Home செய்திகள் காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு

காஸீம் புலவர் அப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹு

காசிம் புலவர் ரலியல்லாஹூ தஆலா அன்ஹு அவர்களின் சரித்திரச் சுருக்கம் மற்றும் திருப்புகழ் சரித்திரம்

அஹ்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரகவி காஸிம் புலவர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்களின் திருப்புகழை தொடங்கிவைத்த சரித்திரம்

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வமிச வழியில் ஹஜ்ரத் செய்யிது அப்துல் காதிர் லெப்பை ஆலிம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனாக வரகவி காஸிம் புலவர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் வந்துதித்தார்கள்.

இளம்வயதிலேயே குர்ஆன் ஹதீஸ் கலைகளையும் மார்க்க சட்ட நுணுக்கங்களையும் தனது தந்தையிடமே கற்றறிந்து அறிஞராக திகழ்ந்தார்கள்

தமிழில் சிறந்த புலவராக திகழ்ந்த இவர்கள் திருவடிக் கவிராயர் எனும் ஆசிரியரிடம் தமிழ் கற்றார்கள். ஒரு நாள் ஆசிரியர் அருணகிரி நாதரின் திருப்புகழை பாடி பாடம் நடத்தும் போது இந்த திருப்புகழுக்கு இணையாக பாட யாராவது இருக்கிறார்களா?

“திருப்புகழுக்கு மறு புகழ் உலகில் எங்குமே கிடையாது. இதுபோன்று ஒரு திருப்புகழைப் படைக்க முடியமா?” என்று மாணவர்களை நோக்கி கேட்டார்.

காஸிம் புலவர் நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நான் பாடுகின்றேன் என்று கூறினார்கள் . சிறுவயதிலேயே சிறந்த ஒழுக்கமும் ஞானமும் நிறைந்து விளங்கிய அவர்களை திருப்புகழுக்கு மறுப்புகழ் ஏற்றி வரும்படி ஆசிரியர் கூறினார்

திருப்புகழை எழுத முடிவு செய்த அவர்களுக்கு அதை எப்படித் தொடங்குவது என்ற சிந்தனை ஏற்பட்டது.

இறைவனைத் தொழுது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியை வேண்டிக் கொண்டே இருந்தார்கள் .

காலம் கடந்து கொண்டே இருந்தது ஒருநாள் கவலையில் கண்ணயர்ந்த காசிம் புலவர் நாயகத்தின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்சி தந்து, ‘பகரும்’ என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கூறினார்கள். அவ்வளவுதான் கவிதை கொட்டத் தொடங்கியது அளவற்ற மகிழ்ச்சியடைந்த புலவர் நாயகம் நபிகள் நாயகத்தின் மீதே திருப்புகழை இசைக்கத் தொடங்கினார்கள்.

“பகரும் உருவிலி யருவிலி வெருவிலி சிறிதும் ஒருதலை பயிலிலி துயிலிலி பருவிணுனர்விலி துணையிலி யிணையிலி விரிவான பழைய சதுமறை முழுவது முணர்பவர் பசிய தமிழ்வளர் துறவற முளரெவருமை பரவ வரிதரி தொரு பொருடிருவுள – வருளாலே”…

முதல் பாடலை இப்படித் தொடங்கி எழுதிக் கொண்டிருந்தார்கள்
காலங்கள் சென்று கொண்டிருக்கின்றது
“வளமலிய பசியவிழ மடல்விரியும்” என்று தொடங்கும் (38-ம்) பாடலுக்கு வந்தபோது மக்கா நகரைக் குறிப்பிடும் ‘மக்கப் பதிக்கும் மக்கப் பதிக்கும்’ என்ற சொல்லை மட்டுமே திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தது அவர்களுடைய நாவு அவர்களுடைய சிந்தனை இன்னும் சிறப்பாக நபிகளை புகழ ஆசித்தது அவர்களின் கால்களோ தானாக நடக்கத் தொடங்கியது

காயல்பட்டணத்தின் தெற்கில் திருச்செந்துாருக்குச் செல்லும் வழியிலுள்ள காட்டு மகுதுாம் பள்ளி வரை சென்று அங்குள்ள பெரிய குளத்தில் தன்னை மறந்த நிலையில் மக்கப் பதிக்கும்… என பாடிக்கொண்டே அந்தக் குளத்தில் இறங்குகிறார்கள்.

கழுத்தளவுக்குத் தண்ணீர் சூழ்ந்தபோதும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் தோன்றி ’முயர் சொர்க்கப்பதிம்’ என்று கூற ‘மக்கப் பதிக்குமுயர் சொர்க்கப் பதிக்கும் இரசூலே’ என்று பாட தொடர்ந்தார்கள்.

கடைசியாக திருப்புகழை 141 பாடல்களுடன் நிறைவு செய்தார்கள்

ஆசிரியர் திருவடிக் கவிராயரிடம் திருப்புகழை ஒப்படைத்தார்கள். திரும்பத் திரும்ப அந்த சந்தக் கவிகளைப் பாடிப் பரவசமடைந்த ஆசிரியர் தனது மாணவரின் சிறப்பைப் பாராட்டி சாற்றுக்கவியும் பாடினார்…
“விண்மேல் கொடிகட்டித் தாவுநல் காசிம்புலவர் கொழுங்கவியே” என்று புகழ்ந்தார் .

இன்று வரை இத்திரு புகழுக்கு ஒப்பாக மற்றொரு பாடல்கள் பாடப் படவேயில்லை. காசிம் புலவர் நாயகம் திருப் புகழ் தவிர பல்வேறு பாடல்களை இயற்றி உள்ளார்கள். அதில் ஒன்று இன்னிசை

…போற்றுவரா ராத்மாவைப் பொறுப்பவராற் செய்தகுற்றந்
தேற்றுவராற் மனப்பீடை தெரித்திரநோய் பாவமற
மாற்றுவரார் வல்லோன்முன் மன்றாடிச் சொர்க்கபதி
ஆற்றுவரா ரும்மையல்லால் ஆலநபி யுல்லாவே…

இவர்களுடைய படைப்புகள் தமிழ் கவிதை காவிய சட்டங்களுக்கும் இசுலாமிய மார்க்க சட்ட வரை முறைகளுக்கும் முழுமையாக உட்பட்டதாக இருப்பதை மார்க்க அறிஞர்கள் வியந்து போற்றுகின்றனர்

கடினமாக நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது அதிலிருந்து மீண்டு வர நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொண்டு வேண்டினார்கள். உடல் நலம் பெற்றது

இறுதியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காட்சியை நேரில் கண்ட பிறகு வேறு எதையும் காண விரும்பவில்லை அதுவே கடைசி காட்சியாக இருக்கவேண்டும் என இறைவனிடம் வேண்டினார்கள் இறைவனும் அவர்களது வேண்டலை ஏற்றுக்கொண்டான்

வரகவி, அருள்கவி என பல சிறப்பு பெயர்களில் சான்றோர்களால் அழைக்கப்பட்டார்கள்

இவர்களது வாரிசான ஏழு தலைமுறையினரும் சிறந்த கவிஞர்களாக திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இவர்களின்
ஆறாவது தலைமுறை கவிஞர் செய்யிது அப்துர் ரஹ்மானதிருப்புகழழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்கள்
இவர்களின் மகனான (7 வது தலைமுறை வாரிசாக) வந்தவர்கள்தான் தற்காலத்தில் வாழ்ந்த பல தமிழ் பாடல்களை தந்த கவிஞர் எஸ்.எம்.பி. மஹ்மூது ஹுஸைன் மௌலானா ஆவார்கள்.

ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மயீன்

வரகவி காஸிம் புலவர் நாயகம் அவர்களின் மறைவு துல்கஃதா பிறை 12. ஹிஜ்ரி 1177 (கி.பி 1764 ) . குத்பா பெரிய பள்ளி மையவாடியில் அடங்கப்பட்டுள்ளார்கள்.

ஆண்டுதோறும் நினைவு கூறும் விதமாக துல்கஃதா பிறை 01 அன்று கொடி ஏற்றப்படுகின்றது தினமும் இரவு இஷா தொழுகைக்கு பிறகு அறிஞர்களால் மார்க்க உபன்யாசம் அதிகாலையில் சுபஹ் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் ஓதும் கத்முல் குர்ஆன் மஜ்லிஸ் பிறை 11 மாலையில் அஸர் தொழுகைக்குப் பிறகு மௌலித் மஜ்லிஸ் பிறை 12 மஃரிப் தொழுகைக்கு பிறகு திக்ர் ஸலவாத் நிறைவு பயான் மஜ்லிஸ் நடத்தப்படுகின்றது

இவர்களது ஆண் மக்கள் செய்யிது அப்துல் காதிர் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு மற்றும் சுல்தான் அப்பா ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்கள்.
சுல்தான் அப்பா ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு புறையூரில் அடங்கப்பட்டுள்ளார்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…