங்காமல் அடைபட்டு போகும் நிலைமைக்கு அகலேசியா கார்டியா(Achalasia Cardia )என்று பெயர். இப்பிரச்சனை விளைவாக உணவானது கீழிறங்கி இரைப்பையை அடையாமல், உணவுக்குழாயின் எந்த பகுதி இயங்காமல் இருக்கிறதோ அந்த இடத்திலேயே நின்று விடும். நாள் ஆக ஆக திரவ உணவும் கூட அதைத் தாண்டி கீழே இறங்காத நிலை ஏற்படும். உணவு இறங்கினால்தானே குடலுக்கு சென்று சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் சேரும். உணவுக்குழாயின் குறிப்பிட்ட இடத்தில் உணவு தங்கி அந்த இடமே பெருத்துவிடும். வாயில் துர்நாற்றமும் வீசும்.
இப்பிரச்சனைக்கு தீர்வாக இறுகிப்போன தசைகளை இயல்புக்கு கொண்டு வரும் 'பலூன் டைலேஷன்'(Baloon Dilation) என்கிற சிகிச்சை செய்யப்படுகிறது.
விக்கல்(Hiccups ):
மர்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (diaphragm )எனப்படும். இந்த தசைப்பகுதி சொடுக்கலாக விரிந்து சுருங்கும்போது விக்கல் ஏற்படுகிறது.
கல்லீரல் வீக்கம், இரைப்பை வீக்கம் , உதரவிதானம் அல்லது நுரையீரலின் அடிப்பாகத்தில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் என்று விக்கல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. ஏன் மன உளைச்சல் கூட விக்கல் ஏற்பட காரணமாகிறது.
ஜீரணக் கோளாறு, புரதம் குறைந்த உணவைக் கொஞ்சம் மட்டும் எடுத்துக் கொள்வதும், கொழுப்பு சத்துள்ள உணவை அதிகமாக உடகொள்வதும் மேலும் உதரவிதானத்தின் தசைகளில் பாதிப்பிருந்தாலும் விக்கல் ஏற்பட காரணமாகிறது.
நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பு உதரவிதானம். அது மூச்சுவிடவும் நமக்குத் துணை புரிகிறது. கவனித்துப் பாருங்கள் மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தும்போது விக்கல் நின்று விடும். அதனால்தான் விக்கும் போது தண்ணீர் குடிக்கின்றனர்.தவிர அதிர்ச்சியாக எதைப் பேசினாலும், செய்தாலும் பக்கென்று ஒரு நிமிடம் மூச்சு நின்று நாம் விக்கித்துப் போய் விடுவோம். அதன்பலனாக விக்கலும் நின்றுவிடும். தம் பிடித்தாலோ, மூச்சை இழுத்துப் பிடித்தாலோ விக்கல் சட்டென்று நின்றுவிடும். அப்படியும் நிற்காத சமயத்தில் விக்கலை நிறுத்த மாத்திரை, மருந்து, ஊசி என்று பயன்படுத்துவது உதரவிதான தசையின் செயல்பாட்டை சரி செய்யும் சிகிச்சையே.
குடல் புண் (Ulcer):
வயிற்றுக்குள் புண் இருந்தால் பசியெடுக்கும்போது ஜீரணிப்பதற்காக அமிலம் வயிற்றில் உருவாகும். அது அந்தப் புண்ணில் படும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும். இப்படி புண் இருப்பதை எண்டோஸ் கோப்பி பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் ஆறிலிருந்து எட்டுவாரம் வரை மாத்திரை சாப்பிட்டு குடல்புண் நோயைக் குணப்படுத்திடலாம்.
அல்சரில் இரண்டு வகை இருக்கிறது.
1. கேஸ்ட்ரிக் அல்சர், இது இரைப்பையில் உருவாகும் புண்.
2. டியோடினல் அல்சர், இது குடலில் உருவாகும் புண்.
இரைப்பைக்கு ஒட்டின சிறு குடலின் முதல் பாகத்தில் முதல் இரண்டு அங்குலத்தில்தான் குடல் புண் உருவாகும்.
முன்பெல்லாம் இந்த இருவகையான புண்களையும் சேர்த்து பெப்டிக் அல்சர் என்றே கூறுவர்.
இரைப்பை ஒரு அமில மண்டலம். அமிலம் அதிகமாக சுரக்கச் சுரக்க அதை ஒட்டின மற்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு புண் வருகிறது. அமிலம் மேலே வந்து உணவுக் குழாயைப் பாதிக்கும்போது நெஞ்செரிச்சலும், இரைப்பையினுள் கசியும் போது இரைப்பை புண்ணும், சிறுகுடலில் படும்போது குடல் புண்ணும் உண்டாகிறது.
இரைப்பையில் உருவாகும் புண்ணை மூன்று வகையாக பிரிக்கலாம்.
அமிலம் குறைவாக இருக்கும் வகை ஒன்று, அமிலம் அதிகமாக இருக்கும் வகை இரண்டாவதும், அமிலம் அதிகமாக இருந்து சிறுகுடலில் அல்சர் உண்டாகி அதனால் அமிலம் வெளியே போக முடியாமல் தடைப்பட்டு புண்ணாகும் வகை மூன்றாவதாகவும் இருக்கிறது. இதை ப்ரி பைலோரிக் அல்சர் என்பர்.
அல்சருக்கு அடிப்படைக் காரணமாக ஹரி, வொரி, கறி (Hurry, Worry, Curry ) ஆகியவைகள் அமைகின்றன. ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்படும் போது மூளையிலிருந்து வயிற்றுக்குப் போகும் நரம்பு தூண்டப்பட்டு இரைப்பையில் அமிலம் அதிகமாக சுரக்க ஆரம்பிப்பதால் அல்சர் உண்டாக நேரிடும். மேலும் கிருமிகளினாலும் அல்சர் உருவாகும். ஹெச்-பைலோரி என்ற பாக்டீரியாவினால் அல்சர் வருகிறது. சுகாதாரமற்ற இடங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்பதினால் இந்த பாக்டீரிய்யா குடலுக்குள் புகுந்து புண்ணை உண்டு பண்ணுகிறது.
குடல் புண் நோயாளிக்கு உணவு உண்ட இரண்டு மணிநேரத்திற்பு; பின்தான் வலி ஏற்படும். உணவு உண்டு ஜீரணிக்கும் வரை அமிலம் குடல் புண் மேல் படாது. எனவே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்குப் பின்தான் வலி ஏற்படும். பெரும்பாலும் இரவு உணவிற்குப் பிறகு நடு இரவிலோ, விடியற்காலையிலோ வலி ஏற்படும்.
ஆனால் இரைப்பை புண் நோயாளிக்கு சாப்பிட்ட உடனேயே வலிக்க ஆரம்பிக்கும். இ;ந்த இரண்டு புண் உள்ளவர்களுக்கும் ரத்தக் கசிவு உண்டாகலாம், அடைப்பு உண்டாகலாம், ஓட்டை உண்டாகலாம். வேகஸ் என்ற நரம்புதான் மூளையிலிருந்து இரைப்பை வரை வந்து அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அறுவை சிகிச்சை மூலம் இந்த நரம்பை வெட்டிவிட்டால் அமிலம் சுரக்காது. அதெனால் குடல் புண்ணோ, இரைப்பை புண்ணோ உருவாகாது.
பித்தப்பை (Bile ):
பித்தப்பை கற்கள் உருவாகும் இடம் பித்தப்பைதான். இந்தக் கற்கள் பித்தப்பையின் எந்தப் பகுதிக்கு செல்கிறதோ அந்தப் பகுதியில் அடைப்பை உருவாக்கும். பித்தப்பையிலிருந்து பித்தக் கற்கள் நோய்த் தொற்றை உருவாக்கலாம். பித்தப்பையிலிருந்து நீர் வெளியே செல்லுமிடத்தில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலையை உருவாக்கலாம்.
கற்களின் இடுக்கு ஓரங்களிலெல்லாம் பாக்டீரியா உருவாக வாய்ப்பு இருப்பதால் பித்தப்பையில் பித்த நாளங்களில் திரும்பத் திரும்ப நோய்த்தொற்று ஏற்படும். இதற்கு ரெக்கண்ட் கோலான்ஜைடிஸ் என்று சொல்லப்படும். பித்தக் கற்களால் ஏற்பட்ட அடைப்பால், பித்த நீர் நாளங்கள் வழியாக சீராக சென்று ரத்தத்தில் கலக்க முடியாமல் போகும்போது அப்ஸ்ட்ரக்டிவ் டைப் மஞ்சள் காமாலை உருவாகும். இப்படி அடைப்பினால் உருவான மஞ்சள் காமாலை தானாகச் சரியாகாது. அடைப்பை நீக்கினால்தான் சரியாகும்.பித்தக் குழாயிலிருந்து பித்த நீர் சிறுகுடலில் சேருமிடத்தில் பெரிய பித்த கற்கள் உருவாகி அங்கும் அடைப்பு ஏற்படலாம். இந்த நிலைக்கு கால் ஸ்டோன் இலியஸ்(Gallstone illieus ) எனப் பெயர். இப்படி பித்த கற்களால் பித்தப்பையில், பித்த நாளங்களில், ஈரலில், சிறு குடலில் பாதிப்பு ஏற்படுகிறது.
பித்தப்பையின் சுவரில் பாலிப் என்ற குடல் நீட்சிகளின் வளர்ச்சி அதிகமாவது கண்டறிந்தவுடனேயே அறுவை சிகிச்சை மூலம் உடனே பித்தப்பையை நீக்கி விட வேண்டும். இந்த நீட்சிகளின் வளர்ச்சியால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
பித்தப்பையின் சுவர் முழுவதிலும் ஒரு மெல்லிய கால்சியம் படிந்த மடிப்பு உருவாகும். இதைப் போர்ஸிலியன் கால் ப்ளாடர்(Porcelain Gall Bladder ) என்று பெயர்.
இந்த மடிப்பு உருவானால் உடனே பித்தப்பையை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் ஒன்று அது புற்று நோயாக மாறும் வாய்ப்புண்டு. அடுத்து தொற்று உருவானால் மிகத் தீவிரமான பாதிப்பு ஏற்படும்.
பித்தப்பையை நீக்கிவிட்டால் அதிலிருந்து பித்த நீர் சுரக்காது. அதனால் ஜீரணம் நடைபெறாது என்று பலர் தவறாக எண்ணி பயப்படுகிறார்கள். பித்தநீரை கல்லீரல் 800சி.சிலி ருந்து 1000 சி.சி. வரை சுரக்கின்றது.பித்தப்பையில் 30-40சி.சி. வரையிலும் சேமிக்கப்படுகிறது.இதனால் தேவைக்கு அதிகமான 30-40 சி.சி. அளவு சேமிக்கப்படும் பித்தப்பையை நீக்குவதால் ஜீரண மண்டலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நிமூபணமாகியுள்ளது.
சரியாக விரிந்து சுருங்க முடியாத பித்தப்பையில்தான் பித்தக் கற்கள் உருவாகின்றன. அதனால் சரியாக வேலை செய்யாத நிலையில் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சுரக்கவே சுரக்காது. வேலை செய்யாத பழுது பட்ட பித்ப்பையினால் ஜீரணத்திற்கு எந்தப் பயனும் இல்லை. அதனால் எதிர்மறை பாதிப்புதான் நேரிடும் என்பதால் பழுதுபட்ட நிலையில் அதை வைத்துக் கொள்வதை விட நீக்கிவிடுவதே நமது உடலுக்கு நல்லது.
மஞ்சள் காமாலை (Jaundice )
சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது, சாப்பாடு பிடிக்காமல் போவது, வாந்தி வருவது, மலம் களிமண் போன்று வெளியேறுவது, தோலில் அரிப்பு ஏற்படுவது, உடல் சோர்வு போன்றவைகள் மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள்.
இது போன்றவற்றைத் தவிர்க்க ஹெபடைடிஸ் ஏ போன்ற தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்ளலாம். ஹெபடைடிஸ் பி க்கும் தடுப்பூசி உண்டு. அதை 0, 1, 6 என மூன்று மாதங்களில் ஒரே தேதியில் போட்டுக் கொள்வது அவசியம்.
இதைத் தவிர மஞ்சள்காமாலை பித்தப்பைக் கற்களாலும் உருவாகலாம். கணையத்தில், பித்தப்பையில், பித்த நீர் சுரக்கும் நாளங்களில் என்று எதிலாவது புற்றுநோய் ஆரம்பித்திருந்தாலும் மஞ்சள் காமாலை வரலாம்.
ஹெபடைடிஸ் குரூப் மஞ்சள் காமாலையாக இருப்பின் மருந்தினால் சிகிச்சை அளிப்பதும், சத்துள்ள உணவை ஆகாரமாக கொடுப்பதும், பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கிருமியை அழிக்க மருந்து கொடுப்பதும்தான் உரிய சிகிச்சையாக அமையும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும்போது சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போவதற்கு காரணம் ரத்தத்தில் உள்ள பில்லிரூபின் என்கிற மஞ்சள் நிறமி அதிகமாவதுதான்.
ரத்தத்திலுள்ள அணுக்கள் எல்லாம் எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகின்றன. அந்த அணுக்களையெல்லாம் 120 நாட்கள்தான் உயிர் வாழும். அதற்குப் பிறகு அந்த அணுக்கள் மண்ணீரலில் உடைக்கப்பட்டு அழிகின்றன. அப்படி மண்ணீரலால் அணுக்ககள் உடைக்கப்படும்போது 'பில்லிரூபின்' என்ற பொருள் உருவாகிறது. அதன் பின் என்ஸைம், உப்பு சேர்ந்து ஈரலில் இணைந்த பில்லி ரூபினாக மாறுகிறது. பின் அது பித்த நாளங்களுக்குள் செல்கிறது.
பித்தக் குழாயிலிருந்து அந்த பில்லி ரூபின் சிறுககுடலுக்குள் இறங்கி செரிமானத்திற்கு உதவி அதாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டிலுள்ள கொடுப்பு மற்றும் சத்துக்களோடு சேர்ந்து மீண்டும் ஒரு பகுதி உறிஞ்சிக் கொள்ளப்பட்டு மற்றொரு பகுதி மனிதக் கழிவுடனும் வெளியேறுகறிது.
இந்த செய்முறைக்குப் பயன்படுவதுதான் இணைந்த பில்லிரூபின் (Conjugated Billrubin ) இந்த பில்லி ரூபின் அதிகமாகும் போது மஞ்சள் காமாலை வரும்.
ஒரு மனிதனுக்கு இருபத்தியோரு வயது வரை மட்டுமே சில தொற்று நோய்களைத் தவிர்க்க மண்ணீரலின் அவசியம் ஏற்படுகிறது. அதன்பிறகு அந்த உறுப்பை எடுத்து விடுவதால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.
ஈரலினால் உருவாகும் மஞ்சள்காமாலைக்கு 'ஹெபாடிக் ஜாண்டிஸ்' என்று பெயர்.
இணைந்த பில்லிரூபின் ஜுரணத்திற்காக பித்த நீரில் வரும் போது, அந்த பித்தக் குழாயில் தடை ஏற்பட்டிருந்தால் அப்ஸ்ட்ரக்டிவ் ஜானண்டிஸ் (Obstructive Jaundice ) உருவாகும்.
தடைகளினால் மஞசள்காமாலையை உருவாக்குபவை பித்தப்பை கற்களினால் ஏற்படும் அடைப்பும், பித்தப்பையில் ஏற்படும் புற்றுநோயினால் ஏற்படும் அடைப்பும்,பித்த குழாய் சிறுகுடலோடு இணையுமிடத்தில் உண்டாகும் புற்றுநோயால் அடைப்பும்,பொது பித்தக் குழாயில் புழு அடைத்துக் கொண்டாலும் தடை ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படும்.அடுத்து புற்று நோயினால் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படும்.
இதற்கு அறுவைசிகிச்சைதான் சிறந்த மருந்து. ஆகவே இந்த மஞ்சள்காமாலையை அறுவை சிகிச்சை மஞ்சள் காமாலை என்கிறார்கள்.
ஆகவே மஞ்சள் காமாலை என்னும் போது காரணத்தைக் கண்டுபித்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
கணைய அழற்சி(Pancreatitis )
சீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகளில் கணையமும் ஒன்று. கணையத்தில் சுரக்கும் நீர் தன் நிலை விட்டு வெளியே வந்து கசிந்தால் ஒரு வெடிகுண்டு போல வயிற்றுக்குள்வெடித்துச் சிதறும் அளவு ஆபத்தானது. இதனால் உடனடி மரணம் நிகழவும் வாய்ப்புண்டு.
பித்தப்பை, பித்த நாளங்களில் ஏற்படும் கற்களினாலும், மதுப்பழக்கத்தினாலும் கணையம் வீங்கி விடுகின்றது. அத்தோடு நீர்க்கசிவும் ஏற்படுகிறது. இதனை கணைய அழற்சி என்கிறோம்.
பித்த நீர் செல்லும் பாதையில் கல் அடைத்துக் கொள்ளும்போது, அது கணைய நீர் செல்ல விடாமல் கசிவை ஏற்படுத்தும். மேலும் கணையம் வீங்கவும் செய்யும்.ஸ்டிராய்டு போன்ற மருந்துகள், அதிக மருந்து மாத்திரைகளை உட்கொள்வது, சரியாக சமைக்கப்படாத உணவுகளின் மூலம் உடலுக்குள் செல்லும் உருண்டைப் புழு(Round worm ) போன்றவற்றினாலும் கணைய அழற்சி ஏற்படலாம். சிகிச்சைக்குத் தரப்படும் மருந்துகளால் ரத்த ஓட்டம் கணையத்திற்கு சரிவர செல்லாத நிலை இருந்தாலும் கணைய அழற்சி உருவாகிறது.
கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு, மூச்சு திணறல் என்று ஒருவித ஆபத்தான நிலையிலேயே இருப்பார்கள். அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல் நாட்பட்ட கணைய அழற்சி தோன்றியவர்கள் வயிற்றில் ஏற்படும் வலி முதுகுப்புறம் வரை பரவி பரவி செல்லும். இவர்களுக்கு இதிலிருந்து மீளு விப்பிள்ஸ் அறுவை சிகிச்சையும், பாங்க்ரியாடிக் ஜுஜூனோஸ்டமி என்ற அறுவை சிகிச்சை மூலம் சிறுகுடலோடு நேரடியாக நாளங்களை இணைத்தும் மற்றும் வலியை மூளைக்கு அறிவிக்கும் நரம்பை வெட்டி விடும் அறுவை சிகிச்சையினாலும் நோயாளியை நீண்டகாலம் வாழ வைக்கலாம்.
குடல் இறக்கம்(Hernia )
இடுப்புக்குக் கீழே சற்று வீக்கமும் வலியும் காலையில் எழுந்தால் வலியோ, வீக்கமோ இல்லாமலும் இருந்தால் இதை குடல் பிதுக்கம் என்று பெயர்.இது எந்த வயதினருக்கும் வரலாம். பிறந்த குழந்தைக்குக் கூட உருவாகலாம்.
பிறந்த குழந்தைகளில் பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் ஹெர்னியாவால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது விரைகள் வயிற்றின் பின் சுவர் பக்கத்தில் இருக்கும். பின் அது இங்குவினல் கேனால் எனப்படும் பாதை வழியே நகர்ந்து கீழிறங்கி விதைப்பைக்குள் சென்று சேரும்.
அதன் பின்னர் அந்தப் பாதை பெரும்பாலானவர்களுக்கு இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஆனால் வெகு சிலருக்கு பிறவியிலேயே அது மூடப்படாமல் இருக்கும்.
இந்தப் பாதை வழியாக குடல் இறங்கி வருவதற்குப் பெயர் தான் இங்குவினல் ஹெர்னியா. இதை மறைமுக குடல் இறக்கம் என்பார்கள்.
கடல் இறங்கி வரும் பாதைக்கு முன்புறமுள்ள வயிற்று மேலுள்ள தசைகள் வயதாவதால் பலவீனப்பட்டு வருவது நேரிடையான ஹெர்னியா.
ஆரம்பத்தில் குடல் வெளிவரும்போது சிறு துவாரத்தை விரித்துக் கொண்டு வருவதால் ஒரு மாதிரி வலிக்கும். துவாரம் பெரிதாகிவிட்டால் வலி போய்விடும். மாலை நேரத்தில் வீக்கமிருக்கும். படுத்துக் காலையில் எழுந்தால் வலி முழுவதுமாக மறைந்து விடும்.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வந்திருக்கும் ஹெர்னியாவைப் போக்கும் அறுவை சிகிச்சைக்கு ஹெர்னியோடமி என்பார்கள்.
ஒரு முறை அறுவை சிகிச்சை செய்த பிறகு பக்க தசைகள் பலவீனப்பட்டு தையல் விட்டுப் போனால் மீண்டும் ஹெர்னியா உருவாகலாம். இதற்குப் பெயர் ரெக்கரண்ட் ஹெர்னியா (Recurrent Hernia ).
நோயாளிகளின் நோய்க்குத் தகுந்தவலாறு சோதித்து அதற்குரிய சிகிச்சைகளை அளித்து குடல் இறக்கத்தை குணப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
வடுவில் குடல் இறக்கம் (Incisional Hernia )
குடல்வால், பித்தப்பை நீக்குதல், சிசேரியன், கர்ப்பப்பையை நீக்குதல் போன்ற வயிற்றைக் கிழித்து செய்யும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பலருக்கும் ஹெர்னியா உருவாகும் வாய்ப்பு உள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிழிந்த இடத்தில் தையல் போட்டு விட்டாலும் அந்த இடத்தின் வழியாக குடல் இறக்கம் வருவதை இன்சிஷனல் ஹெர்னியா என்று கூறுவர்.
பொதுவாக அறுவை சிகிச்சை செய்த ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் இந்த நிலை உண்டாகும். இதற்கு காரணம் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நோய் தொற்று ஏற்பட்டிருந்தால், உடலில் புரதச் சத்து குறைந்திருந்தால், ரத்தச் சோகையினால், அறுவை சிகிச்சைக்குப் பின் சரியான ஓய்வின்றி அளவுக்கதிகமாக உடற்பயிற்சி மற்றும் வேலைப் பளுவின் காரணமாகவும, அளவுக்கதிகமான உடல் பருமன், அறுவை சிகிச்சைக்குப் பின் சரியான பொருட்களை பயன்படுத்தி தையல் போடாமல்இருந்திருந்தால், தையலை தள்ளி தள்ளிபோட்டிருந்தால் இந்த குடல் இறக்கம் வரலாம்.
இதனால் குடல் அடைபடுவது அரிது. இதற்கு வயிற்று சுவர் வலிமையற்றுப் போவதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த வடுவில் குடல் இறக்கம் ஏற்படாமலிருக்க
1. உடல் பருமன் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. தீவிர இருமலுக்கு உடனடி சிகிச்சை பெறுவது நல்லது.
3. மலச்சிக்கலைத் தவிருங்கள்.
4. சிறுநீர் கழிக்க சிரமப்பட்டால் சிகிச்சைக்கு செல்லுங்கள்.
5. அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவதை தவிருங்கள்.
6. புகைபிடிப்பதை தவிருங்கள்.
7. அடிக்கடி கருத்தரிக்கும் வாய்ப்பைத் தவிருங்கள்.
குடல்வால் வீக்கம் (Appendix-Appendicitis )
சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில் இரண்டு அங்குல நீளத்துக்கு இது உள்ளது. ஏழு முதல் பத்து செ.மீ. அளவுள்ள இதன் துவாரமும் மிகச் சிறியது. திடீரென ஏற்படும் அழற்சி, நாட்பட்ட அழற்சி என குடல்வால் வீக்கம் இரண்டு வகைப்படும். இதுமட்டுமின்றி இரண்டுக்கும் நடுவே கீழ்பட்ட நெடுநாள் அழற்சி என்பதும் உண்டு.
குடல்வாலில் உணவுப் பொருள் போய் அடைத்துக் கொள்ளும்போது அதன் வாய் மூடிக் கொண்டு ஒரு பை போல ஆகிறது. இதனால் குல்வாலுக்குள் பாக்டீரியாக்கள் பெருகிகின்றன. இதனால் குடல்வாலின் உட்சுவரும் அதை ஒட்டிய பகுதியும் வீங்கி பாதிக்கப்படுகிறது. சில சமயம் இதில் மல இறுக்கத்தினால் அடைப்பும் ஏற்படலாம். சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழக் கொட்டை, பழக்கத்தினால் கடித்து விழுங்கப்படும் நகம் போன்ற வேறெந்த அந்நியப் பொருளும் அடைப்பை ஏற்படுத்தலாம்.
சிறுகுடல் பெருங்குடல் சேருமிடத்தில் குடல்வால் இருக்கிறது. அதன் சுவரில் நெறித்திசுக்கள் (Lymphatic Tissues ) அதிகமாக இருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தினால் சிறுகுடலின் இறுதிப் பகுதியிலோ, பெருங்குடலின் தொடக்கத்திலோ பாக்டீரியாக்களினால் பாதிப்பு ஏற்படுமானால் உடனடியாக குடல் வாலிலுள்ள நெறித் திசுக்கள் வீங்கும்.
இந்த வீக்கத்தினால் குடல் வாலில் அடைப்பு ஏற்பட்டு அழற்சி உண்டாகிறது. குடல் வாலில் ஜீரணிக்கப்பட்ட உணவு திரவ நிலையில் வருவதனால் பெரும்பாலும் அடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் இன்று ஜங்க் ஃபுட் எனப்படும் கேக், ஜாம், மாமிசம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், சாக்லெட் போன்றவைகளில் செல்லுலோஸ் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கும். இதனால் உணவுப் பொருள்களுடன் உறிஞ்சப்படும் நீரின் அளவு குறைந்து மலம் இறுகி கடினமாகிறது. இப்படி இறுகிய மலம் பெருங்குடலிலேயே அதிகநாள் தங்கும்போது ஒரு கல் போன்று காணப்படும். இதை மலக்கல் (Faecolitn )என்பார்கள். இந்த மலக்கல் குடல்வாலின் வாய்ப் பகுதி பக்கம் செல்லும்போது அதை மூடி போட்டு அடைப்பது போல அடைத்து வீங்கச் செய்து விடுகிறது. சீரை, காய்கறி, சலட், பழவகைகளில்இந்த செல்லுலோஸ் அதிகமிருக்கிறது. அதனால் இது உணவுப் பொருளுடன் நீரையும் அதிக அளவில் உறிஞ்சுp மலத்தை இளகச் செய்து மிருதுவாக்குகிறது. இதனால் மலத்தின் அளவும் அதிகமாகிறது.
இந்த நோய் உருவாகியதும் தோன்றக் கூடிய அறிகுறிகள்: அடிவயிற்றில் தொப்புளிலிருந்து பொறுக்கமுடியாத வலி ஏற்பட்டு அந்த வலி வலது புறமாக கீழ்நோக்கி நகரும். வலி ஏற்படும்போது வாந்தி, பசியின்மை ஏற்படும். மிக மோசமான நிலையில் உடனடி அறுவை சிகிச்சை செய்யாவிடின் இறக்கவும் நேரிடலாம்.
ஒருமுறை அறுவை சிகிச்சை செய்தபின் அப்பெண்டிசைடிஸ் திரும்ப வராது. ஏனென்றால் அதை வெட்டி அப்புறப்படுத்தி தான் சிகிச்சையே நடைபெறுகிறது.
மலச்சிக்கல் (Constipation )
பொதுவாக சுற்றுப்புறச் சூழல், உணவு பழக்க வழக்கங்கள், எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் எல்லாம் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் நார்ச்சத்து இல்லாத உணவு வகைகளான பர்கர், பிட்ஸா, நூடுல்ஸ் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது குடலில் பைகள் போன்ற தசைகள் தடித்து வளர்ந்து இருக்கும். இதில் கழிவுப் பொருள் சென்று தேங்கிக் கொள்வதால் அடைப்பும் ஏற்படலாம். சில சமயங்களில் ஓட்டையும் விழலாம். இதனை 'டைவர்டிகுலர் நோய்' என்பர்.
இந்த டைவர்டிகுலர் பிரச்சனையினால் மலச்சிக்கல் உண்டாகாது. ஆனால் மலச்சிக்கலினால் டைவர்டிகுலர் பிரச்சனை உண்டாகும்.
மலச்சிக்கல் இருந்தால் அவசரப்படாமல் கழிவிடத்தில் பொறுமையாக அமர்ந்து மலம் கழிக்க முயற்சிக்க வேண்டும்.நிறைய தண்ணீர், பழரசங்கள், நார்ச்சத்துள்ள ஆகாரங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் என்று சேர்த்துக் கொள்வது இப்பிரச்சனையை குறைக்கும் அல்லது தவிர்க்கும் வழிமுறை.
அசைவப் பிரியர்கள் அதனுடன் காய்கறிகள், சாம் போன்றவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் கொழுப்புச் சத்தும், புரேட்டீன் சத்தும் சேருமளவு உடலுக்கு நார்ச்சத்து கிடைப்பதில்லை. நார்ச்சத்து கிடைக்காததினால் வெளியேறும் மலத்தின் அளவும் குறைகிறது. இதனால் வயிற்றுத் தசைகள் அசைவும் குறைந்து போகிறது. மேலும் பெருங்குடலின் அசைவு மெதுவாக இருப்பதாலும், மலம் வெளியேறும் கேஸ்ட்ரோ காலிக் ரிஃப்ளெக்ஸ் இல்லாமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
வயதாக வயதாக பெருங்குடலின் சுவரிலுள்ள தசைகள் பலவீனப்படும். அந்தத் தசைகளோடு இணைந்திருக்கும் நரம்புகளும் தளர்ச்சியடையும். பெருங்குடலின் சுவரை ஒட்டியுள்ள தசைகளுக்கு வேலை செய்யும் வேகம் இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும். இப்படி வயதாவதினால் வரும் மலச் சிக்கலுக்கு சினைல் மலச்சிக்கல் என்று பெயர்.
இளம்வயதினர்களுக்கு கூட மலச்சிக்கல் வருவதுண்டு. அதேபோல் பெருங்குடல் புற்றுநோய் வந்தால் தசையை சுருக்கிப் பிடித்துக் கொள்ளும்.அப்பொழுதும் மலம் வெளியேறாமல் மலச்சிக்கல் உருவாகும்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், கீரை, பழம் இவற்றை சாப்பிட பழக்கப்படுத்திக் கொள்வதுதான் மிகப் புத்திசாலித்தனம். அப்படி சாப்பிட இயலாதவர்கள் காய்கறிகளிலும், பழங்களிலும் இருக்கும் நார்ச்சகத்தை மட்டும் கடைந்தெடுத்து மாவாக்கி பவுடர் வடிவில் வருகிறது. அதை டாக்டரின் சிபாரிசுடன் எடுத்துக் கொள்வது நல்லது. இது புண்ணாக்குதான். டப்பாக்களில் கிடைக்கும். இதைச் சாப்பிடும்போது பெருங்குடல் சுவர் இதை உறிஞ்ச முடியாது. அதனால் இந்த ஹஸ்க்கினால் நீரை நன்றாக இழுத்துக் கொள்ள முடிகிறது. இதனால் கெட்டியான இறுகிப்போன மலத்தை கூட இது அடித்து வெளியில் கொண்டு வந்து விடும்.இத்துடன் சர்க்கரைiயும் சேர்த்து வெளியேற்றும். எனவே சர்க்கரை வியாதிக்காரர்களு;கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். ஹஸ்க் சாப்பிடுவதை நிறுத்தினாலும் மலம் வெளியேறுவதில் பிரச்சனை இருக்காது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கொழுப்பைச் சேர்த்து வெளியேற்றுவது இதனால் சாத்தியமாகும். இது மண் மாதிரி இருக்கம். இதை தண்ணீரில் கரைத்து கூழ்போல் ஆக்கி சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மலச்சிக்கலுக்கு மற்றொரு காரணமாக பெருங்குடல் புண் விளங்குகிறது. இந்தப் புண் இருப்பதால் தசை இறுக்கமாக இருக்கும். இதனால் மலம் இறுகிப் போய் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறும்போது சிறிது ரத்தக் கசிவு கூட இருக்கும். மலச் சிக்கலுக்கான காரணத்தை தெரிந்து கொண்டால் சிக்கலுக்கு விடை கொடுத்துவிடால்.
வயிற்று சங்கடம்.
சாப்பிட்ட உடனே மலம் கழிக்கணும் என்ற உணர்வு வந்து மலம் கழிக்கச் சென்றால் காத்து போகுதே ஒழிய மலம் வெளிவராது. வயிறு உப்பிசமானது மாதிரியும் இருக்கும்.
சிறுகுடலில், பெருங்குடலில் உள்ள தசைகளின் அளவு அல்லது அசைவின்மை என்ற இந்த இரண்டு காரணங்களினாலும் இப்பிரச்சனை உருவாகிறது. வயிறு உப்புசம், காற்று வெளியேறுவது, மலச் சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகளும் இதனால் ஏற்படும். ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு எழும். வயிற்றை சுருட்டி இழுத்துப் பிடிக்கும். உணர்வும் உருவாகும்.
இந்தப் பிரச்சனைகளை சட்டென்று நிறுத்த முடியாது. நன்கு பரிசோதித்து பிறகு மருந்து சாப்பிட வேண்டும். இது உயிருக்கு ஆபத்தான விசயமல்ல. வயிற்றுக்கு பிரச்சனை உண்டாக்கும் பண்டங்களை ஒதுக்குவதுதான் நல்லது.
வயிற்று அசௌகரியப் பிரச்சனை உள்ளவர்களுக்கு அது மலச் சிக்கலாக இருந்தாலும், வயிற்றுப் போக்காக இருந்தாலும் வயிற்றில் மலமிருக்கும் வரைதான் வலியும் சங்கடமும் இருக்கும். அது வெளியேறிவிட்டால் வலி நீங்கி நிம்மதி பெருமூச்சு விடலாம்.இதுதான் இந்த நோய்க்கான அறிகுறி.மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு மலம் மிக இறுகி புழுக்கை வடிவில் வெளியேறுமே ஒழிய ரத்தம் கசியாது.
மேற்கூறிய வயிற்று அசௌகரியங்கள் உள்ளவர்கள் நார்ச்சத்து அடங்கிய பவுடர், ஸிரப் போன்ற மருந்துகளை பல வருடங்கள் தொடர்ந்து எடுக்க வேண்டும்.
ஒட்டுதல்கள் (Adhesion )
வயிற்று சம்பந்தப்பட்ட பகுதியில் செய்யப்படும் எந்தவித அறுவை சிகிச்சையாக இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் புண் ஆறும்போது, உடலில் இரைப்பையை ஒட்டி இருக்கும் ஓமெண்டம் என்கிற கொழுப்புப் பொருள் அறுவை சிகிச்சை செய்த தழும்பின் உட்பக்கத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். சிலசமயம் சிறுகுடல், பெருங்குடல்களுக்கிடையேகூட இந்த ஓமெண்டம் ஒட்டிக் கொள்ளும். குடலில் ஓட்டை உருவாவது, சீழ் வடிவது போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த ஒட்டுதல் உருவாவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக இந்த ஒட்டுதல் ஏற்பட்டதற்கான அறிகுறி வெளியே தெரியாது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ஒட்டுதல் ஏற்பட்டிருப்பதனால் உண்டாகும் வலி தெரியும். வயிற்றுக்குள் காரணமில்லாமல் வலிக்கும். சிறுகுடல் ஒட்டுதல் மோசமாக இருந்தால் சுருட்டிக் கொண்டு இருப்பது போல வலி உணர்வார்கள். வயிறு உப்பிக் கொள்ளும். மலம் கழிப்பது கஷ்டமாக இருக்கும். வாந்தி வரும். இந்த மாதிரி அறிகுறிகள் ஏற்படும்போது உடனே மருத்துவரை அணுக வேண்டும். இதனால் உயிருக்கு ஆபத்தில்லை. ஒட்டுதலை நீக்கினாலே வலி நின்றுவிடும். இதை முற்றவிட்டால் குணப்படுத்துவது மிகவும் கஷ்டம்.
ஒட்டுதலை சுலபமாக லாபராஸ்கோபிக் மூலம் நீக்கிவிடலாம்.
மூலம் (Piles )
ஆசனவாயின் அருகில் உள்ள ரத்தக் குழாய்கள் வீங்கி விடுவதினால் மலம் வெளிவரும்போது ரத்தக் கசிவு இருக்கும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு வயதுவரையரையின்றி ஆண்-பெண் பேதமின்றி மூலநோய் ஏற்பட்டுவிடும். மலத்தில் சிவப்பு நிறத்தில் ரதடதம் போவது ஒன்றுதான் இதன் அடையாளம். தொடக்க நிலையில் வலி இருக்காது. முற்றின நிலையில் ஆசனவாயே வெளியே தொங்கும் உணர்வுடன் வலி ஏற்படும். அப்படியின்றி கருஞ்சிவப்பு நிறத்திலோ அல்லது கருமையான நிறத்திலோ மலம் வெளியேறினால் அது மூலம் இல்லை.
இதன் ஆரம்பநிலையில் மருந்துகள் மூலமும், செலனோதெரபி, லேசர் இன்ஃப்ரா ரெட் மற்றும் ரப்பர் பேண்ட் லிகேஷன் (Rubber Band Ligation ) போன்றவைகள் மூலம் சிகிச்சை தர இயலும். முற்றிய நிலையில் லேசர் அறுவை சிகிச்சை நிரந்தரத் தீர்வைத் தரும்.நிறைய பேருக்கு மூல நோயுடன் பிஷர் என்கிற மற்றொரு உபாதையும் சேர்ந்து வந்து விடுகிறது. இதில் ரத்தக் கசிவுடன் ஆசனவாயின் கடைசிப் பகுதியில் வெடிப்பேற்பட்டு அரிப்பும் இருக்கும். மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்விருந்தாலும் ரத்தம், வலி, மலம் இறுகிப் போவதினால் எரிச்சல் எல்லாமுமாய் சேர்ந்து அசௌகரியத்தின் உச்சநிலை ஏற்படும். இதற்கு ஆசனவாயில் சிறிது பிளவை ஏற்படுத்தி செய்யும் சிகிச்சைதான் பலனளிக்கும்.
மூலத்திற்கு நான்கு நிலைகள் உண்டு.
ஆரம்ப நிலை மூலத்தின் போது மலம் வெளியேறும்போது ரத்தத் துளிகள் சிதறல்களாக வெளிப்படும். அடுத்த நிலையில் மலம் வெளியேறும்போது ஆசனவாயிலிருந்து சதை கொஞ்சம் வெளியே வரும். இந்த நிலையிலும் நோயாளியின் சதையை உள்ளே திரும் தள்ள முடியும். மூன்றாவது நிலையில் ஆசன வாயிலிருந்து வெளியே வரும் சதையை திரும்ப உள்ளுக்கு தள்ளவே முடியாது. நான்காவது நிலைதான் சிக்கல்கள் உருவாகும் நிலை. அந்த நிலையில் ஆசனவாய்க்கு வெளியே வரும் சதை அழுகிய நிலையில் இருக்கும். வெளியே வந்து சதை தொங்கும் நிலையை புரோலாப்ஸ் என்று சொல்வார்கள்;. ரத்தம் வராமல் சதை அழுகியுள்ள நிலையை நெக்ரோஸிஸ் என்று சொல்வார்கள்.
பெருங்குடல் புற்றுநோய், குடல் நீட்சிகள், குடல் புண், காசநோய் ஆகியவற்றுக்கும் கூட மூலம் ஒரு அறிகுறியாக தென்படும்.
மூலம் இருக்கும் அத்தனைப் பேருக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. சிக்கலுக்கேற்ப அறிகுறிகள் தென்படுபவர்களுக்கே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
புற்று நோய் (cancer)
ஜீரண மண்டலத்தில் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், கணையம், பெருங்குடல் ஆகிய உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோய் பற்றிய விபரங்களை இங்கு பார்ப்போம்.
1. உணவுக் குழாய் புற்றுநோய்:
எந்த ஒரு நபருக்காவது நாற்பத்தைந்து வயதுக்கு மேல் உணவை விழுங்குவதில் கஷ்டம் இருக்குமானால், நெஞ்சில் அடைப்பு, ஏப்பம், பசியின்மை, அஜீரணம், எடைக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தங்கள் உணவுக் குழாயில் புற்றுநோய் இருக்கிறதா? என்று பரிசோதித்துக் கொள்வது நல்லது.இந்தப் புற்றுநோய் யாருக்கு அதிகம் வருகிறது என்றால், கருகலாக பொறித்த, வறுத்தெடுத்த உணவை உண்பவர்களின் உணவுக்குழாயில் இந்தக் கருகல் ஹைட்ரோ கார்பன் ரசாயனமாக மாறி படிந்து விடுகிறது. இந்தப்படிவு தசைகளின் செல்களில் மறுவிளைவை உண்டாக்கும்போது செல்கள் பன்மடங்காகத் தேவையின்றி பெருகிப் புற்றுநோயை உண்டாக்குகிறது.
இரண்டாவதாக மது மற்றும் புகையிலையைப் பயன்படுத்துவர்களுக்கும் இந்த நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம். ரத்த சோகையோடு உணவு விழுங்க முடியாத நிலை, உணவுக் குழாய் அடிப்பகுதியில் பிறவியிலேயே சுருக்கம்(Oesophageal Web ), இரைப்பை ஏற்றம் ஆகியவை இப்புற்றுநோயை உண்டாக்கலாம்.
ஊட்டச் சத்துக்களான தாதுப் பொருட்கள் பற்றாக்குறை, உயிர்ச்சத்து குறைவு, பல் மற்றும் வாய் சுத்தமின்மை, டீ முதலிய பானங்களை மிகச் சூடாக அருந்துதல் ஆகியவை உணவுக் குழாய் புற்று நோய் உண்டாகக் காரணங்களாக அமைகின்றன.
வழிவழியாக வரும் பரம்பரை வியாதியான 'டைலோசிஸ்'(Tylosis ) உள்ளவர்களுக்கும் இப்புற்றுநோய் உண்டாகலாம்.
எண்டோஸ்கோப்பி மூலம் இந்த நோயின் பிரச்சனையைக் கண்டுபிடித்து உணவு விழுங்குவதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பதும், அறுவை சிகிச்சை மூலமாக விழுங்கிய பொருள் உள்ளே செல்ல குழாய் மூலம் உணவுக்குழாயையே செயற்கையாக உருவாக்கிக் கொடுப்பதும், ஆரம்பநிலையில் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்பதும் நவீன சிகிச்சையால் சாத்தியமே!
2. இரைப்பை புற்றுநோய்:
வயிற்று வலிபோல் ஆரம்பித்து, இரைப்பை புண்ணாக மாறி, நாள்பட்ட புண்ணாகக் கவனிக்கப்படாமல் இருந்து அது இரைப்பை புற்று நோயாக மாறுகிறது.
உலோகத் தொழிலில் ஈடுபடுபவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி வேலையில் ஈடுபடுபவர்களுக்கெல்லாம் இரைப்பை புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. உருளைக் கிழங்கு போன்ற மாவுச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதாலும் இந்நோய் வர வாய்ப்பு அதிகம்.
ஹைச்-பைலோரி கிருமியும் இரைப்பை புற்றுநோயை உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேல் இரைப்பையில் பாக்டீரியாக்களைக் கொல்லும் அமிலத்தின் வீரியம் குறைந்து இரைப்பையின் சவ்வுப் படலத்தில் பாக்டீரியாக்கள் வாழ ஆரம்பித்து விடுகின்றன. இதனால் இரைப்பைக்குள் வரும் உணவோடு இந்த பாக்டீரியாக்கள் எதிர்வினை புரிந்து புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய வேதிப்பொருளாக உணவினை மாற்றிவிடும்.
நாம் உண்ணும் உணவிலுள்ள நைட்ரேட்டை இரைப்பையிலுள்ள ரிக்டோஸ் என்ற நொதிப்பொருள் 'ரைட்ரேட்டாக' மாற்றுகிறது. இந்த நொதிப்பொருள் குறைவதாலும் புற்று நோய் உருவாகும்.
இரைப்பையில் எந்த மேஜர் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் புற்றுநோய் உருவாக வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, கேஸ்ட்ரோ ஜுஜூனாஸ்டோமி என்ற அறுவை சிகிச்சையை செய்யும் பொழுது இரைப்பைக்கும் சிறுகுடலுக்கும் இடையில் இணைப்புக் குழாய் பொருத்துவார்கள். இதனால் சிறுகுடலில் இருக்கும் பித்தம் கொஞ்ச நேரம் இரைப்பையின் சுவரில் தங்கி இருந்து, பின்தான் வெளியேற்றப்படும். அப்படி தங்கியிருக்கும்போது இந்த பித்தமானது இரைப்பையின் உள் சுவரின் சவ்வுப் படலத்தில் திரும்பத் திரும்பப் பட்டு அங்கிருக்கும் மியூகோசாவைப் புற்றுநோயாக மாற்றுகிறது.
இரைப்பையின் உள் சுவரில் காணப்படும் பாலிப்ஸ் எனப்படும் குடல் நீட்சிகள் புற்றுநோயாக மாறலாம். மெனிட்ரியர் (Menetrier ) எனப்படும் நோய் இரைப்பையின் உள் சுவரைத் தடித்துப் போகச்செய்வதாலும் இரைப்பை புற்று நோய் வரலாம். 'ஏ' குரூப் ரத்தம் உள்ளவாக்களுக்கு இந்த அணுவின் கார்போஹைடிரேட் தொடர் சங்கிலி இருப்பதால் இரைப்பை புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
நெஞ்சுக் குழியில் வலி, பசி இல்லாத உணர்வு, வயிறு உப்பிவிட்ட உணர்வு, வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வு, ஜீரணத்தில் கோளாறு போன்ற உணர்வு, வாந்தி, வயிற்றுப் புண், வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, பெருங்குடலில் அடைப்பு போன்றவை இரைப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக உள்ளன. பிரச்சனை முற்றும் வரை காத்திருக்காமல் நோய்க்கான துவக்கநிலை அறிகுறிகள் தோன்றிய உடனேயே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. கல்லீரல் புற்று நோய்:
கல்லீரலில் ஆனானப்பட்ட கல்லீரலில் மறுவிளைவு ஏற்படுத்துகிற ரசாயனப்பொருளோ, வைரஸோ தாக்கும்போது செல்கள் அழியும். பின் மீண்டும் உருவாகும்போது ஏதேனும் ஒரு செல் நோய் செல்லாக மாறலாம்.
அதுமட்டுமின்றி, தொடர்ந்து மது அருந்துவதால் ஈரல் கெட்டுபோய் பின் அதன் செல்கள் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறும்போது நோய் செல் உருவாகலாம். அவை பிற்பாடு புற்றுநோயை உண்டாக்கலாம்.
இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் 'ஹிமோகுரோமோடோஸிஸ்' என்ற வேதிப்பொருள் தூண்டல் ஏற்பட்டும் ஈரல் புற்று நோய் வரலாம்.
வேர்க்கடலையை சில மாதங்கள் சரியாக பாதுகாக்காமல் வைத்திருக்கும்போது ஒருவகை காளான் அதில் உருவாகுகிறது. அது 'அஃப்ளாடாக்ஸின்' (Aflatoxin ) எனும் விஷத்தன்மையை உண்டாக்குகிறது. அந்த வேர்க்கடலையை உண்ணும்போது அது ஈரல் செல்களைத் தூண்டிவிட்டு, பன்மடங்காகப் பெருகச் செய்து ஈரல் புற்றுநோயை உண்டாக்குகிறது.
கர்பத்தடை மாத்திரைகளை நீண்ட நாள் பயன்படுத்துவதும், ஸ்டிராய்டு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதும், மதுப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்றவையும் கல்லீரல் புற்றுநோய் உருவாகக் காரணமாகின்றன.
வில்சன் நோய், ஹீமோகுரோமோடாஸிஸ் என்ற இரண்டு நோய்களிலும் வெளியேற வேண்டிய தாமிரச் சத்து, இரும்புச் சத்து வெளியேறாமல் ஈரலைத் தாக்குவதால் வீக்கம் உண்டாகி ஈரலில் புற்றுநோய் உருவாகிறது.
இந்தப் புற்றுநோய் வந்தால் கல்லீரல் வீங்கி இருக்கலாம். மேல் வயிற்றின் வலப்பக்கமாக தொட்டுப் பார்த்தால் அதை எளிதில் உணரலாம். பசி இருக்காது. அடிவயிறு நிரம்பி இருக்கும் உணர்வு இருக்கும். உடை குறைவு ஏற்படும். மஞ்சள் காமாலை நோயாகவும் இது வெளிப்படலாம். இதன்காரணமாக மலம் கறுப்பாக வெளியேறும். சிலசமயம் ரத்தவாந்தி ஏற்படும். உடல் களைப்பு, அடிக்கடி ஜுரம் வருவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
அறுவை சிகிச்சை செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நோயின் ஆரம்ப நிலையாக இருக்க வேண்டும்.
4. கணையப் புற்றுநோய்:
காற்றில் இருக்கும் மாசு இந்நோய் உருவாக முக்கிய காரணமாக அமைகிறது. தொடர்ந்த மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், அதிக காபி அருந்துவது, கொழுப்பு சத்து நிறைந்த உணவை தொடர்ந்து உண்பது இந்நோய் உருவாக காரணமாகின்றன.
கணைய புற்று வர வாய்ப்புள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் உண்டான இரு வருடங்களுக்குள் புற்றுநோய் ஏற்பட்டு விடுகின்றது.
கணையம் மூன்று பகுதிகளாக உள்ளது.
அதன் தலைப்பகுதயின் பின் பகுதியில்தான் பித்த நீர் குழாயம், கணைய நீர் குழாயும் சேர்ந்து சிறு குடலுக்குள் செல்லும் அதனால் கணையத்தின் புற்நோய் அதன் பின் பகுதியில் பரவும்போது பித்தநீர்குழாயிலும் பரவுகிறது.
கணையத்தின் தலைப்பகுதியில்தான் புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. வால்பகுதியில் புற்றுநோய் வர வாய்ப்பு குறைவுதான். கணையத்தின் எந்தப் பகுதியில் புற்றுநோய் இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் அறிகுறிகள் தோன்றுகின்றன.
தலைப்பகுதியில் புற்றுநோய் இருக்கும் போது பித்த நீர் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மஞ்சள் காமாலை வரும். கணையத்தின் வால் பகுதியில் புற்றுநோய் தோன்றினால் மண்ணீரலிலுள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மண்ணீரலில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும். கணையத்தின் புற்றுநோய் காரணமாக கணைய நீர் சுரப்பது குறைய நாளடைவில் கணைய அழற்சி உருவாகிறது.
அடிவயிற்றில் வலி, எடைக்குறைவு, மஞ்சள் காமாலை ஆகியவை கணையப் புற்றிற்கான அறிகுறிகளாக இருக்கின்றன.
5. பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோய்:
குடல் நீட்சிகள் இருந்தால் மலக்குடல் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது.அல்சரேட்டிவ் கொலிடிஸ் (Ulcerative Colitis ) எனப்படும் பெருங்குடல் சுவரில் புண் இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில் அப்பாவுக்கோ, அண்ணனுக்கோ பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோய் இருப்பின் அடுத்தவர்களுக்கும் வரவாய்ப்பிருக்கிறது.
பெருங்குடலில் பெரிய பகுதி மலக்குடல். பெருங்குடல் வயிற்றுக்கு அருகில் இருக்கும். மலக்குடல் மிகவும் கீழே இருக்கும். இந்த இரண்டிலும் புற்றுநோய் வரக் காரணங்கள் ஒன்றாய் இருக்கின்றன. புற்றுநோயால் மலம் வெளியேறாமல் அடைப்பு ஏறடபடும் அளவிற்கு அது போக கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகலாம்.
மலக்குடல்-பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்கள் அடைப்பு ஏற்படுவதற்கு முன் ஆரம்பநிலையிலேயே வந்தால் தகுந்த முறையில் சிகிச்சையை அளித்து நல்ல முறையில் அவர்களை நீண்ட நாள் வாழச் செய்ய முடியும்.
தொகுப்பு: குளம் ஜமால் முஹம்மது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…